திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் கருவறையில் நேற்று, சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள அஷ்டலிங்கங்களை, கிரிவலம் வரும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இதில் பக்தர்கள் முக்கியமாக தரிசிக்கும் கோயில்களில் ஒன்று திருநேர் அண்ணாமலையார் கோயில். சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு அன்று இக்கோயில் கருவறையில் அருள்பாலிக்கும் மூலவர் மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வ நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, சித்திரை முதல் நாளான நேற்று அதிகாலை திருநேர் அண்ணாமலையார் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி மீது சூரிய ஒளி பிரகாசிக்கும் அபூர்வு நிகழ்வு நேற்று காலை 7 மணி முதல் 7.05 மணி வரை நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வ நிகழ்வை  ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அதைத்தொடர்ந்து, அலங்கார ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருநேர் அண்ணாமலையாருக்கு தீபாராதனை நடைபெற்றது.

Tags : event ,Tirunar Annamalaiyar temple ,
× RELATED நெருக்கடியான சூழ்நிலையிலும்...