×

திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர்திருவிழா : கொடியேற்றத்துடன் துவங்கியது

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வருகிற 18ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ளது நீலிவனேஸ்வரர் கோயில். இக்கோயில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு திருத்தலமாகும். களைப்புற்று வந்த அப்பருக்கு சிவபெருமான் திருக்கட்டமுது அளித்து காட்சியளித்த சிறப்புடையதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை தேர் திருவிழா. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அமபாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் கொடிமரத்திற்கு முன் எழுந்தருளினர். கொடிமரம் முன்பு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காலை 11.30 மணியளவில் கொடியேற்றப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் சிம்ம வாகனம், கிளி வாகனம், யாளி வாகனம், அன்ன வாகனம், பூத வாகனம், கைலாச வாகனம், தங்க குதிரை வாகனம், காமதேனு வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18ம் தேதி மதியம் 2 மணியளவில் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, செயல்அலுவலர் ஹேமலதா மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Tags : Chithirai Nilivaneswarar ,festival ,Chaitanya Chiranjeevi ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...