×

விகாரியே வருக!

வாடி நின்ற பயிரெல்லாம்
வான்பார்த்து கோரியதும்
வாரியள்ளித் தந்தது மேகம்
தாகம் தணித்தது மழை!
கொடுப்பவர் கை மேலேதான்
தாழ்வதில்லை தர்மம் இது!
வான் போன்ற மனிதர்
வாழ்வில் தாழ்வேது!தடையேது!
வாழும் நேரம் ஆல்போலிருந்து
வீழும்நேரம் சந்தனமாய் கமழும்
வாழ்வில் சத்திய சாந்தியுண்டு
வானிலும் வறுமையிலா நிலையுண்டு!
 கொன்றாலும் கொடுப்பதை நிறுத்தாதே!
கொடுத்த வள்ளலை மறவாதே!
சுயநலமில்லா நதியும் மரமும்
சுடரும் சூரியனாய் வாழ்ந்திடு!
வேண்டும் சுதந்திரம் நமக்கு
பறவையாய் வானில் பறக்க
கவலையிலா தனியுலகில்
கண்கள் மலர்ந்து சிரிக்க!
பணமில்லா உலகம் படைத்து
குணத்தால் போட்டியிட்டு வாழ்வோம்!
பாசமுள்ள பத்தினி அருகிருக்க
குடும்பத்தில் நேசம் பகிர்வோம்!
அன்பு முத்தக்கடல் குளித்து
அறிவுள்ள முத்தெடுப்போம்!
பண்பாடு பாசறை சேர்ந்து
பெண்கள் போற்ற நடப்போம்!
மனிதநேய வேப்பிலையால்
சுயநலப்பேய் விரட்டி
விட்டுக்கொடுத்து வாழ்வோம்
திறமை  தட்டிக்கொடுத்து வளர்ப்போம்!
சேவைத்தேரேறி ஏழைகள்
சேர்த்த துயர் துடைப்போம்!
பூவையர் மனக்குறை நீக்கி
தேவைகள் கொண்டு சேர்ப்போம்!
மதமில்லாத மகத்தான உலகில்
மனிதர்  அ ன்புக்கு அடிமையாகி
தீங்கில்லா வாழ்வு வகுத்து
தில்லை அம்பலத்தில் கூடிடுவோம்!
சொல்லிய விருப்பம் நிறைவேற
துல்லியமாய் வருக விகாரியே!
சித்திரையில் எண்ண முத்திரை
சிறக்க வருக தமிழ்ப்புத்தாண்டே!

விஷ்ணுதாசன்

Tags : Vihari ,
× RELATED வாரணாசியில் தமன்னா படப்பிடிப்பு