×

ரூ.171 கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ திருச்செந்தூர் கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற திட்டம்; கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க அறிக்கை தயார்

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. ரூ.171 கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தில் கோயிலில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் விரைவில் கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் தொடங்குவதற்காக அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடைவீடுகளுல் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. இந்தக்கோயிலில் தமிழ் மாதங்களான ஆடி, புரட்டாசி தவிர மற்ற 10 மாதங்களிலும் திருவிழா நடைபெற்று வருகிறது.இது தவிர வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, கந்த சஷ்டி திருவிழா, மாசித் திருவிழா என நான்கு முக்கிய திருவிழாக்களும் நடக்கிறது.  இதனால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்கள் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகள் என பல்வேறு இடங்களிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் கோயிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் போதுமான சுகாதாரம் இன்றி காணப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் தமிழக அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட சேகர்பாபு, திருச்செந்தூர் கோயிலை திருப்பதிக்கு இணையான வசதிகளுடன் மாற்ற   தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார். அதன்படி ‘மாஸ்டர் பிளான்’ திட்டம் தீட்டப்பட்டு, அன்னதான மண்டபம், பக்தர்கள் வரிசை மண்டபம், சஷ்டி மண்டபம், சுகாதார வளாகம் உள்ளிட்ட அனைத்து மண்டபங்களும் புதுப்பித்து கட்டப்பட்டுள்ளது. கோயிலில் மிகப்பெரிய அன்னதான மண்டபம் கட்ட திட்டம் உள்ள நிலையில், தற்போது கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட அன்னதான மண்டபத்தில் தினமும் காலை 9 மணி முதல் இரவு வரை பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. முன்பு கோயிலில் ரூ.20, ரூ.100, ரூ.250 ஆகிய கட்டண தரிசனங்களும், தர்ம தரிசனமும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதனால் திருவிழா காலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு 6 மணி நேரம் ஆவதாக தெரிவித்தனர். இதையடுத்து ரூ.20, ரூ.250 ஆகிய கட்டண தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டு, ரூ100 கட்டணத்திலும், இலவச தரிசனமும் மட்டும் தற்போது நடைமுறையில் உள்ளது. இதனால் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்ய முடிகிறது. இதுதவிர முதியோர்கள் கால் கடுக்க நின்று தரிசனம் செய்வதை தவிர்க்க அவர்கள் வரிசையில் அமர்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கைகள் வசதியுடன் விரைவில் தனி வரிசை ஏற்படுத்தப்பட உள்ளன. அதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது விரைந்து நடைபெற்று வருகின்றன. ‘மேலும் இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதாராதாகிருஷ்ணனிடம் பக்தர்கள் வலியுறுத்தினர். இதை ஏற்று 2023க்குள் கும்பாபிஷேகம் நடத்த அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார். இதற்கு திருப்பணிகளுக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, அறநிலையத்துறை ஆணையாளர், அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் மூலம் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கும்பாபிஷேக பணிகள் விரைவாக தொடங்கும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்செந்தூர் கோயிலை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு இணையாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்….

The post ரூ.171 கோடியில் ‘மாஸ்டர் பிளான்’ திருச்செந்தூர் கோயிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற திட்டம்; கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்க அறிக்கை தயார் appeared first on Dinakaran.

Tags : Tiruchendur temple ,Tirupati ,Kumbabhishekam ,Tiruchendur ,barracks ,Tiruchendur Subramaniaswamy Temple ,Kumbabhishek ,Dinakaran ,
× RELATED திருப்பதி கோயிலில் ரூ.3.09 கோடி காணிக்கை