×

பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் நாடியம்மன் காலை நேரங்களில் பல்லக்கிலும், இரவு நேரங்களில் காமதேனு, அன்னம், பூத, சிம்மம், விருஷபம், குதிரை ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்தார். இதைதொடர்ந்து நேற்று முன்தினம் மாவிளக்கு திருவிழா நடந்தது. பட்டுக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நாடியம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு வைத்து அம்மனை வழிபட்டனர். இதைதொடர்ந்து திருவிழாக்களில் முக்கிய நாளான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது.

தேரோட்டத்தில் வானவேடிக்கை முழங்க தேர் வடம் பிடிக்கப்பட்டது. பட்டுக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நேற்று மாலை தேரடி தெருவிலிருந்து தேர் புறப்பட்டு வடசேரி ரோடு, பிள்ளையார்கோயில் தெரு, தலைமை தபால் நிலையம் வழியாக பெரிய தெருவில் தேர் நிறுத்தப்பட்டது. நாடியம்மனின் 2ம் நாள் தேரோட்டம் இன்று மாலை நடக்கிறது. நாளை (13ம் தேதி) காலை மீனாட்சி அம்மன் தரிசனமும், இரவு முத்து பல்லக்கில் வீதியுலாவுடன் நாடியம்பாள் கோட்டைக்கு எழுந்தருளுவார். நாளையுடன் திருவிழா முடிவடைகிறது.

Tags : festival ,Pattukottai Nadiamman ,
× RELATED கொரோனா எதிரொலி; தாயமங்கலம் கோயில்...