×

திருக்குறுங்குடியில் பங்குனி திருவிழா : 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம்

களக்காடு: திருக்குறுங்குடியில் பங்குனி பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடியில் பழமைவாய்ந்த அழகிய நம்பிராயர் கோயில் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பிரமோற்சவ திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது, விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 5 நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம், 5ம் நாளான நேற்று முன்தினம் (25ம் தேதி) இரவில் தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 8.30 மணியளவில் கோயிலில் இருந்து நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளி கொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி ஆகிய 5 நம்பிசுவாமிகளும் தனித்தனியாக 5 கருட வாகனங்களில் நிகழ்ச்சிக்காக புறப்பட்டனர். வீதிஉலாவாக வந்த 5 நம்பிகளும் நேற்று அதிகாலை 3 மணிக்கு மேலரதவீதியில் மேற்கு நோக்கி எழுந்தருளி, மகேந்திரகிரி மலையை கடாஷித்து அங்கு வாழும் தேவ கந்தர்வ சித்தர்களுக்கு திருக்காட்சி அளித்தனர். அப்போது நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடத்தப்பட்டது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என்று பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின் நம்பி சுவாமிகள் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர். நாங்குநேரி டிஎஸ்பி இளங்கோவன் தலைமையில் திருக்குறுங்குடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 10ம் நாளான வருகிற 30ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது.

Tags : Celebrations ,Thirukurukundi Marri Festival ,
× RELATED 2024 புத்தாண்டு தின கொண்டாட்டம்...