×

வேடசந்தூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

வடமதுரை :திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர், எரியோடு, பாளையம், குஜிலியம்பாறை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில்  விவசாயிகள் பணப்பயிராக தக்காளியை நடவு செய்து வருகின்றனர். தக்காளி 3 மாதம் முதல் 6 மாதம் வரை நாள் விட்டு நாள் வருமானம் தரக்கூடிய பயிராகும். இதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெற்று  வந்த நிலையில் நாட்டுத்தக்காளியை மறந்து ஹைபிரிட் தக்காளிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் குறுகிய நிலத்திலும் தக்காளி சாகுபடி விரும்பி செய்து வருகின்றனர். தினசரி மார்க்கெட்டுகளான அய்யலூர் மற்றும் வேடசந்தூர் தக்காளி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்திலிருந்தும் போட்டி போட்டுக் கொண்டு அய்யலூர் சந்தைக்கு வந்து தக்காளியை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் பகுதியில் தக்காளி அதிக வரத்து உள்ளது. இதனால், அய்யலூர், வேடசந்தூர் பகுதியில் தக்காளிக்கு விலை கிடைக்கவில்லை. 15 கிலோ கொண்ட பெட்டி ரூ.100க்கு விற்பனை  செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு நடவு கூலி, உழவு கூலி, எடுப்பு கூலி மார்க்கெட்டுக்கு கொண்டு செல்லும் செலவு என அதிக உயர்வால் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக விவசாயிகள் கோரிக்கையான தக்காளிக்கு பதப்படுத்தப்படும் தொழிற்சாலை மற்றும் ஜூஸ் செய்யப்படும் தொழிற்சாலை அமைத்து தர வேண்டி வலியுறுத்தியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் பிரச்னையை தீர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்….

The post வேடசந்தூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Vadamadurai ,Ayyalur ,Eriodu ,Palayam ,Kujiliamparai ,Dindigul district ,
× RELATED வேடசந்தூர் அருகே பெண் மர்மநபர்களால் வெட்டிக் கொலை