×

மக்களை காத்து நிற்கும் மலைக்காவலர் கோயில்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுபரமத்தி சாலையில் நகரின் மையப்பகுதியில் இருக்கிறது மலைக்காவலர் கோயில். வரலாற்றுச் சிறப்பும், பழம் பெருமையும் கொண்ட இந்த கோயிலில் சப்தமாதா என்னும் கன்னிமார் சுவாமி, பீமண்ண சுவாமி, நல்லய்ய சுவாமி என்று காவல் தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரரை வழிபடச் செல்லும் பக்தர்கள், முதலில் இந்த மலைக்காவலர்களை வழிபட்ட பிறகே, அங்கு செல்கின்றனர்.  மாலிக்காபூர் படையெடுப்பு என்பது தென்னாட்டு வரலாற்றில் கொடுமையான காலகட்டம். சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் அடிமையாக வந்து தளபதியாக  மாறிய மாலிக்காபூர், படையெடுத்து வந்து  தென்னாட்டைச் சூறையாடினான். மாலிக்காபூர் படையெடுப்பால் கொள்ளைகள் நடந்தது.  

பல கோயில்கள் அடித்து நாசம் செய்யப்பட்டன. இந்த படை கொங்கு மண்டலத்தில், அன்றைய கீழக்கரை பூந்துறை நாட்டின் (இன்றைய  திருச்செங்கோடு) தலையாய சிவாலயம் நாககிரி என்னும் திருச்செங்கோட்டுக்கும் வந்தது. பாரம்பரியம் மிக்க கோயிலுக்குச் செல்ல, இனி மலையில்  யாரும் ஏற கூடாது என்று தடை விதித்தது. மீறி மலையேற யாரேனும் கால்  வைத்தால் அவர்கள் கால் வெட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் சிவபூஜைகள் மற்றும் இறைப்பணிகள் ஸ்தம்பித்தன. அவர்கள் கோயிலைச் சிதைத்து அழிக்க முற்படுகையில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டுவேலவர் மீது மாறா பக்தி கொண்ட வீமணன், ஓவணன் மற்றும்  ரங்கணன் ஆகியோர் கொடுமைகளைச் சகியாது, கோயிலை அழிக்க வந்த குதிரை, யானை  படைகளின் மீது போர்தொடுத்தனர். அந்த போராட்டத்தில் தங்கள் இன்னுயிரையும் இழந்தனர்.

அவர்களின் நினைவாக பின்னாளில் உருவானதே மலைக்காவலர் கோயில் என்பது தலவரலாறு. திருப்பணிக்காக உயிர் துறந்த மாவீரர்களை இறைவன் ஆட்கொண்டு மீண்டும் உயிர்ப்பிப்பதாக அருளியபோது, அதை இம்மூவரும் மறுத்து, இது புண்ணியமான மரணம், ஆதலால் மீண்டும் உயிர்த்தெழுந்து கர்மவினைகளில் சிக்க விரும்பவில்லை என்று கூறினர். அதன் பொருட்டு அவர்களுக்கு மலைக்காவல் உரிமையை கொடுத்தருளினார். வீரர்கள் மூவரும் இன்று திருச்செங்கோட்டில் உள்ள பணிமலைக்காவலர் என்று சொல்லப்படும் கோயிலில் குடிகொண்டுள்ளனர். இந்திரனாலும் விரும்பப்பட்டது என்பது பணிமலைக்காவலர் என்ற இப்பதவியின் சிறப்பு. இந்த வரலாற்றுத் தகவல்களை திருச்செங்கோடு மான்மியம், திருச்செங்கோடு திருப்பணிமாலை போன்ற வரலாற்று ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

விவசாயம் செழிக்கவும், கால்நடைகளை நோய்  நொடியில் இருந்து காக்கவும், இயற்கை பேரிடர்களில் இருந்து தப்பிக்கவும்,  மலைக்காவலர் கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நகர மக்களை காத்து நிற்பது இந்த மலைக்காவலர் கோயிலில் அருள்பாலிக்கும் தெய்வங்கள் தான், என்ற நம்பிக்கை இன்றளவும் தொடர்கிறது. தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இதேபோல் சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்படும் பில்லிசூனிய பாதிப்புகளில் இருந்து விடுபடவும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். சனிக்கிழமைதோறும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை  தொடர்ச்சியாக சிறப்பு வழிபாடுகள் நடத்துவது மலைக்காவலர் கோயிலில் உள்ள  தனிச்சிறப்பு. வருடா வருடம் நவராத்திரியின் போது  ஒன்பது நாளும் சிறப்பு வழிபாடுகளும், நிகழ்ச்சிகளும் நடக்கும். இறுதியில்  உற்சவர் சுவாமியின் திருவீதியுலாவும் நடைபெற்று விழா நிறைவு பெறும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்