×

ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானம்: செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் குறித்து அனைத்து அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது: கடந்த 2020 – 21 ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிப்புகளில் 90% பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு 2022-23 சட்டமன்ற மானியக் கோரிக்கையில் 165 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு ஒவ்வொன்றாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது. இத்திட்டமானது தற்போது  விரிவுபடுத்தப்பட்டு இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மற்றும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பத்து திருக்கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்கள் அனைவருக்கும் தற்போது பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு மேலும், ஐந்து திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும். 121 திருக்கோயில்களில் பராமரிக்கப்பட்டு வரும் பசு மடங்கள் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். மேலும், பசுமைத் திருக்கோயில்கள் திட்டத்தின் கீழ் 5 திருக்கோயில்களின் அன்னதானக் கூடங்களில் பசுமை எரிவாயு திட்டம் ரூ.1 கோடி செலவில் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் செயல்படுத்தப்படவுள்ளன. திருக்கோயில்களின் மேம்பாடுத்துவது குறித்து மாதம்தோறும் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்களுடன் சீராய்வு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும்   அறிவிக்கப்படாத அறிவிப்புகளும் செயல்படுத்துவது தொடர்பாகவும் இக்கூட்டத்தில் அனைத்து அலுவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. திருக்கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மற்றும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்களில் பக்தர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் அந்தந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. என அமைச்சர் கூறினார். இந்த சீராய்வுக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன் இ.ஆ.ப., திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்….

The post ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரைவில் நாள் முழுவதும் அன்னதானம்: செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Tiruvannamalai ,Madurai Meenakshi Amman temple ,Minister ,Shekharbabu ,Chennai ,Rameswaram Arulmiku Ramanathaswamy Temple ,Tiruvannamalai Arunachaleswarar Temple ,Madurai Meenakshi Sundareswarar Temple ,Shekhar Babu ,
× RELATED ராமேஸ்வரத்தில் சாலையில் நின்று...