×

விதைப்பது எதுவோ முளைப்பதும் அதுவே

திருமூலர் திருமந்திரம்

எதுவாக இருந்தாலும் சரி! அனுபவித்தாலொழியத் தெரியாது. எல்லோரையும் எல்லாவற்றையும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பது, மிகவும் எளிது தான். ஆனால் உண்மை என்பதை, அனுபவித்து உணர்ந்தால் அல்லாமல்  உணர முடியாது. நடந்த நிகழ்வு ஒன்றைப் பார்க்கலாம். பலர், எங்கு போனாலும் கையில் ‘செல்ஃபோன்’ கொண்டு போவார்கள். இதைப்பார்த்த அடியேனுக்கு, “என்ன இது? எங்கு போனாலும் ‘செல்ஃபோனை’ விட மாட்டார்கள் போல இருக்கிறதே!” என்று சொல்லவும் செய்தேன். சென்னையில் இருந்து கேரளாவிற்கு, உறவினர் திருமணத்திற்குப் போயிருந்தேன். திருமணம் முடிந்து, அனைவரும் அவரவர் பொருட்களுடன் கல்யாண மண்டபத்தைக் காலிசெய்து விட்டு, வாசலில் வாகனத்திற்காக நின்றிருந்தனர். நானும் நின்றிருந்தேன். நான் இருந்த அறையில் ஒரு பொருளை வைத்து விட்டு மறந்து வந்து விட்டேன்.  வாகனம் வருவதற்குள்ளாகக் அறைக்குப் போய்விட்டு வந்து விடலாம் என்று, மண்டபத்திற்குள் இருக்கும் அறைக்குப் போனேன்.

சற்று நேரத்தில் நான் உள்ளே இருப்பதை அறியாத எவரோ ஒருவர் வெளிப்புறமாக அறையின் கதவை தாளிட்டு சென்றுவிட்டனர். கடுமையாகக் கதவைத் தட்டினேன்; பெருங்குரலெடுத்துக் கத்திப்பார்த்தேன். ஊஹூம்! பலனேதும் இல்லை. மண்டபம் பெரும் மண்டபம். ஆட்கள் யாருமே இல்லாத மண்டபத்தில், யார் வந்து திறப்பார்கள்? நல்லவேளையாக, அடியேன் ஜிப்பா பையில் ‘செல்ஃபோன்’ இருந்தது. அதன் மூலம் வெளியில் இருந்தவர்களைத் தொடர்பு கொண்டு, ஒரு வழியாக மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன். அன்று முதல், எப்போது பார்த்தாலும் ‘செல்ஃபோனு’டன் உலாவுபவர்களை, திட்டுவதை நிறுத்தினேன். இது சிறு நிகழ்ச்சியாகத் தோன்றலாம். ஆனால் அனுபவித்துப் பார்த்தால்தானே தெரிகிறது. ஆகையால் விவரம் அறியாமல், அடுத்தவர்களை எதற்காகவும் ஏசக்கூடாது. ஏசுவதற்கு நாம் யார்? திருமூலர் என்ன சொல்கிறார் எனப் பார்க்கலாம் வாருங்கள்!
                  
இன்பம் இடர் என்று இரண்டுற வைத்தது
முன்பவர் செய்கையினாலே முடிந்தது
இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பிலார் சிந்தை அறம் அறியாரே
(திருமந்திரம்  267)

கருத்து: இன்பம்  துன்பம் என இரண்டு இருப்பது, அவரவர் முற்பிறவியிலே செய்த செயல்களால் உண்டானது. முற்பிறப்பில் நல்லறம் செய்வர், இப்பிறப்பில் இன்பமாக இருக்கிறார்கள். இதைக் கண்டும்,  அடுத்தவர்களுக்குக் கொடுத்து மகிழும் அன்புள்ளம் இல்லாதவர்கள், அறச்சிந்தனையும் அற்றவர்களே ஆவார்கள்.இன்ப துன்பங்களுக்கான காரணங்களைச் சொல்லும் இப்பாடல், அனுபவத்தில் கண்டும், பலர் அனுபவப்பட மாட்டேன் என்கிறார்களே என வருந்துகிறது. ஞான நூல்கள் அனைத்துமே, இக்கருத்தை வலியுறுத்துகின்றன. உதாரணமாக, ரிஷி புத்திரர் ஒருவரைக் கொன்று, பெற்றோரையும் மகனையும் பிரித்த தசரதர், தன் மகனைப் பிரிந்து மாண்டார். மனைவியையும் அரசையும் பிரிந்திருந்த சுக்ரீவனுக்கு, அவற்றைப் பெறச் செய்த ஸ்ரீராமர், பிரிந்திருந்த மனைவி சீதையையும் அரசையும் திரும்பப்பெற்றார்.

தீமை, தீமையைத்தான் விளைவிக்கும்; நல்லது,  நல்லதைத்தான் அருளும் என்பதற்கு அற்புதமான உதாரணங்கள் இவை. அடியவர்களுக்குத் திருவோடு கொடுத்துத் தொண்டு புரிந்து வந்த திருநீலகண்ட நாயனாரைத்தேடி, சிவபெருமானே வந்து அருள்புரிந்த வரலாற்றைப் பெரிய புராணம் விரிவாகப் பேசுகிறது.
காசிப முனிவர் எனும் உத்தம முனிவருக்கு மகனாகப் பிறந்திருந்தும்; சிவபெருமானையே நேருக்கு நேராகத் தரிசித்து வரங்கள் பல பெற்றிருந்தும்; பெற்ற வரங்களின் விளைவால் ஆணவம் கொண்டு, தேவாதி தேவர்களையும் வாட்டி வதைத்து வேலை வாங்கிய  சூரபத்மன் தன் தாயின் கைகளால் வேலை வாங்கிய முருகப் பெருமானால் முடிந்து போனான்.

சூரபத்மன்  ராவணன்  துரியோதனன் எனும் ஆணவ மூவர்களில்; ஒவ்வொருவரைப் பற்றியும் சற்று நினைத்துப் பார்த்தால், ஒவ்வொருவரைப் பற்றியும் விவரம் விளங்கும்; சூரபத்மனின் அகங்கார உச்சமும் விளங்கும்; திருமூலரின் இப்பாடல் சொல்லும் ஆழ்ந்த பொருளும் விளங்கும். சூரபத்மன், ராவணன், துரியோதனன் எனும் மூவரும் சாதாரணமானவர்கள் அல்ல! இவர்களில் சூரபத்மனும் ராவணனும் கடுந்தவம் செய்து, கடவுளை நேருக்கு நேராகத் தரிசித்து, பல வரங்களைப் பெற்றவர்கள். அவர்கள் அளவிற்குக் கடுந்தவம் செய்து வரங்கள் பெறாதவனாக இருந்தாலும்; துரியோதனனும் சாதாரணமானவன் அல்ல! குருகுலவாசம் செய்து, வித்தைகள் கற்றவன்; கண்ணனே நேருக்கு நேராகத்தேடி வந்து பாண்டவர்களுக்காகப் பிச்சை கேட்காத குறையாகக் கேட்டும், ‘‘ஊசி முனையளவு இடம் கூடப் பாண்டவர்களுக்குத்தர மாட்டேன் நான்’’ என ஆணவத்தில் கொக்கரித்தவன் துரியோதனன்.

இருந்தாலும், துரியோதனனை விடப் பன்மடங்கு பெரியவன் ராவணன்; பெரும் நிலப்பரப்பிற்கு அரசன்; தவம், ஆற்றல் என அனைத்திலும் துரியோதனனை விடப் பன்மடங்கு பெரியவன் ராவணன். அப்படிப்பட்ட ராவணன், தானே நல்லது செய்து நல்லதை அடைந்திருந்தும், அதை உணர்ந்திருந்தும், தவறுகள் மேல் தவறுகள் செய்து, தானே துயர வலையில் அகப்பட்டவன்; தாத்தா, சகோதரர்கள், மனைவி, மக்கள், மகன் என்போரும், ஸ்ரீராமரே அவனுக்கு மன்னித்து அருள் உபதேசம் செய்தும், எதையுமே லட்சியம் செய்யாமல் ராவணன் முடிந்து போனான். தேவாதி தேவர்களையும் ஆட்டிப்படைத்த ராவணன், யார் என்ன சொல்லியும் அதைக் கேட்காததால், நல்லதென்று உணர்ந்தும் அதைக் கடைபிடிக்க விரும்பாததால், ராவணன் முடிந்தான். இவர்களையெல்லாம் உயர்ந்தவன் சூரபத்மன். நூற்றெட்டு யுகங்கள் ஆயுள், ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கு அரசன், நினைத்த நேரத்தில் நினைத்த இடங்களுக்குச் செல்லும் இந்திரஞாலத்தேர்  என  அனைத்தையும் தவத்தின் மூலம் பெற்றவன்  சூரபத்மன்.

நல்லது செய்தால் நல்லது விளையும் என்பதைத் தன் அனுபவத்தில் உணர்ந்திருந்தும்,  முறைகேடாக நடந்தவன் சூரபத்மன். விளைவு? சூரபத்மன் முடிந்து போனான். இவ்வாறு நல்லது செய்தால் நன்மை விளையும்; தீமை செய்தால், தீமை விளையும் என்பதை, சூரபத்மன் முதல் துரியோதனன் வரை அனைவரும் உணர்த்துகிறார்கள். இருந்தும், அனுபவத்தில் வர மாட்டேன் என்கிறது. அப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைப் பார்த்து, ‘‘அன்பில்லாமல், நல்லதைக் கடைப்பிடிக்காமல் இருக்கும் இவர்கள் பேதைகள்; அறவழி அறியாதவர்கள்’’ எனத் திருமூலர் இரங்கி வருந்துகிறார். இந்தப்பாடலைப் பார்க்கும் போது, ஏதோ ஓரளவிற்குப் புரிகிறது. இருந்தாலும், நல்லதை நல்லதென்று உணராமலும்; கெட்டதைக் கெட்டது என்று உணராமலும் தடுப்பது எது? அடுத்த பாடலில் விவரிக்கிறார் திருமூலர்.

அருள்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா
அருள்கண் உளோர்க்கு எதிர் தோன்றும் அரனே
இருள்கண் ணினோர்க்கு அங்கு இரவியும் தோன்றா
தெருள்கண் ணினோர்க்கு எங்கும் சீர்  ஒளியாமே
(திருமந்திரம்  1808)

கருத்து: அருள் பார்வை இல்லாதவர்களுக்கு, அரிய பொருள் தெரியாது. அருள்பார்வை உடையவர்களுக்கு, பாவங்களை நீக்கும் பரமேஸ்வரன் நேரே தோன்றுவார். இருள்பார்வை உடையவர்களுக்கு , சூரியன் கூடத்தெரியாது. தெளிந்த நோக்குடையவர்களுக்கோ, எங்கும் சிறந்த ஒளிமயமாகவே தோன்றும். விரும்புகிறோமோ  இல்லையோ? வேறு வழியில்லை. பயணம் செய்ய, வாகனத்தில் ஏறிவிட்டோம். இறங்கும் இடத்தை அடையும்வரை, வாகனப் போக்குவரத்து விதிகளுக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும். ‘‘அதெல்லாம் முடியாது. என் விருப்பப்படி தான் போவேன்’’ என்று இஷ்டப்படி போகக் கூடாது; போகவும் முடியாது. அதுபோல, வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி விட்டோம். சில நல்லவற்றையாவது, கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும். நல்லவை பலவற்றைக் கடைப்பிடித்து, வாழ்க்கைப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தி, உயர்நிலை அடைந்தவர்களே  மகான்கள், ஞானிகள் என்று புகழப்படுகிறார்கள்.

அருள்கண் கொண்டுதான் பார்க்க வேண்டுமாம்; சொல்கிறார் திருமூலர். அவ்வாறு பார்த்தால், பிரச்னைகளுக்கு வழியேயில்லை. அருள்கண் கொண்டு பார்ப்பதை விட்டுவிட்டு, ஆசைக்கண்கொண்டு பார்த்தால், பிரச்னைகள் தாமே வரும். இதைக் குறிப்பிட்டுப் பாடலைத் துவக்குகிறார் திருமூலர்.ஆம்! ஆசைக் கண் கொண்டு தான், அனைத்தையும் பார்க்கிறோம். பூதக் கண்ணாடியின் வழியாகப் பார்த்தால், பொருட்கள் பெரிதாகத் தெரிகின்றன அல்லவா? அதுபோல, ஆசைக்கண் கொண்டு பார்க்கும் அனைத்தும், ஆசைகளைப் பெரிய அளவில் தூண்டி விட்டு, அல்லலில் ஆழ்த்துகின்றன. புரிகிறது; புரியாததைப் போலவும் தோன்றுகின்றது.
தெளிவாக உணரலாம் வாருங்கள்! தற்காலத்தில் கைபேசி என்பது, பேசுவதற்காகத்தானே? ஆனால், இன்றையக் கைபேசிகள் தான், விதம் விதமாகக் கண்ணைக் கவரும் வண்ணங்களில் காட்சியளித்து, மனதை மயக்குகின்றனவே! கைபேசி எனப்படும் அந்த ஒன்றில்தான், ‘ட்விட்டர், ஃபேஸ் புக், வாட்ஸ்அப்’ என்று சொல்லி, எத்தனை விதமான பயன்பாடுகள்! அந்த அத்தனை விதமான பயன்பாடுகளிலும் செயல்பட்டு, பொன்னான நேரத்தைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிறோமே! அவற்றின் மூலம் எத்...தனை பிரச்னைகள் !

அனைத்துமே ஆசைக்கண் கொண்டு பார்ப்பதால் வரும் தீவினைகள். இதைப்போல, பலவிதமான ஆசைகள்; செயல்பாடுகளும் பல; விளைவு? மிச்சம் மீதியிருக்கும் சந்தோஷத்தையும் அமைதியையும் தொலைத்துவிட்டு, அலைந்து கொண்டிருக்கிறோம். அதே சமயம் ஆசைக்கண் கொண்டு பார்ப்பதை விட்டுவிட்டு, அருள்கண் கொண்டு பார்த்தால், வந்த அல்லல்கள் கூடத் தாமாகவே விலகிப்போய் விடும். அருள்கண் கொண்டு பார்ப்பவர்களின் எதிரில் சிவபெருமான், நேரில் தோன்றிக்காட்சி தருவார் என்கிறார் திருமூலர். அவ்வாறு சிவபெருமான் நேரில் தோன்றிக் காட்சி தந்து அருள் புரிந்த நிகழ்வுகளைத் திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணம், பலவாறாகச் சொல்கிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூரில் அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் திருத்தொண்டைச் செய்து வந்தார். அவருடைய திருத்தொண்டில், தானும் பங்குபெற வேண்டும் என்று, குண்டையூர் கிழார் என்பவர் விரும்பினார்; தன் விருப்பத்தை சிவபெருமானிடம் முறையிட்டு, “ அருள்செய் சிவபெருமானே! “ என வேண்டி முறையிட்டார் குண்டையூர் கிழார்.

அதே விநாடியில், அருள் புரிந்தார் அரன். குண்டையூர் எங்கும், நெல்மலைகள் குவிந்தன. குண்டையூர் கிழார், நெல்மலை குவிந்த தகவலை, சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குத் தெரியப்படுத்த, சுந்தரரும் குண்டையூருக்கு வந்து சேர்ந்தார். ஊருக்குள் நுழைய முடியாதபடி, எங்கு பார்த்தாலும் நெல் மலைகள் ! பார்த்தார் சுந்தரர். அருகிலேயே அமைந்து இருக்கும்’ திருக்கோளிலி’ எனும் திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் முறையிட்டார். சிவனருளால், அந்த நெல்மலைகள் அப்படியே திருவாரூரில் குவிக்கப்பட்டன. ஊரே வியந்தது. மக்களெல்லாம் சுந்தரரின் பக்தியையும் பரவையாரின் தூய மனதையும் பாராட்டிப் புகழ்ந்தார்கள். அதெல்லாம் சரி! அந்த நெல்மலைகள் அனைத்தும், பரவையாரிடம் கையகப்படுத்தப் பட்டு, அடியார்களுக்கு முறைப்படிப் பங்கீடு நடந்தாக வேண்டுமே! பரவையார் யோசிக்கவேயில்லை; ‘‘அவரவர்கள் வீட்டு எல்லைக்குள் இருக்கும் நெல்லை, அவரவர் எடுத்துக் கொள்ளுங்கள்’’ என, முரசமறைந்து அறிவித்தார்  என சேக்கிழார் சுவாமிகள் பாடுகிறார்.
    
வன்றொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ் சிறப்பார்
“இன்றுங்கண் மனையெல்லைக்குட்படு நெற்குன்றெல்லாம்
பொன்றங்கு மாளிகையிற் புகப்பெய்து கொள்க” வென
வென்றி முரசறைவித்தார் மிககபுகழ்ப் பரவையார்

என இத்தகவலைத் திருத்தொண்டர் புராணம் பேசுகிறது. இவ்வாறு, அருள்கண் கொண்டு, அவைரையும் பார்ப்பவர்க்கு, அரன் வந்து அருள்புரிவார் எனக்கூறிய திருமூலர், அவ்வாறு அருள்கண் கொண்டு பார்க்காமல், ஆசைவசப்பட்ட கண்கொண்டு பார்த்தால், சூரியனே தெரியாது என்கிறார். அதாவது, ஆசை வசப்பட்டவர்க்கு நல்லவை எதுவுமே பார்வையில் படாது என்பது பொருள். திருமூலர் சொல்லும் வழி, கண்டிப்பாக நாம் செயல்பட்டாகவேண்டிய வழி. அடுத்தவர்களைக் குற்றம்  சொல்லாமல் இருப்போம். அருள்கண் எனும் நல்நோக்கு தானாகவே வந்து பொருந்தும்!

பி.என். பரசுராமன்

Tags : sowing ,
× RELATED அரங்கம்