×

சீதாராமன் திருவடி செம்மை வாழ்விற்கு முதற்படி

கற்பார் ராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ! என்பார் நம்மாழ்வார். திருமாலின் அவதாரங்களுள் சிறப்புடைய அவதாரம் ராம அவதாரம். தன்னை நேரில்லாத் தனிப்பொருள் தனியுருக் கொண்டு வரிவில் ஏந்தி கால் தரைதோய நின்று நம் கண்ணுக்குப் புலனாகி நின்ற  வடிவம்தான் ராம வடிவம்.  ஓர் இல், ஒரு வில், ஒரு சொல் என்று வாழ்ந்து காட்டிய நடையின் நின்றுயர் நாயகனாகிய ராமபிரானின் நாமத்தினைச் சொன்னால் என்ன பலன் கிடைக்கும் என்று கம்பர் விளக்கமாகக் கூறுவார். இந்த உலகத்தின்கண் வாழ்வதற்குச் செல்வம் வேண்டும் அல்லவா? அத்தகைய செல்வத்தையும் அச் செல்வத்தால் விளையும் நன்மையையும் ராம நாமம் தரும். திண்மையும் நாம் செய்த பாவங்களும் சிதைந்து தேய்ந்து இல்லாதொழியும். பிறவி என்னும் பெருந்துன்பமும் அதனால் விளைவதாகிய மரணமும் வாராதொழியும். இத்தகைய சிறப்புகளை எல்லாம் தரும் மந்திரம் சொல்லுதற்கரிய, சொல்ல இயலாத பெரிய கடினமான மந்திரமாம் எனில் அத்தகையதன்று.  இரண்டே எழுத்து நாமம் தான். அந்த இரண்டெழுத்து நாமம் தான் ராம என்பதாகும்.  ராம நாமத்தின் இத்தகைய பெருமையினைச் சொல்லும் பாடல்

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே  ராம என்று இரண்டு எழுத்தினால்

என்பதாம். இந்த உலகின்கண் வாழும் மாந்தர் மற்றைய தவங்கள் எதுவும் செய்தல் வேண்டாம். இலங்கை மன்னனாகிய  ராவணனை வென்ற ராமபிரானின் பாடல் ஒன்றினைக் கேட்டால் போதும். இந்த உலகில் அரசராய் இருந்து இனிது வாழ்வர். மேலும் இவ்வுலக வாழ்வினை நீத்து மேலுலகம் செல்லுமிடத்து பேரின்ப வீட்டில் இருந்து பெருமை பெறுவர். இதனை,  

மற்று ஒரு தவமும் வேண்டா மணிமதில் இலங்கை மூதூர்
செற்றவன் விசயப்பாடல் தெளிந்து அதில் ஒன்று தன்னைக்
கற்றவர் கேட்போர் நெஞ்சில் கருதுவோர் இவர்கள் பார்மேல்
உற்ற அரசு ஆள்வர் பின்னும் உம்பராய் வீட்டில் சேர்வர்

என்ற பாடல் விளக்கிடும். கபீர்தாசரின் பக்தர் பத்மபாதர் வாழ்வில் நிகழ்ந்த செயல் ஒன்றும் ராமநாமத்தின் பெருமையினை விளக்கிடும். பத்மபாதர் சகல சாத்திரங்களிலும் வல்லவர், ராமபிரான் மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் ஒருமுறை தொழுநோயாளி ஒருவரைச் சந்தித்தார். உடல் முழுவதும் புண்ணாகி ரத்தம் சொட்டச் சொட்ட நின்ற அவரை அவரது உறவினர்கள் கங்கைக் கரைக்குத் தூக்கி வந்தனர். எத்தகைய மருந்துவத்தினாலும் தனது நோய் குணம் ஆகாமை அறிந்த அந்த மனிதர் கங்கையில் விழுந்து உயிரை விடத் துணிந்தார். அவரது உடல் கங்கையில் அமிழ்ந்து போகும் பொருட்டு அவரது உறவினர்கள் அவரது கைகளிலும் கால்களிலும் கல்லைக் கட்டினர். அதனைக் கண்ட பத்மபாதர் செல்வம் தேடி உடலை வளர்ப்பதற்கான வசதிகள் எல்லாவற்றையும் தேடினாய்! ஆனால், ஆன்மாவின் நலனுக்காய் என்ன செய்தாய்! என வினவினார்.

அதற்கு அந்த மனிதர் கண்ணீர் வடித்தபடி பதில் கூறாது நின்றார். உடன் பத்மபாதர் கவலைப்படாதே!  ராமநாமத்தினை மூன்று முறை சொன்னால் நோய் நீங்கும் என்றார். அந்த மனிதரும்  ராமநாமத்தினைச் சொல்ல பிணி நீங்கியது. பத்மபாதரின் இத்தகைய செயலைக் கேள்வியுற்ற கபீர்தாசர் இச்சிறிய செயலுக்காகவா  ராமநாமத்தினை மூன்று முறை சொல்லச் சொன்னாய்! ஒருமுறை கூறினாலே அந்நாமம் பலஜென்மத்துப் பாவங்களைப் போக்கும் என்று கூறியருளினார். இத்தகைய சிறப்புடைய இராமநாமத்தின்  பெருமைகளை எல்லாம் உணர்ந்து சொல்லும் ராமாயணப்  பாத்திரங்களுள் குறிப்பிடத்தக்க பாத்திரம் விராதன் என்பது ஆகும். விராதன், ராமபிரானின் திருவடி பொய்யாகிய இவ் உலக வாழ்வு எல்லாம் நீங்கும் படி, தத்துவமாகிய ஞானத்தைத் தரவல்லது என்று போற்றிப் புகழ்கின்றான். அதனாலே,  

‘கள்ளமாய வாழ்வெலாம் விள்ள ஞானம் வீசுதாள் வள்ளல் வாழி!’எனப் பணிந்து நிற்கிறான். விராதன் முந்தைய பிறப்பில் தும்புரு என்னும் கந்தர்வனாய்ப் பிறந்தவன் ஆவான். குபேரபுரி என்னும் ஊரில் இருந்த காலத்தில் ரம்பையை விரும்பியதாலும் அவள் மேல் கொண்ட காதலாலும் குபேரனை அலட்சியம் செய்தான். இதனால் குபேரனால் அரக்கனாகுமாறு சபிக்கப் பெற்றான். இதனை,

கரக்க வந்த காமநோய் துரக்க வந்த தோமினால்
இரக்கமின்றி யேயினர் அரக்கன் மைந்தன் ஆயினேன்
 
எனக் குறித்தான். அரக்கனாய் ஆரண்யத்தில் வாழ்ந்து வந்தான். தான் அங்கு வாழ்ந்த காலத்தில் பிறருக்குத் துன்பங்கள் தருவதையே தன் நோக்கமாகக் கொண்டிருந்தான். ராமபிரானும் சீதாதேவியும் கானகம் வருவதனைக் கண்டு ராமபிரானிடம் இருந்து சீதாதேவியைப் பறித்துக் கொண்டு வானிடை பறந்தான். அவனை ராமபிரானும் இலக்குவனும் விரட்டிச் சென்றனர். விராதன் அவர்களையும் தன் தோளின்மேல் வைத்துச் தூக்கிச் சென்றான். உடன் ராமபிரான் தன் கால்களினால் அவனை எட்டித் தள்ளச் சாபம் நீங்கி கந்தர்வனானான். பக்தி ஞானமும் வாய்க்கப் பெற்றான். இத்தகைய ஞானத்தினை விராதன் பெற்றதற்கு இரண்டு காரணங்கள் அமைந்தன. ஒன்று ஐந்து பொறிகளின் வழியே புலன்களைச் செலுத்தாது நினைவை நன்னெறிகளின் வழியே பொருந்தியதாய் அமைந்தது. பிறிதொன்று இறைவனிடத்து முன்னைப் பிறவி தொடங்கியே கொண்டிருந்த பக்திமைப் பண்பு என்பதாகும்.

இதன்வழி இப்பிறப்பில் இழிபிறவி பெற்றிடினும் சிந்தனை நல்லனவாய் அமையுமாகில் இறையருள் பெறலாம் என்பதும் முந்தைய பிறவியின் பக்திப் பலன் பிந்தைய பிறவிலும் வந்து காத்து நிற்கும் என்பதனையும் உணர இயலும். இத்தகைய நிலையில் ராமபிரானின் பெருமைகளையும் ராமநாமத்தின் சிறப்புகளையும் கூறித் தொழுது நின்றான். ராமா! வேதங்கள் எல்லாம் உனது திருவடியின் பெருமையினையே பெரிதும் பேசுகின்றன. அத்தகைய உன்னுடைய திருப்பாதங்களே அந்த உலகம் முழுவதும் பரந்துள்ளன எனின் மற்றைய அவயங்கள் எல்லாம் எத்தகையனவோ? கடல் என்னும் நீரில் மட்டுமன்றி ஏனைய பூதங்களிலும் அவை பரந்து நிற்கும் எனில்  அப்பூதங்களால் அதனைத் தாங்க இயலுமோ? என்று போற்றித் துதிக்கின்றான் விராதன்.

வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில் படிவங்கள் எப்படியோ
ஓதம்கொள் கடல் அன்றி ஒன்றினொடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவை உன்னைப் பொறுக்குமோ!

மேலும் அன்றொருநாள் தன் காலினை முதலை ஒன்று பிடித்துக் கொள்ள அதனால்தான் தினம்தோறும் மேற்கொள்ளும் நாராயணன் வழிபாடு குறைபடுகின்றதே எனக் கஜேந்திரன் என்ற யானை ஆதிமூலமே! என்று அழைக்க தன் அன்பனின் குரல் கேட்டு ஓடி வந்து காத்ததும் நீயன்றோ! சிவபெருமான் பிரம்மனின் தவத்திற்காய் ஒரு தலையினைக் கொய்ய அது அவரின் கையுடனே ஒட்டிக் கொண்டது. அது அவருக்குத் தோஷமாய் அமைந்தது. அத்தகைய தோஷத்தினின்று நீங்கப் பிச்சை எடுத்தல் வேண்டும் என்றும் இக்கபாலம் எப்பொழுது நிறையுமோ அன்றே இது கையை விட்டு அகலும் என்றும் கூறினர். ஆனால் அக் கபாலம் நிறையாது பல காலம் சிவபெருமான் பல இடங்களிலும் பிச்சை எடுத்துத் துன்புற ஒருநாள் அப்பாத்திரத்தில் ‘அட்சயம்’; என்னும் பிச்சையிட்டு அதனை நிறையச் செய்து காத்தவன் நீயல்லவா!

இத்தகைய சிறப்பினை உடைய நீயே மண்ணிலுள்ள உயிர்களை எல்லாம் நியமித்த முதல்வன் என்பதனை உயிர்கள்; உணர்ந்து உன் அருள் பெறாதோ? நீயே பூமாதேவியை ஆதிசேஷனாக்கி பூமியை தாங்கச் செய்கிறாய்!  நீயே வராக அவதாரமாய் பூமியை எடுத்தருளுகின்றாய்! இந்த உலகம் அழிவுறும் பிரளய காலத்தில் அதனை ஒரு வாயினால் விழுங்கியருள்கிறாய்! திரிவிக்கிரம அவதாரமாய் ஓர் அடியால் உலகை அளக்கின்றாய்! இத்தகைய செயல்களை எல்லாம் நின்னை அன்றி யாரே செய்குவார்? திருமகளைத் தன் மார்பில் தாங்கியிருக்கும் அருளுடையோனே! எப்பொழுதும் உறங்காத தன்மையை உடையாய்! இவ் உலகத்தில் தேவர்கள் உள்ளிட்ட பிறர் எல்லாம் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளை உடையவர்கள் ஆவர். எனவே, அவற்றினின்று நீங்குதல் காரணமாக தவம் செய்வர். ஆனால், நீயோ அவ்வினைகளை எல்லாம் கடந்து நின்றாய்! எனவே, ஒரு வினைகளும் இல்லாதவர்போல் நித்திரை செய்து அருள்கின்றாய்! என்றெல்லாம் போற்றி நிற்கின்றான்.

பொருவரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர்
இருவினையும் உடையார்போல் இருந்தவம் நின்றியற்றுவார்
திருவுறையும் மண்மார்பா நினக்கென்னை செயற்பால
ஒருவினையும் இல்லார்பொல் உறங்குதியால் உறங்காதாய்!

மேற்கண்ட  விராதனின் துதிகள் ராமனின் திருவடிகளைத் தொழுதால் அத் திருவடிகளானவை, திருமாலின் பிற அவதாரங்களை எல்லாம் துதித்தமையால் பெறுகின்ற பலன்களை எல்லாம் ஒன்றாய் தந்து அருளும் என்பதனை விளக்கி நிற்கும். தன் நெஞ்சத்தால் பிழை செய்யாமல் சூழ்நிலையின் நிர்ப்பந்தத்தால் இந்திரனுடன் சேர்ந்து பிழை செய்தவள் அகலிகை. அதனால் அவளது கணவன் கௌதமரால் கல்லாய்ப் போவாய் எனச் சபிக்கப்பட்டவள்; தெரிந்தே தவறு செய்யவில்லை எனினும் தன் தவற்றிற்காய் வருந்தி ராமனின் வருகை நோக்கி தவம்  கிடந்தவள். இவளின் தவறினை மன்னித்து அருள் செய்ததும் ராமபிரானின் திருவடிகளே ஆகும். இதனைத்தான் விஸ்வாமித்திரர்,

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றுஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்: கால் வண்ணம் இங்குக் கண்டேன்

எனப் புகழ்ந்துரைத்தார். தன் நெஞ்சத்தில் பிழைப்பு இல்லாமல் சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் தவறிழைத்தவர்களாய்க் கருதப்படாது மன்னித்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவர்களே என இன்றைய சமூகத்திற்கு அறிவுறுத்தியதும் ராமனின் திருவடிகள் தான். மகாத்மா காந்தியடிகளும் இந்தியா  பாகிஸ்தான் பிரிவினையின்போது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களை இந்திய ஆண்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறியதனை இங்கு நினைவு கூர்தல் நலம். எனவே, இத்தகைய சிறப்புகளை உடைய ராமனின் திருவடிகளை, உலக ஆசைகளில் மயங்கி பரம்பொருளை மறந்து நிற்கும் நாம் இந்த ராமநவமித் திருநாளில் வணங்கி அருள் பெறுவோமாக!                              

சொற்சிலம்பர் முனைவர்: மா.சிதம்பரம்

Tags : Sitaraman Tiruvadi ,
× RELATED பலவீனங்களை வெளிப்படுத்தாதீர்கள்!