×

திருவாரூரில் தியாகேசா கோஷம் விண்ணதிர ஆழித் தேரோட்டம் கோலாகலம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆழி தேரோட்டம் இன்று  நடைபெற்றது.  இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 5 மணியளவில் விநாயகர், சுப்பிரமணிய தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமைமிக்க ஆழித்தேர் இன்று காலை 7. 15 மணியளவில் திருவாரூர் கீழவீதி நிலையடியிலிருந்து தேரோட்டம் துவங்கியது.

இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘தியாகேசா, ஆரூரா’ கோஷமிட்டனர். அதன் பின்னர் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டன. ஆழித்தேரோட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில், உள்ளூர் மக்கள், வெளி மாவட்டம் மற்றும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் ஆழித் தேரானது மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்டவடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பினை கொண்டதாகும்.

உலக புகழ்பெற்ற ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர் மொத்தம் 20 பட்டைகளை கொண்டு, நான்கு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. கீழ்பகுதி 20 அடி உயரமும், 2வது பகுதி 4அடி உயரமும், 3வது பகுதி 3அடி உயரமும் கொண்டதாகவும். இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதியும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். மேலும் சாதாரணமாக 30 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட இந்த தேரானது 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டதாகும்.

தேரோட்டத்தின் போது மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரை 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு சுமார் 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளிலும்  அசைந்தாடியபடி நகர்ந்து செல்லும் காட்சியானது கண்கொள்ளா காட்சியாகும்.

Tags : Thiruvarur ,shelter ,Thiyayasai ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...