×

சென்னிமலை முருகன் கோயில் தேரோட்டம் கோலாகலம் : பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சென்னிமலை:  சென்னிமலை முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நேற்று  காலை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பங்குனி உத்திர தேர்திருவிழா, 6 நாட்கள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர விழா, கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று அதிகாலை உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சாமி புறப்பாடு நடைபெற்றது. சாமி தேர்நிலையை 3 முறை வலம் வந்தது.

பின்னர் சாமி, தேர்நிலையில் வைக்கப்பட்டு தலைமை குருக்கள் ராமநாதசிவம் சிறப்பு பூஜை நடத்தினார். காலை 6.30 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுக்க தேர், நிலையை விட்டு புறப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் அரோகரா.... அரோகரா முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா... என பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்பு தேர் கிழக்கு, தெற்கு, மேற்கு, ரத வீதி வழியாக வலம் வந்து வடக்கு வீதியில் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் தேர் மீது உப்பு, மிளகு தூவி வணங்கினர். நேற்று மாலை தேர்நிலை நடந்தது.
 
தேரோட்டத்தில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம், கோயில் செயல் அலுவலர் அருள்குமார், இன்ஸ்பெக்டர் செல்வராஜ், அக்னி நட்சத்திர அன்னதான கமிட்டி சுப்புசாமி, ஈஸ்வரமூர்த்தி, செந்தில்வேலன் உட்பட ஆயிரக்கணக்கனோர் கலந்து கொண்டனர். இன்று (22ம் தேதி) வெள்ளிக்கிழமை காலை பரிவேட்டை நிகழ்ச்சியும். இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.00 மணிக்கு மகாதரிசன நிகழ்ச்சியும், இரவு 8.00 மணிக்கு மஞ்சள்நீர் அபிஷேகத்துடன் பங்குனி உத்திர விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் நந்தகுமார், செயல்அலுவலர் அருள்குமார், கோயில் தலைமை எழுத்தர் ராஜீ, பாலசுப்பிரமணியம், கோயில் தமிழ்புலவர் அறிவு, அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : Chennimalai Murugan Temple Kolakkalam ,devotees ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...