×

மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் உலா

மதுரை: சித்திரை திருவிழாவின் நான்காம் நாளான நேற்று மீனாட்சி, சுந்தரேஸ்வரர் தங்கப்பல்லக்கில் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளினர். மதுரை சித்திரை திருவிழா ஏப். 8ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் மாசி வீதிகளில் வலம் வருகின்றனர். திருவிழாவின் 4ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு, மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் தங்கப் பல்லக்கில் கோயிலில் இருந்து புறப்பட்டனர். தெற்கு வாசல், சின்னக்கடைத் தெரு வழியாக வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்திற்கு சென்றனர். அங்கு பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் அம்மனையும், சுவாமியையும் வழிபட்டனர்.

வில்லாபுரம் கண்மாய் பகுதியில் அக்காலத்தில் பாவக்காய் தோட்டம் இருந்துள்ளது. விவசாயிகளுக்கு தரிசனம் கொடுக்கவும், அப்பகுதி மக்கள் விழா எடுப்பதற்காகவும் பாவக்காய் பயிரிடப்பட்ட தோட்டத்தில், பாவக்காய் மண்டபத்தில் அம்மனும், சுவாமியும் எழுந்தருள்வது வழக்கம். இந்த மண்டபத்தில் நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், மாலை 6 மணிக்கு வில்லாபுரத்தில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் பவனி வந்து அம்மனும், சுவாமியும் கோயிலுக்கு வந்தனர்.

விழாவின் 5ம் நாளான இன்று, சுவாமி, பிரியாவிடை, அம்மன் தங்கச்சப்பரத்தில் மாசி வீதிகளில் காலை 9 மணியளவில் வலம் வருகின்றனர். வடக்கு மாசி வீதி ராமாயணச்சாவடி மண்டகப்படியில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, பிரியாவிடை ஒரு தங்கக்குதிரை வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் அம்மனும் வலம் வருகின்றனர். வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோயிலை வந்தடைகின்றனர். கோயிலுக்குள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் இரவு 7.30 மணிக்கு வேடர் பறிலீலை நடைபெற உள்ளது.

Tags : Meenakshi ,palace ,
× RELATED மீனாட்சி அம்மன். உபகோயில்களில் ரூ.1.22 கோடி உண்டியல் வசூல்