×

திருக்குளம் தந்த திருவருட்செல்வர்

தண்டியடிகள் குரு பூஜை : 2.4.2019

சைவம் தழைத்த தமிழ்நாட்டின் புகழ்பெற்ற பழம் பதிகளுள் குறிப்பிடத்தக்கது திருவாரூர் ஆகும். திருவாரூரில் பிறந்தால் ‘முக்தி’ என்று நம்முடைய புராணங்கள் புகழ்ந்து பேசும்.‘திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லாருக்கும் அடியேன்’ என்பார் சுந்தரர். ‘ஆரூர்ப் பிறத்தல் நேர்படின் அல்லது செயற்கையின் எய்தும் இயற்கைத்தன்றே’எனச் சிதம்பர மும்மணிக் கோவையில் குமரகுருபரர் குறிப்பார்.  இத்தகைய சிறப்புடைய  திரு ஆரூரில் பிறக்கும் பெருமை பெற்றவரே தண்டியடிகள் என்பதால்தான் சேக்கிழார் இவரைத்; ‘திருஆரூர்ப் பிறக்கும் பெருந்தவமுடையார்’ என்றார். தண்டியடிகள் பிறந்த காலம் தொடங்கி இரண்டு கண்களிலும் பார்வை இழந்தவராய் வாழ்ந்து வந்தார். இதனைச் சேக்கிழார்பெருமான்,

தண்டியடிகள் திருவாரூர்ப் பிறக்கும் பெருந்தவமுடையார்
அண்ட வாயர் மறைபாட ஆடுஞ்செம்பொன் மழன் மனத்துக்
கொண்ட கருத்தின் அகநோக்கும் குறிப்பேயன்றி புறநோக்கும்
கண்ட உணர்வு துறந்தார்போல் பிறந்தபொழுதே கண்காணார்

என்று குறிப்பார். புறக்கண்களால் வெளி உலகக் காட்சிகளைக் காண இயலாது போயிற்றே ஆயினும் அகக் கண்களால் சிவபெருமானையே கண்டு உவந்து வந்தார். எனவேதான், சுந்தரரும் ‘நாட்டமிகு தண்டி’ எனக் குறித்தார். ‘அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்’ என்னும் திருமூலர் வாக்கும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாம். தனக்குக் கண் தெரியாது என்பதனைக் குறையாகக் கருதாது தன்னால் இயன்ற உதவிகளைப் பிற சிவனடியார்களுக்கும் செய்து வந்தார். இந்நிலையில் திரு ஆரூரில் அமைந்திருந்த திருக்கோயிலின் குளக்கரையில் மேற்குப் பகுதியில் சமணர்கள் வாழும் மடங்கள் இருந்தன. அப்பாழிகள் அமைந்திருந்தமையால் திருக்குளத்தின் இடப் பரப்பிற்கு குறைபாடு நேர்ந்தது. அதனைக் கண்ட தண்டியடிகள்  திருக்குளத்தின் தன்மையை ஆழப்படுத்தும் பொருட்டு முயற்சி மேற்கொண்டார்.

செங்கண் விடையவர் திருக்கோயில் குடபால் தீர்த்தக் குளத்தின்பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய் இடத்தாற் குறைபாடு எய்துதலால்
அங்கந் நிலைமை தனைத்தண்டி அடிகள் அறிந்தே ஆதரவால்
இந்குநான்அக் குளம்பெருகக் கல்ல வேண்டும் என்றெழுந்தார்

தனக்கு புறக்கண் இல்லை என்பதனால் குளத்தினைத் தோண்டிய மண்ணினை வெளியில் அப்புறப்படுத்துதற்குப் ஒரு புதிய உத்தியினை மேற்கொண்டார். அதன்படி திருக்குளத்தின் நடுப்பதியில் ஒரு கம்பினை நட்டார். அதன்மேல் ஒரு கயிற்றினைக் கட்டினார். அதனை வெளியில் நடப்பட்டிருந்த பிறிதோர் கம்பில் கட்டினார்.  வெட்டிய மண்ணினைப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு கயிற்றினைப் பிடித்தவாறு வெளியில் சென்று கொட்டி வந்தார். இறைத் திருவருளும்  தண்டியடிகளுக்குக் கைகொடுக்க இத்திருப்பணி இனிதே நடைபெற்று வரலாயிற்று. அந்நிலையில் அக்குளத்தின் மேற்குக் கரைப் பகுதியில் வாழ்ந்த சமணர்கள் தண்டியடிகளின் இத்தகைய செயலைக் கண்டனர். இந்தச் செயலினால் குளத்தில் வாழும் உயிர்கள் வருத்தமுற்று அழியும் எனச் சொல்லி எதிர்ப்பைத் தெரிவித்தனர். தினமும் தன் உடலினைக் கூடத் தூய்மை செய்யாத சமணர்களின் இத்தகைய சொல்லினைக் கேட்ட தண்டியடிகள் இச்செயலானது சிவச் செயல் எனக் கூறித் தொடர்ந்து செய்து வந்தார். இதனை,

மாசு சேர்ந்த முடையுடலார் மாற்றங் கேட்டு மறுமாற்றம்
தேசுபெருகுந் திருத்தொண்டர் செப்புகின்றார் திருவிலிகாள்
பூசு நீறு சாந்தமெனப் புனைந்த பிரானுக் கானபணி
ஆசி லாநல் லறமாவது அறிய வருமோ உமக்கென்றார்

என்ற சேக்கிழாரின் பாடல் எடுத்துக்காட்டும். ஒளி பொருந்திய தண்டியடிகள் அவர்களின் பேச்சினைக் காதில் கேளாதவராய்த் தன் பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். அதனைக் கண்ட சமணர்கள் கோபம் மிகக் கொண்டவர்களாய் ‘உமக்குக் கண்தான் தெரியாது, காதும் கேட்காமல் போயிற்றோ’ என ஏளனம் செய்தனர். அவர்களின் பேச்சினைக் கேட்ட தண்டியடிகள் சிவபெருமானின் திருவருளால் எனக்குக் கண் தெரிந்து உமக்குக் கண் தெரியாமல் போனால் என்ன செய்வீர்கள்? என வினவினார்.

வில்லால் எயில் மூன்றெரித்தபிரான் விரையார் கமலச் செவடிகள்
அல்லால் வேறு கணேன்யான் அதுநீர் அறிதற்கு ஆர் என்பார்
நில்லா நிலையீர் உணர்வின்றி நுங்கண் குருடாய் என்கண் உலகு
எல்லாம் காண யான் கண்டால் என்செய்வீர் என்றெடுத்துரைத்தார்
அதனைக் கேட்ட சமணர்கள் அத்தகைய செயல் ஒன்று நடக்குமானால் பெருகும்  இவ்வூரில் யாம் இருக்கமாட்டோம்
என்றனர். இதனை,

அருகர் அதுகேட்டு உன்தெய்வத் தருளால் கண்நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வுயிரினில் நாங்கள் இருக்கிலோம்

என்ற சேக்கிழார் குறிப்பால் அறியலாம். இதன்படி சமணர்கள் ஊரினை விட்டுச் செல்வார்கள் எனில் அந்த ஊர் பெருகும் என்பது குறிப்பாம். சமணர்கள் இவ்வாறு கூறியதோடு மட்டும் நில்லாமல் தண்டியடிகள் குளத்தில் கட்டியிருந்த கயிற்றினையும் அறுத்தெறிந்தனர். அவர்களின் செயல் கண்டு கலங்கிய தண்டியடிகள் ஆரூரில் அருட்பாலிக்கும் சிவபெருமானைக் கண்டு தான் மேற்கொண்ட சிவத் திருப்பணியைத் தொடர்ந்து முடித்தற்கும் சமணர்களின் தீய எண்ணம் தொலைதற்கும் அருள் செய்ய வேண்டி நின்றார். உலகம் யாவையும் தன் திருவருட் சித்தத்தால் படைத்துக் காக்கும் எம்பெருமான் தண்டியடிகளின் கனவில் தோன்றி அஞ்சற்க! கவலையை விடுக! உன்னால் செய்யப்படும் அருஞ்செயலின் அருமை தெரியாது செயலுக்குத் தடை ஏற்படுத்தியதுடன் கண்ணில்லாதவன் என்றும் இகழ்ந்து கூறிய சமணர்கள் நாளை கண்ணிழப்பர், நீயோ கண் பெறுவாய்! என்று கூறி அருள் செய்தார்.

நெஞ்சில் மருவும் கவலையினை ஒழிநீ நின்கண் விழித்து அந்த
வஞ்ச அமணர்கள் தங்கள்கண் மறையுமாறு காண்கின்றாய்!
அஞ்ச வேண்டா என்றருளி அவர்பால் நீங்கி அவ்விரவே
துஞ்சும் இருளின் அரசற்பால் தோன்றிக் கனவில் அருள் புரிவார்

இறைவன் சோழ மன்னனின் கனவிலும்  தோன்றி அடியவா! நமது தொண்டனாகிய தண்டி என்பான் செய்யும் திருப்பணியைச் சமணர்கள் தடுத்ததுடன் அவனுக்குத் துன்பம் செய்தனர். நீ சமணர்களைத் தண்டித்து தண்டியடிகளின் கருத்தினை முற்றுவிப்பாய் என்று கூறினார். கண்விழித்த அரசன் தண்டியடிகள் இருக்கும் இடம் வந்து தன் கனவினைப் பற்றிக் கூறினான். உடன் இருவரும் இணைந்து குளக் கரைக்குச் சென்றனர். அங்கு சமணர்கள் தண்டியடிகளின் செயலினைத் தடுக்கும் பொருட்டு நின்றனர். அரசனுடன் வந்த தண்டியடிகளைப் பார்த்து எங்கே! உம் இறைவனிடத்தில் இருந்து கண்பெற்றுக் காட்டு! என ஏளனம் செய்தனர். உடன் தண்டியடிகள் நான் உண்மையான சிவனடியார் எனில் இம் மன்னனின் முன் என் கண்ணில் ஒளி வரட்டும்! சமணர்களின் கண்ணில் ஒளி போகட்டும்! என்றார். மேலும், இறைவனின் திருமந்திரமாகிய ‘நமசிவாய’ மந்திரத்தினையும் ஓதினார்.

ஏய்த்த அடிமை சிவனுக்கு யான் என்னில் இன்றென் கண்பெற்று
வேந்தன் எதிரே திருவாரூர் விரவும் சமணர் கண்ணிழப்பார்
ஆய்ந்த பொருளும் சிவபதமே ஆவதென்றே அஞ்செழுத்தை
வாய்ந்த தொண்டர் எடுத்தோதி மணிநீர் வாவி மூழ்கினார்

தண்டியடிகள் இவ்வாறு இறைவனை வேண்டியவுடன் அவருக்குக் கண் வந்தது. சமணர்கள் தங்கள் கண்களை இழந்தனர். கண் இழந்த சமணர்கள்,
குழியில் வீழ்வார் நிலை தளர்வார் கோலும் இல்லை என உரைப்பார்
வழியீ தென்று தூறடைவார் மாண்டோம் என்பார் மதிகெட்டீர்
அழியும் பொருளை வழிபட்டு இங்கு அழிந்தோம் என்பார் அரசனுக்குப்
பழியீதாமோ என்றுரைப்பார் பாய்க ளிழப்பார் பறிதலையர்
 
எனத் தடுமாறினர். தேவர்கள் தண்டியடிகளின் பக்தித் திறத்தினை அறிந்து மலர் மாரி தூவி வாழ்த்தினர். அரசன் அவரை வணங்கி அரண்மனை சென்றான். தண்டியடிகள் தான் செய்ய நினைத்த  திருக்குளம் ஆழப்படுத்தும் பணியைச் செய்துப் பலகாலம் சிறப்புற வாழ்ந்து சிவபெருமான் திருவடியை அடைந்தார். இத்தகைய சிறப்புடைய தண்டிநாயனாரின்  குருபூசை வருகின்ற பங்குனி 19ஆம் தேதி ஏப்ரல் 02ம் தேதி, சதய நட்சத்திரத்தில் வருகின்றது. இந்நாளில் பிரதோஷமும் சேர்ந்து வருவது மேலும் சிறப்புடைத்தாம். எனவே, இந்நன்னாளில் ஆண்டவன் திருவருளால் அகக், கண்ணும் புறக்,கண்ணும் பெற்றுச் சிறந்த தண்டியடிகளை வணங்கி ஞானக்கண் பெற்று நலம் பெறுவோமாக!.

Tags :
× RELATED பாரதத்தின் பழமையான சிவலிங்கம்