×

சிவத்திற்கு உபதேசித்த ஷண்முகன்

அருணகிரி உலா - 73

அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானை வணங்கி, நாவுக்கரசர் அவதரித்த திருத்தலமான திருவாமூரை நோக்கிப் பயணிக்கிறோம். பண்ருட்டியிலிருந்து  உளுந்தூர்ப்பேட்டை செல்லும் சாலையில் 10.கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். மருள் நீக்கியார் என்று பெற்றோரால் பெயர் சூட்டப்பட்ட நாவுக்கரசரும் அவர்  தமக்கை திலகவதியாரும் வாழ்ந்த தலம்.  நாவுக்கரசர் அவதரித்த இடத்தில் அவருக்குத் தனிக் கோயில் உள்ளது. அருகிலுள்ள பசுபதீஸ்வரர் கோயிலில்,  இறைவனையும், இறைவி திரிபுரசுந்தரியையும் வணங்கி அருணகிரியார், ஒரு திருப்புகழ் பாடியுள்ளார்.

சீத மதிய மெறிக்குந் ...... தழலாலே
சீறி மதனன் வளைக்குஞ் ...... சிலையாலே
ஓத மருவி யலைக்குங் ...... கடலாலே
ஊழி யிரவு தொலைக்கும் ...... படியோதான்
மாது புகழை வளர்க்குந் ...... திருவாமூர்
வாழு மயிலி லிருக்குங் ...... குமரேசா
காத லடியர் கருத்தின் ...... பெருவாழ்வே
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே

‘‘குளிர்ந்த நிலவு வீசுகின்ற நெருப்பாலும் சினத்துடன் காமன் வளைக்கின்ற வில்லாலும், நீர் அலைகள் வீசும் கடலாலும் ஒரு யுகாந்த காலம் போல  நீடிக்கும்.  ராக்காலத்தை என்னால் கழிக்க முடியவில்லையே! திலகவதியார் துறவு வாழ்க்கை வாழ்ந்து சிவ புண்ணியம் சேர்ந்த திருவாமூரில் சிரஞ்சீவித்துவம் பெற்ற  மயில் வாகனத்தில் வீற்றிருக்கும் குமரேசா! மிகுந்த அன்பு பாராட்டும் அடியார்களின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் பெரும். செல்வமே!

எமராஜன் (தன் அடியங்களிடத்தில்) வந்தால் அவன் முதுகில் அடித்து விரட்டும் பெருமாளே! (மாது = திலகவதி) பெற்றோரும், தனக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த  மணமகனும் அடுத்தடுத்து இறக்க, நாவுக்கரசரின் தமக்கை திலகவதியார் தானும் உயிர் துறக்க எண்ணினார். ஆனால் தம்பியின் வேண்டுகோளின்படி அவனாக்காக  உயிர் வாழ்ந்தார். காலத்தின் கோலத்தால் சமணமதத்தைத் தழுவிய தம்பிக்கு பிற்காலத்தில் சூலைநோய் ஏற்பட்டு வருந்துவதைக் கேள்வியுற்று தான் சிவத்  தொண்டு புரிந்து வாழ்ந்திருந்த திருவதிகைக்கு வரச்செய்து சிவபிரானை வணங்கிப் பதிகம் பாடவைத்தார் - தம்பி மீண்டும் சைவத்தைத் தழுவி இறைவனாலே  ‘நாவுக்கரசர்’ என்ற அழைக்கப்படுவதற்குக் காரணமாக விளங்கியவர் திலகவதி என்பதால் அவர் பிறந்த ஊரில் அவளை நினைத்து ‘மாது - புகழை வளர்க்கும்  திருவாமூர்’ என்று பாடியுள்ளார்.

எமனைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்த முருகனது பரம பக்தரான அருணகிரியார், கந்தர் அலங்காரத்தில் பின்வருமாறு பாடுகிறார். பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்
பெரு மாள்திரு முன்புநின்றேன் கட்டிப் புறப்பட
டாசத்தி வாளென்றன் கையதுவே. [பாடல் எண் :64]

பசுபதீஸ்வரர் கோயில் மிகச் சிறியது; சமீபத்தில் புதுப்பிக்கப் பட்டதாகத் தெரிகிறது. நுழை வாயிலின் இடப்புறம் முருகனும் வலப்புறம் விநாயகரும் உள்ளனர்.  தலவிருட்சம்- சரக்கொன்றை. பசுபதீஸ்வரரும் திரிபுரசுந்தரியும் அடுத்தடுத்த சந்நதிகளில் உள்ளனர். தட்சிணாமூர்த்தி, திருநாவுக்கரசர், திலகவதி ஆகியோருக்கும்  நவக்கிரஹங்களுக்கும் தனித்தனிச் சந்நதிகள் உள்ளன. நந்திபகவான் கோயிலுக்கு வெளியே அமர்ந்து, சாளரம் வழியாக இறைவனைத் தரிசித்த வண்ணம்  உள்ளார்.

கோயில் கிணற்றிலிருந்து பொது மக்கள் நீர் எடுக்க வந்து விடுவதால் அதைத்தடுக்க வாயில் கதவு எப்போதும் பூட்டியபடியே உள்ளது. (கோயில் வளாகத்தைச்  சுத்தப்படுத்தும் பெண் கதவைத் திறந்து தந்ததோடு மூவலருக்குக் கற்பூர ஆரத்தியும் செய்தார்) தேவார அடியார்களும், ஊர்ப் பொது மக்களும் ஒன்று சேர்ந்து  கோயிலை முறைப்படி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

விழுப்புரத்திற்கும் பண்ருட்டிக்கும் இடையில், விழுப்புரத்திலிருந்து தெற்கே 11 கி.மீ தொலைவிலுள்ள திருத்துறையூர் வந்தடைகிறோம். இக்காலத்தில் திருத்தளூர்  என்று அழைக்கப்படுகிறது. சுந்தரர் இங்கு வந்து இறைவனிடம் தவநெறி வேண்டிப் பெற்றார்.


‘‘அண்ணா உன்னை வேண்டிக் கொள்வேன்தவநெறியே’’

இறைவன் சிஷ்டகுருநாதர், பசுபதீஸ்வரர் - இறைவி சிவலோக நாயகி, பூங்கோதை நாயகி. நுழைவாயிலருகே வலப்புறம் அம்பிகை கோயில் தனியாக உள்ளது.  அம்பிகை நின்றகோலம். எதிரில் கொடிமரம், நந்தி, பலிபீடம் உள்ளன. உள் வாயிலைத் தாண்டி மண்டபத்தை அடைகிறோம். நேரே மூலவர் சந்நதிக்கு  வருகிறோம். கம்பீரமான லிங்கத் திருமேனி. நடராஜ சபை, நால்வர் சந்நதி ஆகியவற்றை வணங்குகிறோம். வெளிப் பிராகாரத்தில் நவக்கிரகங்கள், சூரியன்,  பைரவர், ராமர், பீமன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன. (பீமன் வழிபட்டதால் இவ்வூருக்கு பீமேச்சரம் என்ற பெயரும் உண்டு)

 கோட்ட மூர்த்தங்களான விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை இவர்களை வணங்குகிறோம். தட்சிணாமூர்த்திக்கருகில் உமாமகேஸ்வரர்  சுந்தரருக்குத் தவநெறி நல்கிய காட்சி, சாட்சி விநாயகருடன் கற்சிற்பங்களாக உள்ளன. அஷ்டபுஜ பத்ரகாளி, ஆதிகேசவன் சந்நதிபோன்றவை அழகுற  விளங்குகின்றன. பின்வாயிலருகே உள்ள முருகன் சந்நதி மிக எழிலான தொன்று. பெரிய உருவமாக விளங்குமா முருகப் பெருமான் தேவியருடன் கிழக்கு நோக்கி  நின்ற கோலத்தில் நம்மை மெய்ம்மறக்கச் செய்கிறார். முருகனை விழுந்து வணங்கித் திருப்புகழ் பாக்களைச் சமர்ப்பிக்கிறோம்.

‘‘பூரித்தன பாரச்சடை வேதக்குழ லாள்பத்தர்கள்
பூசைக்கியல் வாள்பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்
போகர்க்குப தேசித்தருள் ...... குருநாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர காசக்குற மான்முத்தொடு
சோதித்துறை யூர்நத்திய ...... பெருமாளே.’’

பூரித்துள்ள தனபாரங்களும், பெரிய சடையும் கொண்டு, வேதங்களையே கூந்தலாகக் கொண்டவள், பக்தர்களின் பூஜைகளை ஏற்றுக் கொள்பவள், கற்புக்கரசியாம்  சிவகாமி, பூவுலகு சமுத்திரம் - அயன், அரி, ருத்ரன் ஆகியோருக்கு மூத்தவள், பத்ரகாளியாகிய தேவி, அனைத்து இன்ப நலங்களும் தரும் சிவபெருமானுக்கு  உபதேசித்தருளிய குருமூர்த்தியே!சூரனும், கிரௌஞ்ச மலையும் எதிர்த்துப் பொடியவும், பொருத அசுரர்கள் தளர்ந்து அழியவும் அயர்ச்சி இல்லாமல் வீரம் வாய்ந்த ஒளி வேலைச் செலுத்திய வெற்றி  வீரனே! மயிலின் இயல்பும் அழகு ஒளியும் உடைய வள்ளியாகி முத்துப் போன்ற தேவியுடன் ஔவீசும் துறையூரில் விரும்பி அமர்ந்த பெருமாளே! ‘வெகுமாய’  எனத் துவங்கும் மற்றொரு திருப்புகழில் பிறவிநோயை ஒழிக்க முருகனை வேண்டுகிறார்.

‘‘வெகுமாய விதத்துரு வாகிய திறமேப ழகப்
படு சாதக விதமேழ்க டலிற்பெரி தாமதில்
சுழலாகி வினையான கருக்குழி யாமெனு
மடையாள முளத்தினின் மேவினும் விதியாரும்
விலக்கவொ ணாதெனு ...... முதியோர்சொல்
தகவாம தெனைப்பிடி யாமிடை கயிறாலு மிறுக்
கிம காகட சலதாரை வெளிக்கிடை யேசெல
வுருவாகிச் சதிகாரர் விடக்கதி லேதிரள்
புழுவாக நெளித்தெரி யேபெறு மெழுகாக வுருக்குமு பாதிகள்
தவிர்வேனோ உககால
நெருப்பதி லேபுகை யெழவேகு
முறைப்படு பாவனை யுறவேகு கையிற்புட மாய்விட
வெளியாகி உலவாந ரகுக்கிரை யாமவர் பல
வோர்கள் தலைக்கடை போயெதிர் உளமாழ்கி மிகக்குழை வாகவு
முறவாடித் தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர் துணையேப ணியத்தரு வாய்பரி
மயில்வேலா துதிமாத வர்சித்தர்ம கேசுரர் அரிமால்பி
ரமர்க்கருள் கூர்தரு துறையூர்ந
கரிற்குடி யாய்வரு ...... பெருமாளே.’’

மாயையின் பல வித செயல்களால் உடல் எடுக்கும் திறம், மீண்டும் மீண்டும் பழகும் பிறப்பு வகைகள் இவை ஏழ்கடல் நீரினும் அதிகமானவை. அத்தகைய  பிறவிக்கடலில் சுழலுற்று, வினைக்கு ஈடாகக் கருக்குழியில் விழ நேரிடும் என்கிற முத்திரையானது உள்ளத்தில் பதிந்திருந்த போதிலும், விதியை யாராலும்  மாற்ற முடியாது எனும் பெரியோர்வர்க்கு மிகப் பொருத்தமானது தான். அந்த விதி என்னைப் பிடித்து, நெருக்கமான கயிற்றால் அழுத்தமாகக் கட்டி, இப்பெரிய  உடம்பிலுள்ள யோனியாகிய ஜலதாரை வழியாகப் பூமியில் பிறக்கச் செய்து உருவத்தை அடைய வைக்கிறது.

புலன்கள் ஐந்தும் வஞ்சனையே செய்ய, மாமிசத்திலே குவிந்து புழுப்போல் நௌிந்து, தீப்பற்றிய மெழுகு போல் உடலையும் உள்ளத்தையும் உருக்கும்  வேதனைகளை ஒழிக்க மாட்டேனோ? யுக முடிவில் தோன்றும் அக்னிப் பிழம்பு புகையெழக் கொதிப்பது போன்ற கோபக்குறிகளை யாசிப்பவரிடம் காட்டி  உலோகங்களை புடம் வைத்தாற் போன்று உள்ளம் கொதிப்பை பெற்று வெளிவருகிறது. அழியாத நரகத்திற்கு இரையாகப்போகும் அத்தகு தீயவர் வீட்டு வாசலிற்  சென்று, அவர்கள் எதிரே நின்று, உள்ளம் வேதனை அடைந்து, பணிவுடன் பேசி, சேரும் வினை எனக்கு இனி வேண்டாம். குதிரை போன்ற மயிலையும்,  வேலையும் உடையவனே! நான் திருந்துவதற்கு உனது திருவருள் மிகுந்த சிறந்த பாத தாமரைகளை எனக்குத் துணையாக அளிப்பாயாக.

துதிக்கின்ற மகாதவசிகள், சித்தர்கள், ருத்ரன், திருமால், பிரமன், இந்திரன் ஆதியோர்க்கு அருள் புரியும் பெருமாளே! துறையூர் நகரில் குடியாய் அமர்ந்திருக்கும்  பெருமாளே! (உடலை உருக்கும் உபாதிகளை நான் ஒழிய மாட்டேனோ?) ‘சிவஞான சித்தியார்’ எனும் தலையாய சைவ சித்தாந்த நூலை இயற்றிய அருணந்தி  சிவாச்சாரியார் அவதரித்து முத்தி பெற்ற திருத்தலம் திருத்துறையூர். அவரது சந்நிதானமும், சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொண்டு இறைவன்  சந்நிதானமும் கோயிலுக்கு வெளியே திருக்குளத்தருகில் உள்ளன. சுந்தரரைத் தடுத்தாட் கொண்டு தவநெறியை அளித்த இறைவனைத் தரிசித்த போது, சுந்தரர் அவதரித்த திருநாவலூர் செல்ல விழைகிறது மனம். அருணகிரி  உலாவில் அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் திருத்தலம் திருநாவலூர்.

சித்ரா மூர்த்தி

(உலா தொடரும்)

Tags : Shanmukhan ,Lord ,
× RELATED நாகூரில் புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா குளத்தில் தூய்மைப்பணி