×

கல்யாண யோகம் தரும் காசி விஸ்வநாதர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 3 மைல் தொலைவில் உள்ள புதுப்பேட்டையில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. முற்காலத்தில் இந்த இடம் ரோஜா செடிகள் நிறைந்த நந்தவனமாக இருந்ததால் ரோஜாவனம் என்று அழைக்கப்பெற்றது. தஞ்சை மன்னர் ஒருமுறை காசியை வென்று அங்கிருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்தார். வழியில் ரோஜாவனத்தின் அழகில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டான். பின்னர் தன்னுடன் வந்த படைவீரர்கள் வழிபடுவதற்காக சிவன் கோயில் ஒன்றை நிறுவினார். அதில் தான் காசியில் இருந்து கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சுவாமிக்கு கங்கை நீரால் கும்பாபிஷேகம் நடத்தினார். கோயிலுக்கு அருகில் உள்ள குளத்தில் கங்கை நீரை கலந்ததால் அது கங்கை தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மூலவராக காசி விஸ்வநாதரும், அம்பாள் விசாலாட்சியும் அருள்பாலிக்கிறார்கள்.

சிறப்புகள்:

புதுப்பேட்டை காசிவிஸ்வநாதர் வணங்குபவர்கள் காசிக்கு சென்ற புண்ணியமும் கங்கை நதியில் நீராடிய நன்மையையும் பெறுவார்கள் என்பது ஐதிகம். திருமணத்தடை உள்ளவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்டநாள் வழக்கு தீர்வுக்கு வரும் என்பது நம்பிக்கை. இது தவிர ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 25, 26 மற்றும் 27ம்தேதிகளில் காலையில் மூலவர் லிங்க திருமேனி மீது சூரியஒளி விழும் அற்புத நிகழ்வு நடைபெறும்.

பறவை சின்னம்:

விஜயநகர மன்னர் படையில் சைனிக மரபினர் படை தலைவர்களாகவும், வீரர்களாகவும் இருந்தனர். இவர்கள் இருதலை பறவை சின்னம் பொறித்த கொடியை மரபுக் கொடியாக வைத்திருந்தனர். இந்த பறவை சின்னம் கோயிலில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள நந்தி பகவான் கழுத்தில் கயிறு, மணிகள் அணிந்தபடி வடிக்கப்பட்டுள்ளது சிறப்பு. அம்பாள் விசாலாட்சி, தட்சணாமூர்த்தி, விஷ்ணுதுர்க்கை, 63 நாயன்மார் சிலைகள் தனி சன்னதியாக உள்ளது.
 
விழக்காலங்கள்:

சித்திரை மாதம் வருடபிறப்பு அன்று மூலவருக்கு பால் அபிஷேகம், வைகாசி மாதம் பவுணர்மி பூஜை, ஆனி மாதம் நடராஜர் உற்சவம், ஆடி மாதம் அம்பாள் ஆடி பூரம், ஆவணி மாதம்விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாதம் நவராத்திரி, ஐப்பசி மாதம் அன்ன அபிஷேகம், கார்த்திகை மாதம் சோமவார சங்கு அபிஷேகம், மார்கழி மாதம் தனுர் மாத பூஜை மற்றும் நடராஜர் உற்சவம், தை மாதம் மகர சங்கராந்தி பூஜை, மாசி மாதம் மஹா சங்கடஹர சதுர்த்தி ஹோமம், பங்குனி மாதம் உத்திரம் ஆகிய விழாக்கள் நடைபெறுகிறது.

செல்வது எப்படி?

பண்ருட்டியில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் புதுப்பேட்டை காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. பேருந்து, ஆட்டோ வசதி உண்டு.

Tags : Kasi Viswanath ,
× RELATED தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்...