×

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் முத்துப்பல்லக்கு திருவிழா

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை  நாடியம்மன் கோயில்  பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கியது. கடந்த 2ம் தேதி வரை நாடியம்மன் மூலஸ்தானத்தில் எழுந்தருளி அன்றிரவு சிவிகாரோகண காட்சியுடன் பெரியகடை தெருவில் உள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளினார். கடந்த 2ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை காலை, மாலை வேளைகளில் நாடியம்மன் வீதியுலா நடந்தது. இதில் முக்கிய திருவிழாக்களான 7ம் தேதி நாடியம்பாள் சரஸ்வதி தரிசனத்திலும், அன்றிரவு இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் வரகரிசி மாலை போடும் நிகழ்ச்சி, நாடியம்பாள் செட்டித்தெருவுக்கு எழுந்தருளி அங்கு பதுமை பூப்போடும் நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி புஷ்ப பல்லக்கில் நவநீத சேவை, குதிரை வாகனத்தில் வெண்ணெய்தாழி குடத்துடன் வீதியுலா நடந்தது.

10ம் தேதி நாடியம்பாள் மூலஸ்தானத்துக்கு சென்று அன்றைய தினம் மாவிளக்கு திருவிழா நடந்தது. இதைதொடர்ந்து 11, 12ம் தேதிகளில் தேரோட்டம் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடியம்மன் மீனாட்சி அம்மன் தரிசனத்திலும், இரவில் முத்துப்பல்லக்கில் வீதியுலாவும் நடந்தது. கடந்த 13ம் தேதி இரவு துவங்கிய நாடியம்மனின் முத்துப்பல்லக்கு வீதியுலா மண்டகப்படியில் புறப்பட்டு வடசேரிரோடு, பிள்ளையார்கோயில் தெரு, பெரியதெரு, தலையாரிதெரு, தேரடித்தெரு, பெரியகடைத்தெரு, மார்க்கெட், சாமியார் மடம் வழியாக கோட்டை சிவன் கோயில் தெருவில் உள்ள சிவன் கோயிலை நேற்றுமுன்தினம் அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தரகள் பங்கேற்று நாடியம்மனை வழிபட்டு சென்றனர்.

Tags : festival ,Pattukottai Nadiamman ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!