×

ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்

139. சதுராத்மனே நமஹ (Chathuraathmane namaha)

திருமலையப்பனைப் பார்த்துக் கருடன், “எம்பெருமானே! இங்கே ஏழு மலைகளுள் ஆதிசேஷன் பெயரில் சேஷாத்ரி என்றொரு மலையும், எனது பெயரில் கருடாத்ரி என்றொரு மலையும் உள்ளன. ஆனால் ‘கருடாத்ரிநாதன்’ என்று உன்னை யாரும் அழைப்பதில்லை. ‘சேஷாத்ரிநாதன்’ என்றுதான் எல்லோரும் உன்னை அழைக்கிறார்கள். உனது பிரம்மோற்சவத்தில் கூட ஒருமுறை தான் கருட வாகனத்தில் நீ எழுந்தருளுகிறாய். சேஷ வாகனத்தில் மட்டும் இரண்டு முறை நீ எழுந்தருளுகிறாய். ஆதிசேஷனுக்கு நிகரான ஸ்தானத்தை எனக்கும் நீ வழங்க வேண்டும்!” என்று வேண்டினார்.

“உன் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்!” என்றார் மலையப்பன். “இன்னொரு கோரிக்கையும் உள்ளது!” என்றார் கருடன். “அதென்ன?” என்று கேட்டார் மலையப்பன். “ஆதிசேஷனாவது பரவாயில்லை! ஆதி காலத்திலிருந்து உனக்கு சேஷனாக (தொண்டனாக) இருந்து பணிவிடை செய்கிறார். சிறிய திருவடியான அனுமான் ராமாயணத்தில் தானே உன்னோடு வந்து சேர்ந்து கொண்டார். அவருக்கென்று எத்தனை தனி சந்நதிகள், அர்ச்சனைகள், மாலைகள், பூஜைகள்? ஆனால் பெரிய திருவடியான எனக்கெனத் தனியாக ஒரு சந்நதி கூட இல்லையே!” என்றார்.

“இதையும் பரிசீலிக்கிறேன்!” என்றார் திருமால். சிலகாலம் கழிந்தது. வைகுண்டத்தில் திடீரென மகாலட்சுமியைக் காணவில்லை. கருடனை அழைத்த திருமால், மகாலட்சுமி எங்கு சென்றிருக்கிறாள் என்று தேடச்சென்னார். பல இடங்களில் தேடிய கருடன், திருநறையூர் எனப்படும் நாச்சியார்கோயிலில் மேதாவி என்னும் முனிவரின் மகளாக வஞ்ஜுளவல்லி என்ற பெயருடன் மகாலட்சுமி அவதரித்திருப்பதைக் கண்டறிந்து திருமாலிடம் தெரிவித்தார்.

அவளை மணந்து கொள்ள விரும்பிய திருமால், வாசுதேவன், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என ஐந்து வடிவங்களை எடுத்துக் கொண்டு நாச்சியார் கோயிலில் உள்ள மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தார். மேதாவியிடம், “நாங்கள் ஐவரும் வேதம் கற்கும் பிரம்மச்சாரிகள். எங்களுக்கு இங்கே உணவு கிடைக்குமா?” என்று கேட்டார். மேதாவியும் தன் மகள் வஞ்ஜுளவல்லியிடம் வந்தவர்களுக்கு உணவு பரிமாறச் சொன்னார். ஐவரும் உண்டபின் கை கழுவுவதற்காக வஞ்ஜுளவல்லி ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தாள்.

முதலில் வந்த வாசுதேவன், கையை அலம்பியவுடன், வஞ்ஜுளவல்லியின் கையைப் பிடித்து இழுத்தார். “அப்பா!” என்று அலறினாள் வஞ்ஜுளவல்லி. மேதாவி ரிஷி கோபத்துடன் ஓடிவந்தார். அப்போது வாசுதேவன் தனக்கே உரிய அடையாளங்களாக இருக்கும் சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்சஜன்யச் சங்கையும் எடுத்து மேதாவியிடம் காட்டவே, வந்திருப்பவர் திருமால் என உணர்ந்து அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைத்தார்.

இன்றும் நாச்சியார்கோவிலில் சங்கு சக்கரங்களை எடுத்து அடையாளமாகக் காட்டியபடி பெருமாள் எழுந்தருளியுள்ளார். அதன்பின் கருடனை அழைத்த திருமால், “திருமலையில் நீ என்னென்ன கோரிக்கைகள் வைத்தாயோ அவை அனைத்தையும் இங்கே நிறைவேற்றி வைக்கிறேன். அனுமனுக்குத் தனியாகச் சந்நதி இருப்பது போல், இவ்வூரில் உனக்கெனத் தனிச் சந்நதி தருகிறேன்.

திருமலையில் கருடாத்ரி என்ற மலை இருந்தும், யாரும் என்னைக் கருடாத்ரிநாதன் என்றழைப்பதில்லை என்று வருந்தினாய் அல்லவா? அந்தக் குறை தீர, இவ்வூரில் நீ மலை போன்ற கல்கருடனாகக் கல்லால் ஆன திருமேனியுடன் விளங்குவாய் என்னை விடப் புகழ் பெற்றவனாக இவ்வூரில் நீ விளங்குவாய்! திருமலையில் இரண்டு முறை சேஷவாகனம் இருப்பது போல, இவ்வூரில் மார்கழியில் ஒருமுறை, பங்குனியில் ஒருமுறை என வருடத்தில் இரண்டு முறை கருட வாகனத்தில் நான் காட்சி தருவேன்!”என்று கூறினார்.

இன்றும் நாச்சியார்கோயிலில் தனிச்சந்நதியோடு கற்ற கருடன், கற்கின்ற கருடன், கற்க போகின்ற கருடன் என முக்காலத்திலும் கல்வி பயின்று கல்விவரம் தரும் ‘கல்-கருடனாகக்’ கருடன் காட்சி தருகிறார். அவருக்கு அருள்புரியவந்த திருமால் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், சங்கர்ஷணன் என ஐந்து வடிவங்களுடன் காட்சி தருகிறார்.

இது போல் தன் அடியார்களுக்கு அருள்புரிவதற்காகப் பற்பல வடிவங்கள் எடுக்கிறார் திருமால். அந்த வகையில் வைகுண்டத்துக்கு வந்து திருமாலைத் தரிசிக்க முடியாத தேவர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிவதற்காகத் திருப்பாற்கடலில் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன் என நான்கு வடிவங்களோடு எழுந்தருளியுள்ளார். பாற்கடலில் இத்தகைய நான்கு வடிவங்கள் கொண்டு காட்சி தருவதால் ‘சதுராத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 139-வது திருநாமம். “சதுராத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றபடி திருமால் அருள்புரிவார்.

140. சதுர்வ்யூஹாய நமஹ (Chathurvyoohaaya namaha)

நாச்சியார்கோயிலில் வாசுதேவன், பிரத்யும்னன், அனிருத்தன், ஸங்கர்ஷணன், புருஷோத்தமன் என ஐந்து வடிவங்களுடன் திருமால் விளங்குவதைப் பற்றி “சதுராத்மனே நமஹ” என்ற திருநாம விளக்கத்தில் அனுபவித்தோம்.      நாச்சியார்கோயில் நிவாசப் பெருமாளுக்குத் தினமும் ஆராதனை செய்யும் வைகானச ஆகம விசாரதர் ஸ்ரீ.உ.வே. கண்ணன் பட்டாச்சார்யார் சுவாமி, அந்த ஐந்து வடிவங்களைப் பற்றி ஆகம சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட ஒரு அழகான விளக்கத்தைக் கூறினார். அதை வாசகர்களுடன் பகிர்கிறேன்.ஜீவாத்மாக்கள் அனைவரும் இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்பட்டவர்கள்.

ஆனால் ஐம்புலன்களாகிய ஐந்து திருடர்கள், அந்த ஜீவாத்மாவின் சிந்தனையை இறைவன்பால் செல்ல விடாமல் தடுக்கின்றன. கண்டு, கேட்டு, உற்று, முகர்ந்து, உண்டு உழலும் சிற்றின்பங்களை அனுபவிக்க வைக்கின்றன. அதனால், இறைவனைக் காண வேண்டிய கண், உலகிலுள்ள மற்ற பொருட்களைப் பார்க்கின்றது. அவன் புகழைக் கேட்க வேண்டிய காது, இதர பேச்சுக்களைக் கேட்கின்றது. அவன் நாமங்களைப் பாட வேண்டிய நா, தேவையற்ற பேச்சுக்களைப் பேசுகிறது. அவனது துளசி வாசனையை நுகர வேண்டிய மூக்கு, வேறு வாசனைகளை நாடுகிறது. அவனை அணைக்க வேண்டிய உடல், சாதாரண மாமிச உடலை விரும்புகிறது.

ஆனால் இத்தகைய உலகியல் சுகங்களில் உழலும் ஒருவன், இறைவனிடம் பக்தி செலுத்த வேண்டுமென எண்ணினானாகில், அவன் மேல் இறைவன் கருணை கொள்கிறார். நம் இதயமாகிய நிலத்தில் பக்தி என்னும் செடியை முளைக்கச் செய்கிறார். அந்தச் செடியின் நான்கு இலைகள் போல், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என நான்கு வடிவங்கள் எடுத்து நம் இதயத்தில் வீற்றிருக்கிறார். அந்தச் செடியின் தண்டாக வாசுதேவனாகிய மூல மூர்த்தி எழுந்தருளுகிறார்.

பக்தியின் முதல் நிலையில், உலகியல் செயல்களிலும் ஈடுபட்டுக் கொண்டே பக்தன் நான்கு இலைகளைப் போல அவன் இதயத்தில் நான்கு வடிவங்களுடன் உறையும் இறைவனைத் தியானிக்கிறான். இரண்டாம் நிலையில், இறைவனின் அருளால் பக்தி முற்றவே, தன் புலன்களை மற்ற விஷயங்களில் செல்லாமல் கட்டுப்படுத்தி பக்தியில் ஈடுபடுகிறான். அவன் புலன்கள் மற்ற விஷயங்களில் ஈடுபடாவிட்டாலும், மனம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வருவதில்லை.

மூன்றாம் நிலையில் மனமும் கட்டுப்பாட்டுக்குள் வந்து சலனமற்ற நிலையை அடைகிறது. மேலும் அன்போடு இறைவனின் நால்வகை வடிவங்களை அந்த பக்தன் தியானிக்கிறான். நான்காம் நிலையில், அதுவரை செடியாக இருந்த பக்தி, மரமாக வளர்ந்து முழுமை அடைகிறது. அவனது இதயம் முழுவதும் இறைவன் ஆக்கிரமித்துக் கொள்கிறான். அதன்பின் அவனது புலன்களோ மனமோ மற்ற விஷயங்களின் பால் செல்லாமல், இறைவனிடமே முழுமையாக ஈடுபடுகின்றன.

இவ்வாறு வாசுதேவனாகிய திருமால், பிரத்யும்னன், அநிருத்தன், ஸங்கர்ஷணன், புருஷோத்தமன் என நான்கு வடிவங்கள் எடுத்துக் கொண்டு பக்தனின் இதயத்தில் குடிகொண்டு, அவனுடைய புலன்களை மற்ற விஷயங்களில் செல்லாமல் இழுத்துத் தன்பால் ஈடுபடச் செய்கிறார். அதை விளக்கவே நாச்சியார் கோவிலில் ஐந்து வடிவங்களோடு பெருமாள் காட்சி தருகிறார்.

இவ்வாறு பெருமாளின் ஐந்து வடிவங்களுக்குப் பின்னால் உள்ள தத்துவத்தை அவர் விளக்கினார். யுத்தத்தில் சேனைகளை அமைக்கும் விதத்தை வியூகம் என்று சொல்வார்கள். அதுபோல், நம் புலன்களிலிருந்து நம்மைக் காப்பதற்காக நான்கு வடிவங்களோடு வியூகம் அமைத்து, நம் புலன்களை வென்று, நம்மை பக்தியில் முன்னேறச் செய்வதால் ‘சதுர்வ்யூஹ:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின்  140-வது திருநாமம்.

“சதுர்வ்யூஹாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களை நாற்புறங்களிலிலிருந்தும் எந்த ஆபத்தும் அண்டாதபடி வியூகம் அமைத்துத் திருமால் காத்தருள்வார்.

141. சதுர்தம்ஷ்ட்ராய நமஹ (Chathurdhamshtraaya namaha)

முந்தைய யுகத்தில், பாண்டிய நாட்டில் ‘விஷ்ணுபுரம்’ என்ற ஊரில் ‘மல்லிகைப்பல்லழகர்’ என்ற பெயருடன் திருமால் கோயில் கொண்டிருந்தாராம். அவரது பற்கள் மல்லிகைப்பூ போல் அழகாகவும் மென்மையாகவும் இருந்தமையால் இப்பெயர் உண்டானது. விஷ்ணுசித்த பட்டர் என்னும் அர்ச்சகர் அந்தப் பெருமாளுக்குப் பேரன்போடு தினசரி பூஜைகளைச் செய்து வந்தார். ஊரார் பெருமாளுக்குப் பழங்கள் சமர்ப்பித்தால், அவற்றின் தோலை எல்லாம் நன்றாக உறித்துவிட்டு உள்ளிருக்கும் பழத்தை மட்டும் நிவேதனம் செய்வார் அந்த அர்ச்சகர். “பெருமாள் மல்லிகைப் பூ போல் மென்மையான பற்களை உடையவராக இருப்பதால், கடுமையான பொருட்களை அவரால் கடிக்க முடியாது!” என்று பக்தியுடன் கூறுவார் அந்த அர்ச்சகர். கொட்டைப் பாக்கும் வெற்றிலையும் சமர்ப்பித்தால் கூட, அவற்றை அரைத்துப் பொடியாக்கித் தான் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பார்.

அவ்வூரிலுள்ள விவசாயிகள், தை மாதம் அறுவடை ஆனவுடன், கரும்புக் கழிகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதற்காக எடுத்து வந்தார்கள். அப்போது ஊரார் சிலர் அவர்களிடம், “நம் ஊர் அர்ச்சகர் கனிகளையே தோலை உறித்தபின் தான் பெருமாளுக்கு நிவேதனம் செய்வார். கரும்புகளை நிவேதனம் செய்யவே மாட்டார். இத்தனைக் கரும்புகளை உண்டால் பெருமாளுக்குப் பல் வலிக்கும் என்று கூறுவார். உங்களைக் கோயிலுக்குள்ளேயே அனுமதிக்க மாட்டார்!” என்றார்கள்.

ஆனாலும் பெருமாள் மேல் அசைக்க முடியாத பக்தி கொண்ட விவசாயிகள், “நாங்கள் கொடுப்பதைப் பெருமாள் நிச்சயமாக ஏற்பார்!” என்று சொல்லிவிட்டுக் கரும்புகளுடன் கோயிலை நோக்கிச் சென்றார்கள். அப்போது விஷ்ணுசித்த பட்டர் கோயிலில் இல்லை. திருப்பல் பட்டர் என்ற வேறொரு அர்ச்சகர் இருந்தார். கரும்புக் கழிகளுடன் வந்த விவசாயிகள், “சுவாமி! தாங்கள் புதிய அர்ச்சகரா? எப்போதும் இங்கே பூஜை செய்யும் அர்ச்சகர் இன்று வரவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்குத் திருப்பல் பட்டர், “அவர் இன்று சங்கராந்தி தர்ப்பணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். அவருக்குப் பதிலாக நான் இன்று பூஜை செய்கிறேன்!” என்றார்.

விவசாயிகள் கொண்டு வந்த அனைத்துக் கரும்புகளையும் வாங்கிப் பெருமாளுக்கு நிவேதனம் செய்தார் திருப்பல் பட்டர். விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கோயிலை விட்டு வெளியே வரும் வேளையில் விஷ்ணுசித்த பட்டர் கோயிலுக்குள் நுழைந்தார். விவசாயிகள் கைகளில் கரும்புக் கழிகளைப் பார்த்து விட்டு, “இவற்றை ஏன் கோயிலுக்குக் கொண்டு வந்தீர்கள்?” என்று கேட்டார். “இந்த வருடம் நாங்கள் அறுவடை செய்த கரும்புகளைப் பெருமாளுக்குச் சமர்ப்பிக்க வந்தோம். புதிய அர்ச்சகர் இவற்றைப் பெருமாளுக்கு நிவேதனம் செய்தார். மிக்க மகிழ்ச்சி!” என்றார்கள் விவசாயிகள். வியந்து போன விஷ்ணுசித்த பட்டர், “யாரந்தப் புதிய அர்ச்சகர்? நான் கோயிலைப் பூட்டி விட்டுத் தானே தர்ப்பணம் செய்யப் போனேன்? எனக்குத் தெரியாமல் கோயிலுக்குள் நுழைந்த புதிய அர்ச்சகர் யார்?” என்று கேட்டுக் கொண்டே கோயிலுக்குள் நுழைந்தார்.

திருப்பல் பட்டரைப் பார்த்து, “யாரப்பா நீ? கோயிலுக்குள் எப்படி நுழைந்தாய்?” என்று கேட்டார் விஷ்ணுசித்த பட்டர். திருப்பல் பட்டரிடமிருந்து எந்தப் பதிலுமில்லை. ஒரு விவசாயி கையிலிருந்த கரும்பைப் பிடுங்கி, “இந்தக் கரும்பைக் கடித்தால் பெருமாளுக்கு வலிக்காதா?” என்று கேட்டார் விஷ்ணுசித்த பட்டர். அப்போது அந்தக் கரும்பில் நான்கு பற்கள் பதிந்திருப்பதை அவர் கண்டார். “சுவாமி! இத்தகைய பக்தர்கள் சமர்ப்பிக்கும் கரும்பை உண்பதற்காகவே தனது மேல் பல் வரிசையில் நான்கு வலிமையான பற்களைக் கொண்டிருக்கிறாரே பெருமாள்! அது உங்களுக்குத் தெரியாதா? ராமாயணத்தில் கூட “சதுர்தச ஸம த்வந்த்வ: சதுர்தம்ஷ்ட்ர: சதுர்கதி:” என்று இப்பற்களைப் பற்றி வால்மீகி கூறியுள்ளாரே!” என்று சொன்ன திருப்பல் பட்டர், கருவறைக்குள் சென்று மறைந்து விட்டார்.

விவசாயிகள் பெருமாள் மேல் கொண்ட பக்தியைத் தனக்கு உணர்த்துவதற்காகப் பெருமாளே திருப்பல் பட்டராக வந்ததையும், தான் உண்டதற்கு அடையாளமாகத் தனது நான்கு பற்களையும் ஒவ்வொரு கரும்பிலும் பெருமாள் பதித்திருப்பதையும் உணர்ந்தார் விஷ்ணுசித்த பட்டர். இவ்வாறு மெய்யடியார்கள் பக்தியோடு சமர்ப்பிக்கும் கடினமான பொருட்களையும் உண்டு அவர்களை மகிழ்விப்பதற்காகவே நான்கு சிறப்புப் பற்களோடு விளங்கும் திருமால் ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்றழைக்கப்படுகிறார். ‘சது:’ என்றால் நான்கு, ‘தம்ஷ்ட்ரம்’ என்றால் பல். ‘சதுர்தம்ஷ்ட்ர:’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 141-வது திருநாமம். “சதுர்தம்ஷ்ட்ராய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்குப் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமான, அழகான பற்களோடு விளங்கத் திருமால் அருள்புரிவார்.

142. சதுர்புஜாய நமஹ (Chathurbhujaaya namaha)

ரிஷ்யமூக மலையிலுள்ள சுக்ரீவனின் உதவியை நாடி, ராமனும் லட்சுமணனும் அம்மலை அடிவாரத்தை அடைந்தார்கள். அப்போது மலை உச்சியில் இருந்து அவர்களைக் கண்ட சுக்ரீவன், ஜாம்பவானை அழைத்து, “அதோ இருவர் வருகிறார்கள் பாருங்களேன்! மரவுரி தரித்திருக்கிறார்கள். ஆனால் துறவிகள் போலத் தெரியவில்லை. கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியிருக்கிறார்கள். ஆனால் அரசர்களுக்குரிய அணிகலன்களை அணிந்திருக்கவில்லை. வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இவர்கள் யாராக இருக்கக்கூடும்?” என்று கேட்டான். “நம் மந்திரியான அனுமான் தான் பேச்சில் கெட்டிக்காரன்.

அவனை அனுப்பி இவர்கள் யாரென்று அறிந்து வரச் சொல்வோம்!” என்றார் ஜாம்பவான். அவ்வாறே சுக்ரீவனும் அனுமானை அனுப்ப, ஒரு துறவி வேடத்தில் ராம லட்சுமணர்கள் முன் சென்றார் அனுமான். ராமபிரானைப் பார்த்து ஒரு ஸ்லோகத்தைச் சொன்னார்-

‘ஆயதாச்ச ஸுவ்ரதாச்ச பாஹவ பரிகோபமா:
ஸர்வாபரணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா:’

இதன்பொருள்- ‘‘இரும்புக் கம்பிகள் போல் வலிமையாக இருக்கும் உங்களது தோள்களில் ஆபரணங்கள் அணிந்தால் மிகவும் அழகாக இருக்குமே! ஆயினும் ஏன், நீங்கள் ஆபரணங்கள் அணியாமல் வந்திருக்கிறீர்கள்?” என்று ராமனிடம் அனுமன் கேட்கிறார். ஆனால் இவ்விடத்தில் வடமொழி இலக்கணப் பிழை ஒன்று உள்ளது! நவ வியாகரண பண்டிதரே வியாகரணப் பிழை செய்வாரா? வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை மூன்றும் உண்டு. ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒருமை, பன்மை மட்டுமே. இப்போது ராமனின் தோள்களைப் பற்றி வடமொழியில் கூறும் அனுமான் இருமையில் தானே சொல்ல வேண்டும் அப்படியாயின் இந்த ஸ்லோகம்,

‘ஆயதாச்ச ஸுவ்ரதாச்ச பாஹூ தே பரிகோபமௌ
ஸர்வாபரணபூஷார்ஹௌ கிமர்த்தம் ந விபூஷிதௌ’
என்று இருமையில் இருக்க வேண்டும். ஆனால் ஸ்லோகத்தை,
‘ஆயதாச்ச ஸுவ்ரதாச்ச பாஹவ பரிகோபமா:
ஸர்வாபரணபூஷார்ஹா கிமர்த்தம் ந விபூஷிதா:’

என்று பன்மையில் அமைத்து விட்டார் அனுமான். ஏன் இப்படிப்பட்ட ஒரு இலக்கணப் பிழையைச் செய்தார்? அவர் பிழை செய்யவில்லை. அவர் சொன்னது முழுக்க முழுக்கச் சரியே! சாதாரண மனிதர்களுக்கு இரண்டு கைகளையுடைய சாதாரண மனிதனாகக் காட்சி தரும் ராமன், உண்மையான பக்தர்களுக்கு மட்டும் நான்கு திருத்தோள்களோடும் சங்கு சக்கரங்களோடும் காட்சியளிப்பான் என வால்மீகி கூறியுள்ளார். ராவண வதம் ஆனபின் மண்டோதரி, ராமனைத் துதிக்கையில்,

‘தமஸ: பரமோ தாதா சங்கசக்ரகதாதர:’

என நான்கு திருத்தோள்களோடும் சங்கு, சக்கரங்களோடும் கூடியவனாக ராமனைக் குறிப்பிடுகிறாள். அந்த வகையில் அனுமானுக்கும், ராமபிரான் நான்கு திருத்தோள்களோடு காட்சியளித்துள்ளார். அதனால் தான் இருமையில் அவரது தோள்களைக் குறிப்பிடாமல் பன்மையில் குறிப்பிட்டு இந்த ஸ்லோகத்தை அமைத்துள்ளார் அனுமான். எனவே அனுமானின் ஸ்லோகம் மிகச்சரி.

நான்கு தோள்களோடு கூடியிருப்பதை மஹாபுருஷ லக்ஷணம் என்று சொல்வார்கள். தான் ‘மஹாபுருஷன்’ என்பதற்கு அடையாளமாகத் திருமால் நான்கு திருத்தோள்களுடன் விளங்குகிறார். மஹாபுருஷன் என்பதன் தமிழாக்கமே பெருமாள் என்பது. மஹா என்றால் பெரிய என்றும் புருஷன் என்றால் ஆள். மஹாபுருஷன் (பெரிய ஆள்) என்பதையே பெருமாள் என்கிறோம்.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வகைப் புருஷார்த்தங்களையும் அருளவல்லவர் திருமால் என்பதையும் அவரது நான்கு திருத்தோள்கள் காட்டுகின்றன. இத்தகைய நான்கு தோள்களுடன் கூடியவராகையால், ‘சதுர்புஜ’ எனப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 142-வது திருநாமம். “சதுர்புஜாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தும் குறைவின்றிக் கிடைக்கும் படித் திருமால் அருள்புரிவார்.

143. ப்ராஜிஷ்ணவே நமஹ (Bhraajishnave namaha)

1939-ம் ஆண்டு முதல் 1945-ம் ஆண்டு வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. ஒருபுறம் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளும், அவற்றுக்கு எதிராக ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளும் அணிவகுத்திருந்தன. ஹிட்லர் தலைமையிலான ஜெர்மானியப் படைகளும், ஜப்பானியப் படைகளும் அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் கடும் நெருக்கடி தந்து கொண்டிருந்தன. போரில் வெல்வதற்கு அணு ஆயுதத்தைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது அமெரிக்கா.

1941-ம் ஆண்டு, ஓப்பன்ஹைமர் என்ற புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானியை அழைத்து, அணுகுண்டு ஆராய்ச்சி நடத்தச் சொன்னது அமெரிக்க அரசாங்கம். அவரும் தம்முடைய சகாக்களுடன் இணைந்து நான்கு ஆண்டுகளுக்கும் மேல் அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி, 1945-ம் ஆண்டு அணுகுண்டு தயாரிப்பதற்கான வரைவை உருவாக்கினார்.அந்த வரைவின் அடிப்படையில் ‘லிட்டில் பாய்’, ‘ஃபேட் மேன்’ என்ற இரண்டு அணுகுண்டுகளைக் கொண்டு, ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இடங்களைத் தாக்க அமெரிக்காவும் அதன் சக நாடுகளும் திட்டமிட்டன.

அணுகுண்டைப் பிரயோகிப்பதற்கு முன்னதாகச் சோதனை செய்து பார்க்க எண்ணியது அமெரிக்க அரசு. அலமொகோர்டோ என்னும் பாலைவனப் பகுதி அணுகுண்டு சோதனை செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அந்தச் சோதனை நிகழ்த்தப்பட்டது.  பெருத்த ஒலியோடு அணுகுண்டு வெடித்தவாறே, ஒளிப்பிழம்பு ஒன்று வானில் கிளம்பியது. அதைக் கண்ட ஓப்பன்ஹைமர் கீதையின் ஒரு ஸ்லோகத்தை மனதில் கொண்டு கீழ்க்கண்ட வார்த்தைகளைச் சொன்னார்.

  “If the radiance of a thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one.” ஒரே நேரத்தில் ஆயிரம் சூரியன்கள் வானில் வெடித்தால் எத்தகைய ஒளி உண்டாகுமோ, அதை விடப் பிரகாசமாக இருந்தது கீதையில் கண்ணன் எடுத்த விஸ்வரூபம். இந்த அணுகுண்டு உண்டாக்கிய ஒளிப்பிழம்பு அந்தக் கண்ணனின் விச்வரூபத்தை எனக்கு நினைவூட்டுகிறது.

அவர் குறிப்பிட்ட கீதை ஸ்லோகம் - 11-12 -

“திவி ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா
யதி பா ஸத்ருசீ ஸா ஸ்யாத் பாஸஸ்தஸ்ய மஹாத்மன:”
இத்தகைய ஒளிப்பிழம்பு போன்ற வடிவுடன் திருமால் விளங்குவதைத் தமிழில் நம்மாழ்வார்,

“முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்த்துவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!”

என்று பாடியுள்ளார். அணுசக்தி எப்படி ஆக்கம், அழிவு இரண்டுக்கும் பயன்படுகிறதோ அவ்வாறே திருமாலின் திருமேனி ஒளியும் ஒருபுறம் பக்தர்களுக்கு வழிகாட்டி அருள்புரிகிறது. மற்றொரு புறம் தீயவர்களைச் சுட்டெரிக்கிறது. தன் திருமேனி ஒளியைக் கொண்டு தன் பக்தர்களுக்கு ஒளிகாட்டி வழிகாட்டுவதால் திருமால் ‘ப்ராஜிஷ்ணு:’ என்றழைக்கப்படுகிறார். “திருமாலின் திருமேனி ஒளியைத் தியானிப்போம். அது நம் சிந்தையை நல் வழியில் செலுத்தட்டும்” என்பது தான் காயத்திரி மந்திரத்தின் பொருளாகும். ‘ப்ராஜிஷ்ணு:’ என்பதே ஸஹஸ்ரநாமத்தின் 143-வது திருநாமம். “ப்ராஜிஷ்ணவே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும்.

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

Tags : Anandan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!