×

காசிநாதர் கோயில்களில் பங்குனி திருவிழா கோலாகல துவக்கம்

அம்பை: கல்லிடைக்குறிச்சி, அம்பை அகஸ்தீஸ்வரர் கோயில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் திரளானோர் பங்கேற்றனர்.
 கல்லிடைக்குறிச்சியில் செங்குந்தர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட உலோபாமுத்திரை அம்பாள் சமேத அகஸ்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் ரிஷபம், பூங்கோவில் சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
7ம் நாள் விழாவையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7.40 மணிக்கு பச்சை சாத்தி வீதியுலா, பின்னர் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குடம் ஊர்வலம், அங்கபிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் செய்து கோயிலை வந்தடைதல் நடக்கிறது.

மதியம் 1.25 மணிக்கு பாலாபிஷேகம், மாலை 4 மணிக்கு அன்னம் சொரிதலும் இரவு 7 மணிக்கு புஷ்ப அலங்கார மின்னொளி சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா, இரவு 8 மணிக்கு குமாரகோயில் தெற்கு ரத வீதியில் அகஸ்தீஸ்வரருக்கு முருகப்பெருமான் உபதேச காட்சி நடைபெறும். அத்துடன் ஆன்மிக சொற்பொழி, தேவார இன்னிசை நடக்கிறது. ஏற்பாடுகளை செங்குந்தர் சமுதாய அறக்காவலர் குழு தலைவர் சங்கர நாராயணன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் செய்துள்ளனர். இதனிடையே அம்பை மெயின் ரோட்டில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலிலும் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரம் 12ம்தேதி அகஸ்தியருக்கு இறைவன் திருமண காட்சி கொடுக்கும் வைபவம் நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினமும் அகஸ்தியர், யானை, சிம்மம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 7ம் நாளில் காலை 8 மணிக்கு பூங்கோவில் சப்பரத்தில்  வீதியுலா நடைபெறுகிறது. 8ம் நாளான வரும் 12ம் தேதி காலை 6.30 மணிக்கு சுவாமி அம்பாள் பச்சை சாத்தி வீதியுலா, பின்னர் தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தகுடம், பால்குட ஊர்வலம், பக்தர்கள் அங்கப் பிரதட்சணம், கும்பிடு நமஸ்காரம் நடக்கிறது. மாலை 3 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனை, கிறது. தொடர்ந்து அன்னம் சொரிதல், மாலை 6.30 மணிக்கு பூக்கடை சந்திப்பில்  அகஸ்தீஸ்வரருக்கு இறைவன் திருமண காட்சி கொடுத்தல் நடக்கிறது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் நடைபெறும்.

ஏற்பாடுகளை அறங்காவலர்கள் குழுவினர்கள் மற்றும்  ஆலய நிர்வாகிகள் செய்துள்ளனர். இதே போல் அம்பை மரகதாம்பிகை உடனுறை காசிநாத சுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி அதிகாலை சுவாமி அம்பாள், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைடன் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்றனர். திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. வரும் 11ம் தேதி மாலை 4 மணிக்கு கும்ப பூஜை, ஹோமம், 5.30க்கு நடராஜருக்கு 108 சங்காபிஷேகம் 36 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9க்கு பித்தளை சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதியுலா நடைபெறும்.

மறுநாள் மாலை 6 மணிக்கு அகஸ்தியருக்கு இறைவன் திருமண கோலத்தில் காட்சி கொடுத்தல் பூக்கடை பஜாரில் நடக்கிறது. மறுநாள் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் பெண்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்று வடம்பிடித்து நிலையம் சேர்க்கின்றனர். இதையொட்டி பக்த பேரவை சார்பில் தினமும் மாலை 6.30 மணி முதல் 7 மணிவரை திருமுறை பாடல்களும் அம்மையப்பர் கோயில் அருகே இரவு 7 மணி முதல் பக்தி சொற்பொழிவுகளும்  நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சத்யசீலன், தக்கார் வெங்கடேஸ்வரன் மற்றும் கந்தசாமி உள்ளிட்ட பக்த பேரவையினரும், திருப்பணி மன்றத்தினரும் செய்துள்ளனர்.

Tags : festivities ,Kasi Natarakar Temple ,
× RELATED அரண்மனை 4ல் தமன்னா, ராசி கன்னா