×

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சீர்கேடு: கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், சாணாபுத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட கொண்டமநல்லூர் கிராம மக்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் புகார் மனு அளித்தனர். அதில், `எங்கள் கிராமத்தில் இறால் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரால், எங்கள் கிராமத்தில் ஆழ்துளை கிணறுகளில் கலக்கிறது. இதனால் நீரின் தன்மையும், சுவையும் மாறுகிறது. இந்த தொழிற்சாலையால் எங்கள் கிராமத்தின் ஆரோக்கியமான வாழ்க்கை இல்லாமல்போனது. இரவு நேரங்களில் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். டெங்கு காய்ச்சல், கைகளில் சொறி போன்ற சுகாதாரக்கேடுகளும் ஏற்படுகிறது. மேலும், இந்த தொழிற்சாலைக்கு நாள்தோறும் 50 ஆயிரம் லிட்டர் நீர் ஆழ்துளை கிணறு மூலம் உறிஞ்சி பயன்படுத்த அனுமதி பெற்ற நிலையில், 80 ஆயிரம் லிட்டம் உறிஞ்சி வருகின்றனர். இதேபோல் இரண்டு ஷிப்டுகளில் அதிகமான அளவில் நீரை வீணாக்கி வருவதால் எங்கள் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படுகிறது. இதனால் மேய்ச்சல் நிலங்களும் பாழாகி வருவதால் ஆடு மாடு மேய்ச்சலுக்கு வசதியில்லாத நிலையும் உருவாகியுள்ளது.எனவே இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் வரும் துர்நாற்றத்தால் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியாத நிலையில் உள்ளோம். அதனால், இந்த தொழிற்சாலையானது அரசு விதிமுறைப்படி இயங்குகிறதா என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். பின்னர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் அவர்களிடம் ேபசி அனுப்பி வைத்தனர்….

The post கும்மிடிப்பூண்டி அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையால் சீர்கேடு: கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Thiruvallur ,Kondamanallur ,Kummidipoondi Panchayat Union ,Sanaputhur Panchayat ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...