×

பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர்

சிவகங்கையிலிருந்து 15 கிமீ தொலைவில் கீழப்பூங்குடி உள்ளது. இங்கு பழமையான பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவராக பிரம்மபுரீஸ்வரர் என்று அழைக்கப்படும்  சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கிறார். பிரம்மவித்யாம்பிகை என்று அழைக்கப்படும்  மீனாட்சியம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் ‘பூங்குடியாள்’ என்றும் அழைக்கப்படுகிறார். விநாயகர், முருகன், மகாலட்சுமி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், நவக்கிரக சிலைகள் உள்ளன. தனி சன்னதியில், ஆடுவதற்கு தயார் நிலையில் அள்ளிமுடிந்த ஜடாமுடியுடன் நடராஜர் காட்சி தருகிறார். தல விருட்சமாக கடம்ப மரம் உள்ளது. ஐந்து நிலை கோபுரத்துடன் கோயில்  அமைந்துள்ளது. கோயில் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது.

தல வரலாறு

பண்டைய  காலத்தில், படைக்கும் தொழில் செய்வதால், தானே சிவபெருமானை விட உயர்ந்தவர் என பிரம்மன் கருதினார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், பிரம்மனின் தலைகளில்  ஒன்றை துண்டித்தார். சிவபாவத்திற்குள்ளான பிரம்மா, தனது தவறுக்கு மன்னிப்பு வேண்டி பல சிவத்தலங்களுக்கு சென்று பூஜை செய்தார். தன்னை மன்னிக்கும்படி இந்த கோயிலுக்கு வந்த பிரம்மன், சுந்தரேஸ்வரரை வேண்டி வணங்கினார். இதனால் மனமிரங்கிய சிவபெருமான், பிரம்மனுக்கு அருள்புரிந்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர், சுந்தரேஸ்வரர் பிரம்மபுரீஸ்வரர்  என்றும், மீனாட்சியம்மன் பிரம்ம வித்யாம்பிகை என்றும் அழைக்கப்பட்டனர் என்பது புராணம்.

குழந்தை பாக்கியம் கிடைக்கவும், குடும்பத்தில் ஒற்றுமை வேண்டியும் பக்தர்கள் அம்மனிடம் வேண்டுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள், மூலவருக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் வழிபடுகின்றனர். பக்தர்கள் சிலர் சந்தனம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சித்திரையில் திருக்கல்யாணம், வைகாசி விசாகம், நவராத்திரி, கந்தசஷ்டி, தீபாவளி, கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிஷேகம், மார்கழி திருவாதிரை, கூடாரவல்லி நோன்பு, தைப்பூசம், மாசிமகம், சிவராத்திரி, பங்குனி உத்திரம் உள்ளிட்டவை இக்கோயிலின் விசேஷ தினங்கள். பௌர்ணமியன்று சுந்தரேஸ்வரருக்கு விசேஷ பூஜை நடக்கும்.

சித்திரை பிறப்பன்று காலையில் சிறப்பு ஹோமம் நடக்கும். அன்றிரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாவர். மதுரையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண தினத்தன்று, இங்கும் மூலவருக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடக்கும். மார்கழி திருவாதிரையன்று இரவில் அம்மனுக்கு விசேஷ பூஜை நடக்கும். தேய்பிறை அஷ்டமியன்று, பைரவருக்கு விசேஷ பூஜை நடக்கும். சிவன் சன்னதிக்கு பின்புறம் கோஷ்டத்திலுள்ள லிங்கோத்பவருக்கு திருக்கார்த்திகேயன்றும்,  சிவராத்திரியன்று இரவு 3ம் காலத்திலும் விசேஷ பூஜை நடக்கும்.

இந்த தலம், உத்திராடம் நட்சத்திரக்காரர்களுக்குரிய தலமாகும். உத்திராட நட்சத்திரத்துக்குரியவர்கள் தங்களது தோஷங்கள் நீங்கவும், வாழ்வில் முன்னேற்றம் பெறவும், நட்சத்திரத்திற்குரிய நாளில் இங்கு வந்து வழிபடுகின்றனர். அன்றைய தினம் பிரம்மபுரீஸ்வரருக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். கோயில் நடை தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Tags : Brahmapureeswarar ,Brahman ,
× RELATED சுயத்தை தியாகம் செய்தல் !