×

கருங்குளம் ஆற்றுப்பாலத்திற்கு வரும் கொங்கராயக்குறிச்சி – ஆறாம்பண்ணை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா?

செய்துங்கநல்லூர் : கருங்குளம் ஆற்றுப்பாலத்திற்கு வரும் கொங்கராயக்குறிச்சி – ஆறாம்பண்ணை சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டதால் வைகுண்டம் அருகே உள்ள கொங்கராயக்குறிச்சி, ஆறாம்பண்ணை, மணக்கரை, நடுவக்குறிச்சி, ஆழ்வார் கற்குளம் உள்ளிட்ட கிராம மக்கள், செய்துங்கநல்லூரில் உள்ள யூனியன் ஆபீஸ், வை. தாலுகா ஆபீஸ், தந்தி ஆபீஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வதற்காக இருசக்கர வாகனங்களில் கருங்குளம் வந்து பஸ் ஏறிச் செல்கின்றனர். இந்த கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லாத நிலையில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் கருங்குளம் வந்து எளிதாக திருச்செந்தூர் – நெல்லை இடையேயான பஸ் போக்குவரத்தை பயன்படுத்தி கொள்கின்றனர். இதன் காரணமாக கொங்கராயக்குறிச்சி – ஆறாம்பண்ணை சாலையில் இருசக்கர வாகன போக்குவரத்து அதிகரித்து உள்ளது. பஸ்சை பிடிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் வேகமாக செல்பவர்கள், ஆற்றுப்பால இணைப்பு சாலையில் திரும்பும்போது எதிரே வரும் வாகனத்தில் மோதி விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே கொங்கராயக்குறிச்சி – ஆறாம்பண்ணை சாலையில் கருங்குளம் பால சாலை சந்திக்கும் பகுதியில் 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டுமென ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இப்பகுதி கிராமங்களுக்கு போதிய பஸ் வசதியில்லை. எனவே கருங்குளத்தை பாலத்தை கடந்து சென்று பல்வேறு இடங்களுக்கு சென்று திரும்புகிறோம். இதன் காரணமாக கொங்கராயக்குறிச்சி – ஆறாம்பண்ணை சாலையில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இச்சாலையில் அரசு உயர்நிலைப்பள்ளியும் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் சைக்கிளில் வந்து செல்கின்றனர். பஸ்சை பிடிப்பதற்காக வேகமாக செல்லும்போது பால இணைப்பு சாலையில் திரும்பும் இடத்தில் சமீபகாலமாக விபத்துகள் தொடர் கதையாகின்றன. கனரக வாகனங்களும் போட்டிப்போட்டு செல்லத் துவங்கியுள்ளன.எனவே பெரிய அளவிலான அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் இப்பகுதியில் கொங்கராயக்குறிச்சி செல்லும் பகுதியிலும், ஆறாம்பண்ணை செல்லும் இடத்திலும், பால இணைப்பு சாலையிலும் வேகத்தடை அமைக்க வேண்டும். இதற்கு நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தின் இருபுறமும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தி வாகனங்களை போலீசார் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினர். …

The post கருங்குளம் ஆற்றுப்பாலத்திற்கு வரும் கொங்கராயக்குறிச்சி – ஆறாம்பண்ணை சாலையில் வேகத்தடை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Konkarayakurichi-Arampannai road ,Karunkulam river bridge ,Karinganallur ,Dinakaran ,
× RELATED கீழ வல்லநாட்டில் அரசு மாதிரி பள்ளி...