×

ஆதரவாளர்களை இழுப்பதில் தேனிக்காரரின் முயற்சி மட்டும் தோல்வியில் முடியும் ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘என்ன தான் இரண்டு முறை இடைக்கால முதல்வராக இருந்தாலும் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுப்பதில் ஏன் தேனிக்காரருக்கு இழுபறியா இருக்கு…’’ என்ற கேள்வியை வீசினார் பீட்டர் மாமா.‘‘மன்னர் மாவட்டத்தில் இலை கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோர் சேலத்துக்காரருக்கு தான் ஆதரவாக இருக்காங்க. அதனால, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் இலை கட்சியினரை தன் பக்கம் இழுக்க தேனிக்காரர் தரப்பு ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்தி இருக்காம். ஏற்கனவே, பத்து வருஷத்துல தொழில், வருவாய், செல்வாக்கு போன்றவற்றை இழந்துள்ளோம். நீங்கள் அரசில் முக்கிய பொறுப்பில் இருந்தபோது எங்களை கண்டுகொள்ளவே இல்லை. உங்களுக்காக போஸ்டர், பேனர் எல்லாம் வைத்தோம். அப்போதும் எங்களை கண்டுகொள்ளவில்லை. இப்போது உங்களுக்குள் சண்டை வந்தபோதுதான் எங்கள் முகம் உங்களுக்கு தெரிகிறதா என்று பொரிந்து தள்ளினார்களாம். அதனால தேனிக்காரருக்கு அந்த மாவட்டத்தில் ரெஸ்பான்ஸ் இல்லையாம். மேலும் ஒரு நோட்டையாவது எங்கள் கண்ணில் காட்டியிருக்கிறீர்களா… ஆட்சியில் இருந்தபோது எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினீர்களா… இப்போது உங்கள் கோரிக்கை நிறைவேற எங்களிடம் வருகிறீர்கள். இப்போது நாங்கள் செல்லா காசு… கரன்சி கொடுத்தால் தான் நாங்கள், மற்ற கட்சிக்காரர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்க முடியும். அதற்காக சின்ன அளவில் கவனித்துவிடலாம் என்று கனவு காணாதீர்கள் என்று தங்களை சந்தித்த தேனிக்காரர் தரப்பிடம் சொன்னார்களாம். தேனிக்காரர் டீமை சேர்ந்த மாஜி நகர்மன்ற தலைவர் இதில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளாராம். இதற்காக சேலத்துக்காரரின் அணியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் டீல் பேசி வருகிறாராம். இந்த தகவல் சேலத்துக்காரர் காதுக்கு சென்றதாம். இதனால் தேனிக்காரரின் டீமின் டீல் முயற்சியை முறியடிக்கும் வகையில், மன்னர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சேலத்துக்காரர் டீம் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாம். இதனால் தான் தேனிக்காரரின் டீமின் டீல் பேச்சுக்கு சேலத்துக்காரர் டீமின் நிர்வாகிகள் பிடி கொடுக்காமல் உள்ளார்களாம். இதில் பல கட்ட முயற்சிகள் நடந்தும், கடைசியில் தேனிக்காரரின் டீமின் முயற்சி தோல்வியில் தான் முடிந்ததாம். காரணம் வாயில் வடை சுடுவதை நிறுத்திவிட்டு, கரன்சியை கண்ணில் காட்டுங்கள் என்று நேரடியாக போட்டு தாக்கினார்களாம். கரன்சி இல்லாததால் கலங்கிய கண்ணோடு தேனிகாரர் டீம் திரும்பிடுச்சாம். இதுதான் தேனிக்காரர் ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சி தோல்வியில் முடிவதாக தொண்டர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கோயம்பேடு கட்சிக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்று அவங்க கட்சிக்காரங்களே ஏன் புலம்புறாங்க. என்ன நடந்தது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘கோயம்பேடுகாரர் கட்சியில் தலைவரின் மனைவியின் ஆதிக்கம், கூட்டணி முடிவுகளில் குளறுபடி, நிர்வாகிகளை சரியாக கையாளாமல் விட்டது போன்ற காரணங்களால், அந்த கட்சி கரைந்து வருகிறதாம். பல நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு தாவிவிட்டதால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி உட்கட்சி தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி தேர்தல் நடத்துவது குறித்து பேசியிருக்கிறார்களாம். அடுத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளதாம். இதில், பேசிய பலரும் உட்கட்சி தேர்தலுக்கு நாம் தற்போது ஆட்களை தேட வேண்டியுள்ளது. கோயம்பேடு கட்சியின் கோட்டை என்று கூறிய மாஜி எம்எல்ஏவின் ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில், கிளை கழகங்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. உட்கட்சி தேர்தல் கிளை கழகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும். இதற்கு ஆட்களை எங்கு சென்று தேடுவது, செலவு யார் செய்வது என நடிகர் மன்ற மாநில நிர்வாகி ஒருவரும் சொன்னராம். கட்சி நிகழ்ச்சியை நடத்த காசு இல்லாமல் கல்யாணம், காது குத்தும் நிகழ்ச்சிக்கு அண்ணியாரை வரவழைத்து செலவை அவங்க தலையிலேயே கட்டி விடுகிறார்களாம். சமீபத்தில் திண்டிவனம் நிகழ்ச்சி உதாரணத்தை கூறி, இதே நிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளதாகவும் கோயம்பேடு கட்சியின் நிலை குறித்து கவலையில் இருக்கிறார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசியல் தெரியாதவங்களா இருக்காங்களே என்று பொதுமக்கள் யாரை பார்த்து சிரிக்கிறாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘ஒற்றை தலைமை வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் நேரத்துல, இரட்டை தலைமை வேணுமுன்னு இலை கட்சியில சிலர் கொடிபுடிச்சிருக்காங்க. சேலம்காரர் தலைமையிலத்தான் கட்சி இருக்கணும்னு, அவரோட ஆதரவாளருங்க, கோயில் கோயிலாக ஏறி இறங்கினாங்க. சேலம்காரர் போற இடத்துல எல்லாம், பேனர், போஸ்டர் அடிச்சு ஒட்டி வெச்சு ஒற்றை தலைமையே வா..வா..ன்னு கூப்பிட்டுக்கிட்டிருந்தாங்க. இந்நிலையில வெயிலூர் மாவட்டத்துல பட்டுன்னு முடியுற தாலுகாவுல தேனிக்காரர் ஆதரவாளருங்க இரட்டை தலைமை வேணும்னு, பேனர் அடிச்சு கொடிபுடிச்சிருக்காங்க. இதைப்பார்த்த பப்ளிக், யாருப்பா இவங்க, அவங்க கட்சி அரசியலே தெரியாம இரட்டை தலைமை வேண்டும் என்று கேட்டு போஸ்டர் வேற அச்சடித்து இருக்காங்க. இதுக்கு மேலே இரண்டு பேருமே ஒன்று சேர மாட்டாங்க என்பது பிறந்த குழந்தைக்கே தெரியும். ஆனால், இலை கட்சியில இன்னும் அரசியல் தெரியாதவங்க எல்லாம் இருக்கிறதை இந்த போஸ்டரை படிக்கும்போதுதான் தெரிகிறது என்று பொதுமக்கள் சிரித்து கொண்டே போய் கொண்டிருக்கிறார்கள்…’’ என்றார் விக்கியானந்தா.    …

The post ஆதரவாளர்களை இழுப்பதில் தேனிக்காரரின் முயற்சி மட்டும் தோல்வியில் முடியும் ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikkara ,Thenikar ,Chief Minister ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…