×

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி 108 பால்குட ஊர்வலம்

ஆற்காடு: ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி 108 பால்குட ஊர்வலம் நேற்று நடந்தது. ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பாலமுருகனடிமை சுவாமிகள் மெய்ஞானம் பெற்ற 52ம் ஆண்டு அன்னதான விழா, பங்குனி உத்திரத்தையொட்டி 108 பால்குட சிறப்பு அபிஷேகம் மற்றும் பவுர்ணமி சிறப்பு பூஜை ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.  விழாவையொட்டி, மலை அடிவாரத்தில் உள்ள துர்க்கை அம்மன் கோயில் முன் காலையில் நாத சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு பூஜையும் 108 பால்குடம் நிறுவுதல் நிகழ்ச்சியும் நடந்தது.  

பின்னர், பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை தாங்கி பால் குடங்களுக்கு சிறப்பு பூஜை செய்து  பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.  உற்சவ மூர்த்திகளுடன் மலையை  பால்குடங்கள் வலம் வந்து பின்னர் பாலமுருகனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, மலை அடிவாரத்தில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், வாலாஜா முரளிதர சுவாமிகள், திருவலம் சாந்தா சுவாமிகள், சித்தஞ்சி மோகனானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பாலமுருகனடிமை சுவாமிகள் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எம்.நடராஜன்,  பிரியா தண்டாயுதபாணி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பவுர்ணமி சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில்  செயல் அலுவலர் மு.சிவஞானம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Balukuda ,Rathinagiri Palamurugan Temple ,
× RELATED தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டம்...