×

முதல்வரின் சாட்டையடி

தமிழகத்தில் இதுவரை நடந்திராத அளவுக்கு பிரமாண்டமாய் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மாநாடு நாமக்கல்லில் நேற்று நடந்து முடிந்திருக்கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாநாடு என்பதே புதிது. அதிலும் தமிழக முதல்வரின் உரைவீச்சும் பொதுஜனம் புகழும் வகையில் நடந்தேறியுள்ளது. பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தங்கள் அமலுக்கு வந்து 30 ஆண்டுகள் கடந்த நிலையிலும், உள்ளாட்சிகள் தங்கள் இலக்குகளை எட்டுவதில் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கின்றன. கிராமப்புறங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகள் இன்னமும் மாற வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் தற்போது நடந்தேறியுள்ள மாநாடு திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு முன்னோட்டமாக கருதலாம். உள்ளாட்சி பிரநிதிகளுக்கான மாநாடு என்பது வெறும் புகழுரைகளாலும், திட்டங்கள் குறித்தான காட்சிப்படுத்துதலோடும் நடந்து முடியவில்லை. திமுக என்கிற வலுவான இயக்கத்தை பட்டை தீட்டும் வகையிலும், அரசின் திட்டங்கள் கடைக்கோடி பஞ்சாயத்து மக்களையும் சென்றடையும் வகையிலும் இம்மாநாடு நடந்துள்ளது. பஞ்சாயத்து உறுப்பினர்கள் ெதாடங்கி மேயர்கள் வரை அனைவரும் பங்கேற்ற இம்மாநாட்டில் திராவிட மாடல் ஆட்சியின் குறிக்கோள்கள் தெளிவாக வெளிப்பட்டன. சமூக நீதி, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமத்துவம் போன்றவற்றை தமிழகம் வென்றெடுக்க வேண்டுமெனில், அதற்கு உள்ளாட்சிகளை நடத்துவோரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். திமுக அரசின் சாதனைகள் கிராம மக்களையும் சென்றடைய அதை மக்கள் பிரதிநிதிகள் இன்முகத்தோடு எடுத்து செல்ல வேண்டும். இவற்றிற்கான விதை இம்மாநாட்டில் விதைக்கப்பட்டது.உள்ளாட்சியில் 50 சதவீதம் இடஒதுக்கீடு இன்றளவில் நிறைவேறிவிட்டது. பெண்கள் எதற்கும் அஞ்சாமல், யாருக்கும் பயப்படாமல் பணியாற்ற வேண்டும் என்கிற முதல்வரின் உரை மகளிருக்கு நிச்சயம் மன தைரியத்தை கொடுக்கும். உள்ளாட்சி என்பது தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஒரு அருமையான அமைப்பு என நினைத்து கொள்ளும் பிரதிநிதிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றவும் முதல்வர் தயங்கவில்லை. ‘அதிகாரத்தை வைத்துக் கொண்டு தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன். அதற்காக நான் சர்வாதிகாரியாக மாறுவேன்’ என முதல்வரின் அதிரடி பேச்சு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பஞ்சாயத்துக்களில் நடக்கும் ‘பஞ்சாயத்துகள்’ குறித்தான செய்திகள் என் செவிக்கு வரவே கூடாது என கறார் உத்தரவையும் அவர் பிறப்பித்துள்ளார். ஒற்றுமையுடன் அனைத்து கவுன்சிலர்களும் ஊருக்கு உழைத்திட நல்லதொரு மாநாடாக இம்மாநாடு அமைந்திருக்கிறது. அண்ணா சுட்டிக்காட்டிய வழியில் பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு என்பதை உணர்ந்து கொண்டு திமுக பிரதிநிதிகள் மக்கள் பணியாற்றிட நல்லதொரு சந்தர்ப்பத்தை இம்மாநாடு உருவாக்கி கொடுத்துள்ளது. தமிழக மக்கள் பெரிய திட்டங்களை விட, தாங்கள் வாழும் பகுதியில் தரமான சாலை, போதிய குடிநீர், தெருவிளக்கு, சுகாதார கட்டமைப்புகளையே அதிகம் விரும்புகின்றனர். அதில் பொதுமக்கள் திருப்தி அடையும்போது உள்ளாட்சியில் நல்லாட்சி மலர்வதோடு, தமிழகமும் தலை நிமிர்கிறது. நடந்து முடிந்துள்ள மாநாடு அதற்கு நல்லதொரு வழிகாட்டி என்பதில் சந்தேகமே இல்லை.  …

The post முதல்வரின் சாட்டையடி appeared first on Dinakaran.

Tags : Chief's Wash ,namakkal ,tamil nadu ,Conference for Local Representatives ,CM's Wash ,
× RELATED நாமக்கல் பஸ் நிலையத்தில் அலைமோதிய பயணிகள்