×
Saravana Stores

தேவரா விமர்சனம்

செங்கடல் பகுதியில் இருக்கும் 4 மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் வறுமையை தனக்குச் சாதகமாக்கிய கடத்தல் தாதா முரளி சர்மா, அவர்களின் மூலமாக, நடுக்கடலில் பயணிக்கும் கப்பலில்இருக்கும் பொருட்களை கரைக்குக் கொண்டு வருகிறார். கடத்தப்படும் பொருட்கள் பற்றி எதுவும் தெரியாத தேவரா (ஜூனியர் என்டிஆர்) தலைமை யில், 4 கிராம மக்களும் செயல்படுகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் ஊரைச் சேர்ந்த பலர் வெடிகுண்டு விபத்து மற்றும் துப்பாக்கிச்சூட்டில் பலியாகின்றனர். இதற்குக் காரணம், அவர்கள் கடத்திய வெளிநாட்டு ஆயுதங்கள் என்பதையும், அதன்மூலமாக அப்பாவி மக்கள் கொல்லப்படுவதையும் அறிந்து துடிக்கும் ஜூனியர் என்டிஆர், ‘இனி கடத்தல் தொழிலில் ஈடுபட மாட்டோம்’ என்று முடிவு செய்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சைஃப் அலிகான், ஷைான் டாம் சாக்கோ, கலையரசன் கோஷ்டி, தேவராவை தீர்த்துக்கட்ட முயற்சி செய்கின்றனர்.

அப்போது தேவரா திடீரென்று காணாமல் போய் விடுகிறார் என்றாலும், கடத்தல்காரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவரும் அவர் உயிருடன் இருக்கிறாரா? பயந்த சுபாவம் கொண்ட அவருடைய மகன் வரா, தனது தந்தையைக் கண்டுபிடித்தாரா என்பது முதல் பாகத்தின் மீதி கதை. முற்பகுதியில் தந்தை தேவரா வேடத்தில், அதிரடி ஆக்‌ஷனில் கலக்கியுள்ளார் ஜூனியர் என்டிஆர். பிற்பகுதியில் அவரது மகன் வரா என்ற ஜூனியர் என்டிஆர், பயந்துகொண்டே நடித்துள்ளார்.

அதோடு, ஜான்வி கபூர் விரித்த காதல் வலையில் சிக்கித் தவிக் கிறார். தென்னிந்தியப் படவுலகில் அறிமுகமாகியுள்ள படம் என்றாலும், ஜான்வி கபூருக்கு நடிக்க வாய்ப்பு குறைவு. வில்லனாக உறுமும் சைஃப் அலிகான் மற்றும் தேவராவை படம் முழுக்க புகழும் பிரகாஷ்ராஜ், மேகா ஸ்ரீகாந்த், ஷைன் டாம் சாக்கோ, கலையரசன், நரேன், முரளி சர்மா ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.

பார்வையாளர்களை கையைப்பிடித்து அழைத்துச் சென்றிருக்கிறது, ஆர்.ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. ஆக்‌ஷன் மற்றும் நடனக்காட்சிகளில் கேமரா புகுந்து விளையாடி இருக்கிறது. அனிருத்தின் பின்னணி இசை மிகப்பெரிய பலம். பாடல்கள் கேட்கும் ரகம். கடற்பகுதி மக்களின் வாழ்க்கையை திரையில் ரத்தமும் சதையுமாகச் சொன்ன இயக்குனர் கொரட்டால சிவா, விஎஃப்எக்ஸ் காட்சிகளையே பெரிதும் நம்பியது மைனஸ். தெலுங்கு ரசிகர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட பல காட்சிகளில், லாஜிக் எங்கே என்ற கேள்வி எழுகிறது.

The post தேவரா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Red Sea ,Dada Murali Sharma ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காமெடி கதையில் விமல் யோகிபாபு