×

கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா ஆசிரமம் ஆக்கிரமித்து இருந்த ரூ.35 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: சிவசங்கர் பாபா ஆசிரமம் ஆக்கிரமித்திருந்த ரூ.35 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். பிரபல சாமியார் சிவசங்கர் பாபா 65 ஏக்கர் பரப்பளவில் ராமராஜ்யம் ஆசிரமம் மற்றும் சுசில் ஹரி பள்ளியை நடத்தி வருகிறார். இந்நிலையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைதந்ததாக 6 போக்சோ வழக்கில் கடந்த 2021ல் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீன் பெற்று கேளம்பாக்கம் ஆசிரம வளாகத்தில் உள்ளார். இந்நிலையில், இந்த ஆசிரம வளாகத்தில் உள்ள மழலையர் பள்ளி அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என்றும் ராமராஜ்யம் ஆசிரமம் அமைந்துள்ள இடம் ஏரிக்கரை என்றும் அதனை மீட்க வேண்டும் என்றும் கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகத்திற்கும், ஆசிரம நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் மழலையர் பள்ளி அமைந்துள்ள இடம் சாத்தங்குப்பம் கிராமத்தில் புல எண் 292ல் அடங்கிய அரசுக்கு சொந்தமான தோப்பு புறம்போக்கு இடம் என்றும் 7 ஏக்கர் 49 சென்ட் பரப்பளவு ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இடத்தை மீட்க மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த இடத்தை தங்களுக்கே வழங்க வேண்டும் என்று கேட்டு ஆசிரம தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கில் எந்த உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது என்று கூறி விட்டது. இதை தொடர்ந்து, நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.செங்கல்பட்டு சார் ஆட்சியர் சஜீவனா முன்னிலையில் வண்டலூர் வட்டாட்சியர் பாலாஜி மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் அங்கு வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டனர். அப்போது தகவலறிந்து வந்த சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பை அகற்றக் கூடாது என்றும், நிலம் தொடர்பாக நீதிமன்ற தடை ஆணை உள்ளது என்றும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, நீதிமன்ற தடை ஆணையை காட்டுமாறு வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், நீதிமன்ற தடை உத்தரவு நகல் இல்லை என்று சாமியாரின் ஆதரவாளர்கள் தெரிவித்து அந்த இடத்தில் பஜனை பாடல்களை பாட தொடங்கினர். இதை தொடர்ந்து கேளம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.கேளம்பாக்கம் உதவி ஆணையர் (பொறுப்பு) ரியாசுதீன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வருவாய்த்துறை ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்திய சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்களை வெளியேற்றினர். இதையடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் போலீசாருடன் உள்ளே சென்று ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், மதில் சுவர், அலங்கார வளைவுகள் போன்றவற்றை பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர். மின் வாரிய ஊழியர்கள் மூலம் இரண்டு மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. வருவாய்த்துறை அதிகாரிகளையும், ஊழியர்களையும் சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் வீடியோ எடுத்தனர். இதை தொடர்ந்து மீட்கப்பட்ட இடம் கேளம்பாக்கம் ஊராட்சிக்கு சொந்தமான அரசு தோப்பு புறம்போக்கு நிலம் என்றும், ஆக்கிரமிப்பு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட 7.5 ஏக்கர் நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 35 கோடி முதல் 40 கோடி ரூபாய் வரை இருக்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post கேளம்பாக்கம் சிவசங்கர் பாபா ஆசிரமம் ஆக்கிரமித்து இருந்த ரூ.35 கோடி மதிப்புள்ள 7.5 ஏக்கர் நிலம் மீட்பு: வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Sivashankar Baba Ashram ,Chennai ,Shivashankar ,Baba Ashram.… ,Shivashankar Baba Ashram ,
× RELATED கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி...