×

திரை விலகட்டும்! தெய்வம் தெரியட்டும்!

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன் : 23

அந்த ஆசிரமத்தில் அதிகாலை நேரத்தில் குருநாதர் முன்பு நின்ற படியே சீடன் கேட்டான். ‘குருவே! ‘மனிதன் மகானாக உயர்வது எப்படி ?’ என்று இன்று பாடம் நடத்துவதாக கூறியிருந்தீர்களே! இன்றைய பாடத்தைக் கேட்க எனக்கு மிகவும் ஆர்வமாக உள்ளது. எனவே விடியற் காலையிலேயே விழித்து, என் கடமைகளை எல்லாம் முடித்து விட்டேன். மற்றவர்கள் மூவரும்  இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஆசிரமத்தின் நான்கு சீடர்களில் நன்கு படிப்பவன் என்று அவன் பெயர் எடுத்திருந்தான். அதனால் குருவின் அன்பையும் அவன் பெற்றிருந்தான். இதன் காரணமாக ஆணவமும் அடுத்தவர்களை ஒரு பொருட்டாக மதிக்காத போக்கும் அவனிடம் அதிகரித்து வந்தன. ‘காலை எட்டு மணிக்குத்தானே அனைவரையும் பாடம் கேட்கவரச் சொல்லி இருக்கிறேன். நீயும் சிறிது நேரம் கூடுதலாக தூங்கி இருக்கலாமே! என்றான் குருநாதர்.

சீடனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ‘உதயத்திலேயே உறக்கம் கலைந்து அன்றாட கடமைகளைத் துவக்குவது நல்லது தானே! என்றான் சீடன். ‘நான் அதைக் குறிப்பிடவில்லை. நீயும் தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களைப் பற்றி அதிகாலையிலேயே குறை கூற மாட்டாய் அல்லவா!’  குருநாதர் பதில் அவனைக் குறுக வைத்தது. ஒவ்வொருவருக்கும் தன்னைப் பற்றிய சுய மதிப்பீடு தேவையான ஒன்றுதான். ஆனால் அதுவே அடுத்தவர்களை மதிக்காத போக்காக, ஆணவமாக மாறிவிட அனுமதித்து விடக் கூடாது. நான், எனது என்னும் தீய குணத்தை ஆரம்பத்திலேயே இனம் கண்டு அதை வேரும், வேரடி மண்ணுமாகக் களைந்தால்தான் மனிதன் மகானாக உயர முடியும்.

அதி அற்புதமாகப் பாடுகின்றார் அருணகிரிநாத சுவாமிகள். வாக்கிற்கு அருணகிரி’ என்று புலவர்களாலேயே போற்றிப் புகழப்பட்ட அவரின் திருப்புகழ்த் தொடர்.

‘எனது யானும் வேறு ஆசி
எவரும் யாதும் யானாமும்
இதய பாவனாதீகம் அருள் வாயே!

‘இறைவா! நான், எனது என்ற ஆணவப் போக்கு அடியோடு நீங்கி அனைத்தையும், அனைவரையும் ஒன்றாகக் கருதும் உயர்ந்த மனோ பாவத்தை எனக்கு அருள்க’ என்று வேலவனிடம் வேண்டுகிறார் அவர். நட்பு வட்டத்தினின்றும், உறவு வளையத்தினின்றும், ஏன் இந்த உலகத்தினின்றே ஒருவரை தனியாகப் பிரிக்க வல்லது அகந்தை என்ற தீயகுணம்.

ஆணவம், திமிர், செருக்கு, அகந்தை  என்றெல்லாம் பேசப்படும் இந்த அசுர குணம் மனிதர்களாக வாழ நினைக்கும் ஒவ்வொருவரும் தனக்குள் சற்றும் வளர விடாமல் ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டிய ஒன்று.

யான், எனது என்னும் செருக்கு அறுப்பான்
வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்.
- என்கின்றார் திருவள்ளுவர்.

இலக்கியச் சுவை ததும்ப, இனிய தமிழில் இறைவனின் இருப்பிடம் எது என்று பாடுகிறார் குமர குருபரர்.

‘அகந்தைக் கிழங்கை அகழ்ந்து எடுக்கும்
தொழும்பர் உளக் கோயிற்கு
ஏற்றும் விளக்கே!

‘என் செயல் ஆவது யாதொன்றுமில்லை! ‘எல்லாம் உன் செயலே என்று உணர்ந்து ஆணவத்திரையை அகற்றுபவர்கள் மட்டுமே ஆண்டவனைப் பரி பூரணமாகத் தரிசிக்க முடியும் என்கின்றனர் ஞானிகள்! நான் கல்வியிற் சிறந்தவன், செல்வ நிலையில் மேலாக விளங்குபவன், ஆட்சி அதிகாரத்தில் அளவிலா வல்லமை பெற்றவன், பலபேருக்கு வாழ்வு தருபவன் என்றெல்லாம் பலர் பலதுறையில் புகழ் பெற்றாலும் நான் என்னும் அகங்காரம் அவர்களுக்குள் வந்து விட்டால் அவர்களின் அழிவு காலம் அதனாலேயே தொடங்கிவிடுகிறது. ஒவ்வொருவனும் பெறும் சிறப்புக்கெல்லாம்  மூலகாரணம் மூல முதலாக விளங்குகின்ற இறைவனே! அவனருள் இருந்தால் ஒரு சிறு துரும்பும் சிகரத்தில் ஏறும்! இல்லையெனில் சிகரத்தில் இருந்தாலும் ஒருவன் சிறு துரும்பே! என்கின்றனர் பெரியவர்கள்.

பொம்மலாட்டத்தின் பொம்மைகள் கும்மாளம் இடுகின்றன. குதிக்கின்றன. ஆடுகின்றன. ஓடுகின்றன. படுக்கின்றன, பாய்கின்றன. எல்லாச் செயல்களும் எதுவரை?
அவற்றை இயக்குபவனின் தொடர்பு உள்ளவரை! ஆட்டுவிப்பவனின் கையில் உள்ள தொடர்பு நூல் அறுந்து விட்டால் அவ்வளவுதானே! எனவே பொம்மைகளாகிய நாம் உண்மையை உணர்ந்து அடக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டியது தானே அறிவுடைமை.

நல் நாரில் பூட்டிய சூத்திரப் பாவை நல் நார் தப்பினால்
தன்னாலும் ஆடிச் சலித்திடுமோ? அத்தன்மையைப் போல்
உன்னால் யானும் திரிவது அல்லால், மற்று உனைப் பிரிந்தால்
என்னால் இங்கு ஆவதுண்டோ ? இறைவா கச்சி ஏகம்பனே!

- என்று பட்டினத்தார் பாடுவதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் எண்ணிப்பார்த்தால் மனிதர்களாகிய நம் சிறுமையும், அனைத்திற்கும் ஆதிகர்த்தாவான ஆண்டவனின் பெருமையும் நம்மவர்களுக்கு விளங்கும்.     புராணக்கதை ஒன்றைப் புரிந்து கொள்ளலாமா?

மால் அறியா நான் முகனும் காணா மலை’ என்று திரு அண்ணாமலையை மாணிக்க வாசகர் கூறுகின்றார். அழற் பெரும் வடிவமாக சிவ பெருமான் ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையே விஸ்வரூபம் எடுத்து வெளிப்பட்ட போதிலும் பிரம்ம தேவராலும், திருமாலாலும் அவரின் அடிமுடியைக் காண முடியவில்லை. ஆனால், அப்பர் பெருமான் வெற்றி முழக்கத்தோடு வீறார்ந்து பாடுகின்றார்.

‘தேடிக் கண்டு கொண்டேன்!
திருமாலொடு நான் முகனும் தேடிக் காணெனா இறைவனை
என் உள்ளே தேடிக் கண்டு கொண்டேன்!

ஆராய்ச்சிக்கோ, ஆணவத்திற்கோ இறைவன் அகப்பட மாட்டார்! உள்ளார்ந்த பக்தி இருந்தால் உடனே காணலாம் என்பதையே அப்பரின் வாக்கு அறிவுறுத்துகிறது.
தாயுமானவர் பாடுகின்றார் :

அருளால் எதையும் பார் என்றான்! - அத்தை
அறியாதே கட்டி என் அறிவாலே பார்த்தேன்!
இருளான பொருள் உண்டதல்லால் - கண்ட
என்னையும் கண்டிலேன்! என்னேடி தோழி!

மால், அயன் இருவருக்கும் அண்ணாமலை ஜோதி மர்மமாக இருந்ததற்கு என்ன காரணம் என்பதற்கு வாரியார் சுவாமிகள் அற்புதமான விளக்கம் தருகின்றார்.
நான்முகன் அன்னப் பறவையாக மாறி ஆகாயத்தில் பறந்து இறைவனின் திருமுடியை நாடிச் சென்றார். திருமால் வராக அவதாரம் எடுத்து திருவடியைக் காண பாதாளம் நோக்கிச்
சென்றார்.

மேலோங்கி நிமிர்வது ராஜஸ குணம். கீழ்நோக்கிக் குனிவது தாமத குணம். இவ்விரு குணத்தாலும் இறைவனை அடைய முடியாது. சத்வ குணத்தால் மட்டுமே சுவாமியைக் காண முடியும். பணம் பாதாளம் வரை பாயும். அறிவு ஆள் உயரப் பறக்கும் என்பது அண்ணாமலையில் நிகழ்ந்த அடிமுடி தேடும் கதையையே குறிக்கின்றது. பணத்தின் அதிபதியான திருமகள் நாயகன் அடியைக் கண்டுவர பாதாளம் சென்றார். அதே போன்று சரஸ்வதியின் கணவரான அறிவின் அதிபதியான பிரம்மதேவர் அன்னமாக உருமாறி முடியைக் கண்டு வர ஆகாயத்தில் பறந்தார்.

செல்வத்தின் மிடுக்காலும், படிப்பின் முறுக்காலும் தேடினால் தெய்வம் தெரியாது. ஆணவத்திரை விலகினால் மட்டுமே ஆண்டவனைக் காண முடியும். அண்ணாமலை வரலாறு பயின்ற நம்மிடம் தலைக்கனம் இனியும் தலை நீட்டலாமா? படைப்புத் தொழிலைச் செய்பவர், சிருஷ்டி கர்த்தா என்ற பெருமையால் தலை நிமிர்ந்த பிரம்ம தேவருக்கு தலையில் முருகப் பெருமானின் பன்னிரண்டு கையாலும் குட்டு விழுந்ததின் காரணம் என்ன?

தலை நிமிரும் ஆணவம் கட்டயம் ஒருவனை தலை குனியச் செய்யும் என்பதைத்தானே! ‘அவன் அருளாலே அவன்தான் வணங்கி ’ என்கிறது சிவபுராணம். இறைவனை வணங்குவதற்கும் அந்த இறைவனின் இன்னருள் தேவை என பெரியவர்கள் குறிப்பிடும் போது இறுமாப்பு என்பதே இம்மியளவும் நம்மிடம் இருக்கக் கூடாது என்று தெளிவோம்.
நான் என்ற உணர்வு இல்லாதவர்கள் தான் நாயகனைக் காணும் பேறு பெற்றவர்கள்.

‘நான் காணா இடத்து அதனைக் காண்போம் என்று
நல்லோர்கள் நவில்கின்ற நலமே !’

என்று ஆண்டவனை அழைக்கின்றார் அருட்பிரகாச வள்ளலார். பிறப்பிற்கு முன் நாம் எங்கிருந்தோம்? இறப்பிற்குப் பின் எங்கு செல்லப்போகிறோம்? பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையில் எத்தனைமர்ம முடிச்சுக்கள்? ஏற்ற இறக்கங்கள்? நிராசைகள் நிறைவேறல்கள். எதற்குமே விடைகாண முடியாத மனிதனுக்கு ஆணவம் எப்படி வருகிறது என்று கேட்கிறது அருணகிரியாரின் திருப்புகழ்.

‘‘என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும்
என்னால் இருக்கவும் இங்கு நான் ஆர்?
‘நானார் ஒடுங்க நானார் வணங்க
நானார் மகிழ்ந்து உனை ஓத’

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று தெளிந்து, நம் கையில் எதுவும் இல்லை என்று உணர்ந்து, இறைவன் நம்பிக்கையில்  இணைவதே இணையற்றது.

திருப்புகழ்த்திலகம்  மதிவண்ணன்

(இனிக்கும்)

Tags : god ,
× RELATED தேவ ரகசியத்தை உடைக்கலாமா? : ஜோதிட ரகசியங்கள்