×

விருத்தாம்பிகை பாலாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர் அருள்பாலிப்பு

விருத்தகிரீஸ்வரர் விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இருக்கிறது. இத்திருக்கோயில். நடுநாட்டு சிவாலயங்களில் ஒன்பதாவது திருத்தலமாகும். விருத்தாசலம், விருத்தகாசி, பழமலை, திருமுதுகுன்றம் என இதற்கு பல பெயர்கள் உள்ளன. இத்தலம் புராண பெருமையும் வரலாற்றுச்செறிவும் நிறைந்து காணப்படுகிறது. நால்வரால் பாடல் பெற்ற இத்தல ஈசனைவள்ளலார், குருநமச்சிவாயர், குமாரதேவர் ஆகியோரும் பாடிப்பணிந்துள்ளார்கள். இத்தலம் ஐந்தின்சிறப்புகளை கொண்டது. இத்தலத்திலுள்ள திருச்சுற்றுகள் ஐந்து. கோபுரங்கள் ஐந்து. கொடிமரங்கள், நந்திகள், தீர்த்தங்கள், மூர்த்திகள், லிங்கங்கள், தேர்கள், திருக்கோயில் உள்மண்டபங்கள், இத்தலவிநாயகர்கள் என எல்லாமே ஐந்து மயம்தான்.

பரந்துவிரிந்து கிடக்கும் இத்தலத்தை முழுதாக தரிசிக்க ஒருநாள் போதாது. நுழைவுவாயிலைக் கடந்து உள்ளே சென்றவுடன் நாம் தரிசிக்கும் ஆழத்துபிள்ளையார் கிழக்குமுகமாக 18 அடி ஆழத்தில் இருக்கிறார். அறுபடைமுருகனுக்கு உள்ளது போன்று விநாயகருக்கான ஆறு வீடுகளில் இதுவும் ஒன்று. கைலாசபிராகாரத்தில் 28 ஆகமக்கோயில் இருக்கிறது. 28 ஆகமங்களும் சிவலிங்கங்களாக அமைக்கப்பட்டு இத்தலத்தில் பூஜிக்கப்படுகின்றன. வடக்குகைலாச பிராகாரத்தில் அன்னை பெரியநாயகி அருள்பொங்க நிற்கிறாள். அன்னையை விருத்தாம்பிகை என்றும் அன்போடு அழைப்பார்கள்.

அன்னையின் தரிசனம் மனஇருளை நீக்கி உள்ளத்தெளிவுதரும். அன்னையின் சன்னதியின் வெளிப்புறம் சிவகதி அடைந்த நாதசர்மா அநவர்த்தினிதம்பதியின் கோயிலை தரிசிக்கிறோம். வன்னியடிபிராகாரத்தில் மடப்பள்ளிக்கு மேல்புறம் தலவிருட்சமான வன்னிமரம் இருக்கிறது. இங்கே பிள்ளையார், விபசித்துமுனிவர், உரோமேசமுனிவர், விதர்க்கணசெட்டி, குபேரனின் தங்கை ஆகியோரின் தரிசனம் பெறுகிறோம். கொடிமரமண்டபத்தில் உற்சவமூர்த்தியான பெரியநாயகரின் அழகுதரிசனம். அடுத்து ஆடலரசனின் ஆனந்தநடனம் கண்டு அறுபத்துமூவர் பிரகாரத்தை அடைகிறோம். இங்கே அறுபத்துமூவர், மாற்றுரைத்தபிள்ளையார், யோகதட்சிணாமூர்த்தி, சப்தமாதாக்கள் ஆகியோரின் அருட்பார்வையில் நனைகிறோம்.

இளமைநாயகியான பாலாம்பிகையின் தரிசனத்தில் பரவசமடைகிறோம். இத்தலத்தில் உள்ள காலபைரவர் காசியில் உள்ள பைரவரை போன்றே அமைந்துள்ளார்.
அடுத்து நாம்நகர்வது கருவறையை நோக்கி. திண்டியும், முண்டியும் காவல் இருக்க, பழமலையாய்தோன்றிய ஈசன், நம்பாவங்களை தம். அருள்பார்வையால் துடைத்து அருள்கிறார். ஐயனை காணும் போது அகம்தெளிகிறது. உள்ளம் ஆனந்தத்தால் நிறைகிறது. தம்மை வணங்குபவர்கள் இந்த பூவுலகிலும், மேலுலகிலும் எல்லா வளத்துடனும் நல்லவண்ணம் வாழஅருள்புரிகிறான் பழமலைநாதன். ஐந்தின் அதிசயமாக விளங்கும் இத்திருக்கோயில், நம்வாழ்வின் நற்பயன்களை குறைந்தபட்சம் ஐந்துமடங்காவது உயர்த்தும் என்ற நம்பிக்கை மனநிறைவை ஏற்படுத்துகிறது.

Tags : Vratampagai Balambi ,Sameda Vrithagiriswarar Arulapalipu ,
× RELATED சோர்வு நீங்க..!