லட்சுமி நாராயண பெருமாள் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

பழநி: பழநி லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டின் கீழ் மேற்கு ரதவீதியில் அமைந்துள்ளது லட்சுமி நாராயண பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் சித்திரைத்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக லட்சுமி சமேத நாராயண பெருமாளுக்கு 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமி மலர்களாலும், அணிகலன்களாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து நாமம், சங்கு, சக்கரம், கருடாழ்வார் மற்றும் பூஜை பொருட்கள் பொறிக்கப்பட்ட கொடி கோயிலின் உட்பிரகாரத்தில் சுற்றி வரப்பட்டது. தொடர்ந்து பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், கந்தவிலாஸ் செல்வக்குமார், மண்டகப்படிதாரர் ஜே.கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் சாமி இரவு 7 மணிக்கு கருடன், ஆஞ்சநேயர், சேஷ வாகனம், தங்கக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19ம் தேதி நடைபெறும்.

அன்று காலை 5.30 மணிக்கு மேல் தோள் கன்னியில் தேரேற்ற நிகழ்ச்சி நடைபெறும். காலை 7.15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து 108 பால்குடங்கள் திருஆவினன்குடி கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து இரவு 8 மணிக்கு முத்துக் குமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் வெள்ளி ரதத்தில் ரத வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags :
× RELATED மாசி அமாவாசை தினத்தின் சிறப்புக்கள் மற்றும் பலன்கள்!!