×

பாதுகாவலனாய் வருவான் பாவாடை ராயன்

நம்ம ஊரு சாமிகள் : வில்லிவாக்கம், சென்னை

தமிழ் மக்களின் காவல் தெய்வங்களில் ஆண் தெய்வங்கள் வரிசையில் முக்கியமாக கருதப்படுபவர் பாவாடைராயன். பராசக்தி, பார்வதிதேவியாக பிறந்து அங்காளபரமேஸ்வரியாக போற்றப்பட்ட அவதாரத்தில் அவருக்கு மகனாக பக்தர்களால் வணங்கப்படும் தெய்வம் இந்த பாவாடைராயன் தான். அன்னை ஆதிபராசக்தியின் மடியில் அமர்ந்து அருள் வழங்கும் கோலத்தில் பால விநாயகனுக்கும், பால சுப்பிரமணியனுக்கும் அடுத்து இருக்கும் தெய்வம் பாவாடைராயன் தான். பெரும்பாலான அங்காள பரமேஸ்வரி ஆலயங்களில் பாவாடைராயன் நிலையம் கொண்டிருப்பார். சில பகுதிகளில் தனிக்கோயிலும் கொண்டுள்ளார். பிரம்மஹத்தி தோஷம் பிடித்த பிறைசூடிய பெருமான், கோட்டியப்பனாக, பரதேசியாக அலைந்தார். அந்த கால கட்டத்தில், கல்விக்காடு என்ற பகுதிக்கு தலைவனாக இருந்தவன் பெத்தாண்டவன். இவன், தனது நாட்டின் அருகில் உள்ள பல இடங்களுக்கும் சென்று பொன்னும், பொருளும் சேர்த்து வைத்திருப்பவர்களிடம் இருந்து கொள்ளை அடித்து, அதை தமது குடி மக்களில் ஏழை, எளியோர்களுக்கு வழங்கி வந்தான்.

மாமன்னர்கள் முதல் சிற்றரசர்கள் வரை வேட்டையாடுதலை பொழுது போக்காக வைத்திருப்பார்கள். ஆனால் பெத்தாண்டவனுக்கு அண்டை நாடுகளில் கொள்ளை அடிப்பதே பொழுதுபோக்காக இருந்தது. ஆனால் தமது நாட்டில் எந்த கொள்ளையர்களும் புகாதவாறு ஆட்சி புரிந்து வந்தான். எல்லா செல்வங்களையும் பெற்றிருந்த பெத்தாண்டவனுக்கு, தமக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் நீண்ட காலமாக இருந்து வந்தது. ஆகவே, அவனும் அவனது மனைவி பெத்தாண்டவச்சியும், தங்களுக்கு குழந்தை வேண்டி தினமும் சிவனைப் பிரார்த்தித்து வந்தனர். அப்போது ஒரு நாள், பரதேசி கோலத்தில் திரிந்து கொண்டிருந்த சிவன், அவர்கள் வீட்டு வாசலில் பிச்சை வேண்டி நின்றார். தர்மம் கொடுக்க வந்த பெத்தாண்டவச்சி, ஆண்டி கோலத்தில் நின்ற சிவனிடம், தங்கள் குலம் தழைக்க புத்திர பாக்கியம் கிடைக்க வழி சொல்ல வேண்டும் என்றாள். அப்போது சிவபெருமான் தன்னிடமிருந்த விபூதியை வழங்கி, இதை வாயில் போட்டு, நீர் அருந்து உங்கள் குலம் தழைக்க ஒரு புத்திரன் பிறப்பான், அவனால் உங்கள் வம்சம் புகழ் அடையும் என்றும் ஆசீர்வதித்துச் சென்றார்.

சிவனின் வாக்குப்படி, சிலநாட்கள் கடந்த நிலையில் பெத்தாண்டவச்சிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு தங்கள் ஊரான கல்விக்காட்டை காப்பவன் என்று பொருள்படும்படி “கல்விகாத்தான்” என்ற பெயரை சூட்டி தம்பதியர் வளர்த்து வந்தனர். அவனுடைய ஐந்தாவது வயதில், அவனுக்கு கல்வி, கலை மற்றும் வீர விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் அளிக்கப்பட்டது. அவைகளில் ஆர்வத்துடன் கற்றுத் தேர்ந்தான். அவனுக்கு குறிப்பிட்ட வயது வந்தவுடன், அவனை அழைத்த தந்தை பெத்தாண்டவன், தமக்கு வயதாகிவிட்டதால், தம் மக்களை காப்பதற்காக, நீ நமது குலத்தொழிலை ஏற்றுக்கொள்ள வேண்டுமென பணித்தார். கொள்ளை அடிப்பது, குடிகளை சாய்ப்பது, உயிர்களைக் கொல்வது போன்ற பழி நேரும் தொழில்களை செய்வதற்கு கல்விகாத்தானுக்கு மனமில்லை. ஆனாலும், தந்தையை எதிர்த்துப் பேச முடியாத நிலையில் இருந்த கல்விக்காத்தான் ஒப்புதலுக்காக தலையை அசைத்தான். அன்றிரவு அவனது அறையில் தூங்காமல் தவித்த அவன், இரவோடு, இரவாக வீட்டை விட்டு வெளியேறினான். தனது கால்போன போக்கில் நடை பயின்றான்.

தமது நாட்டு எல்லைகளையெல்லாம் கடந்து நடந்தவன், அடர்ந்த வனப்பகுதிக்கு வந்துவிட்டான். அன்று அமாவாசை. இயல்பான இரவை விட, அமாவாசை இரவில் இருள் அதிகமாக சூழ்ந்திருந்தது. இரவு என்பதாலும், காட்டு மிருகங்கள் எழுப்பிய சப்தத்தாலும் பயந்து நடுங்கி நின்றுகொண்டிருந்தான். என்ன செய்வது என்று தெரியாமல், அவன் தவித்த பொழுது, கண்ணைப் பறிக்கும் ஜோதி ஒன்று அங்கே தக தகவென ஜொலித்தது. அதைக்கண்டு பிரம்மித்தவன் பின்னர் அஞ்சி கூக்குரலிட்டான். உடனே, ஆதிசக்தி அசரீரியாக பேசினாள்.‘‘அஞ்சாதே! நான் தான் பராசக்தியின் அம்சமான அங்காளபரமேஸ்வரி! நான், தவமிருக்கும் எல்லைக்குள் நீ ஏன் வந்தாய்?’’ என்று வினவ, கல்விக்காத்தானும் தனது தந்தையின் எண்ணோட்டத்தை எடுத்துக்கூறி, நடந்த சம்பவத்தை விளக்கினான். அனைத்தையும் கேட்ட தேவி,‘‘நான் உன் துணையிருப்பேன், இன்றிரவு இங்கேயே இருந்துவிட்டு, சூரிய உதயத்திற்கு பின் எழுந்து செல்.’’ என்று கூறினாள்.  அசரீரி முடிந்ததும். அந்த பிரகாச ஒளி, புற்றாய் வளர்ந்திருந்த அங்காள பரமேஸ்வரியைக் காட்டியது. அம்மா என்று அங்காள பரமேஸ்வரியின் பாதங்களில் சரணாகதி அடைந்த கல்விக்காத்தான் அவ்விடம் இருந்தான். தூக்கம் வரவில்லை என்ன செய்யலாம் என்று யோசித்தான். பின்னர் அங்கே அம்பாளுக்கு அவனால் முடிந்த அளவு கோயில் கட்டினான். (அதுவே மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி மூல ஆலயமாக திகழ்ந்தது.) புற்றைச் சுற்றியிருந்த மண்ணால் அம்மனின் உருவத்தைப் பிடித்தான். அம்பாள் அமர்ந்த கோலத்தை அழகாய் பிடித்திருந்த அவன், காலையில் மேய்ச்சலுக்காக  அவ்விடம் வந்த பசுமாடுகளிடமிருந்து பாலை கறந்து அம்மன் முன் வைத்தான். நுரை பொங்க இருந்த பால் சிறிது நேரத்தில் மஞ்சள் நிறத்தில் ஆடை படிந்திருந்தது. அந்த பாலாடையை அகற்றினான் கல்வி காத்தான். அப்போது அது அவன் கைகளில் ஒட்டிக்கொள்ள தன்னையறியாமல் அதை நாவால் ருசித்தான். பின்னர் தவறை உணர்ந்த கல்விக்காத்தான். தன் செயலுக்கு வருந்தி, தனது கையையும், நாவையும் கத்தியால் வெட்டலானான்.

இந்த இரண்டு  உடற்பாகங்கள் தானே அம்மனுக்கு படைத்த உணவை ருசிக்க வைத்தது என்றெண்ணி இந்த செயலுக்கு முன் வந்தான். நாவையும், கையையும் வெட்டி, அம்மன் முன் வைத்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான். அவனது உதிரம் மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை உருவத்தில் பட்டதும் அம்மன் ஆங்காரமாக அகோர ரூபத்தில் அவன் முன் தோன்றி, அவனை சாந்தப்படுத்தினாள். பின்னர் அவ்விடம் அமர்ந்த அன்னை, கல்விக்காத்தானிடம், தவறை உணர்ந்து உன்னையே நீ தண்டித்து விட்டாயே என்று கூறி, இழந்த உறுப்புகள் மீண்டும் உன் உடலோடு இணையும். முன்பு போலவே இருப்பாய் என்று கூறினாள். அதன்படி கையும், நாவும் சரியானது. அதன் பின்னர் கல்விக்காத்தனிடம் பேசிய அன்னை, பாலாடையை உண்ட மன்னன் நீ என்பதால் இன்றுமுதல் பாலாடை மன்னன் என்று அழைக்கப்படுவாய். உனக்கு என்னிடத்தில் இடம் உண்டு. என்னை வணங்கும் அன்பர்கள் உனக்கு உரிய பூஜையை கொடுப்பார்கள். உனக்கும் ஆக்கும் வரம், அழிக்கும் வரம் தந்தேன் என்றுரைத்தாள் அங்காள பரமேஸ்வரி. பாலாடைரா மன்னன் என்பது பின்னாள் பாவாடை மன்னன் என்றானது.

அதுவே பாவாடைராயன் என்றானது. ராயன் என்றால் மன்னன், உயர்ந்தவன் என்று பொருள். மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி ஆலயத்தின் உள் பிராகாரத்தில் அன்னைக்கு அருகிலேயே அமர்ந்து பாவாடைராயன் பக்தர்களுக்கு அருட்பாலிக்கிறார். அங்காள பரமேஸ்வரிக்கு தமிழகத்தில் பல இடங்களில் கோயில் உள்ளது. சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள கோயிலில் பாவாடை ராயன் அம்மனுக்கு காவலாக வீற்றிருக்கிறார். வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி, இரவு கோயில் வளாகத்தில் பெற்றோர்களோடு படுத்திருக்கும் போது குளிர் தாங்க முடியாமல் தூக்கம் கலைந்தாள். கோயில் முகப்பில் இருந்த அங்காளபரமேஸ்வரியின் விக்ரகம் அருகே அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு வெளியே எடுத்து வைத்திருந்த பட்டுச் சேலை ஒன்றை எடுத்துவந்து போர்த்திக்கொண்டு தூங்கினாள்.

விடிந்ததும் பெற்றோர் எங்கே சத்தம் போட்டு விடுவார்களோ என அஞ்சிய அந்த சிறுமி அந்த பட்டுச்சேலையை அவர்கள் கொண்டு வந்த பைக்குள் வைத்துக்கொண்டாள். சென்னை வந்து பின்னர் கோயில் பட்டுச்சேலை விபரத்தை அந்த சிறுமி பெற்றோர்களிடம் கூறினாள். உடனே சிறுமியின் தாய் அந்தச்சேலையை வில்லிவாக்கம் சிட்கோ நகரில் இருந்த கிணற்றில் கொண்டு போட்டுள்ளார். இதனால் சேலையோடு வந்த அங்காளபரமேஸ்வரி அம்மன், அங்கிருந்த வேப்பமரத்தில் குடிபுகுந்தாள். தான் அங்கு குடியிருப்பதை அப்பகுதியில் வசித்து சேகர் மனைவி புஷ்பாவின் கனவில் வந்து அம்மன் கூற, மறுநாளில் இருந்து அந்த மரத்துக்கு பூஜை செய்து வந்தார் புஷ்பா. நாட்கள் சில கடந்த நிலையில் அந்த மரம் அகற்றப்பட்டு விட்டது. மரம் அகற்றப்பட்ட பின்னர் அங்காள பரமேஸ்வரிக்கு தன் வீடு அருகே கோயில் அமைத்தார் புஷ்பா. அந்த கோயிலில் காளி, அங்காள பரமேஸ்வரி, பெரிய பாளையத்தம்மன் மூவரும் நிலையம் கொண்டு அருளாட்சி புரிகின்றனர். இந்தக்கோயிலில் காவல் தெய்வமாக பாவாடைராயன் உள்ளார்.

சு.இளம் கலைமாறன்

Tags :
× RELATED காமதகனமூர்த்தி