×

மாசி மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறதே, இதற்கு சிறப்புக் காரணம் ஏதேனும் உண்டா?

நம் இந்தியத் திருநாட்டில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் மாசி மாத காலத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாக பெரும்பான்மையான ஆலயங்களில் மாசிமக நாளன்று தீர்த்தவாரி திருவிழா நடைபெறுவதைக் காணலாம். உற்சவமூர்த்தியோடு இணைந்து பக்தர்கள் அனைவரும் நீர் நிலையில் மூழ்கி எழுவர். இந்த தீர்த்தவாரித் திருவிழா நடைபெறுகின்ற மாசிமக நாளுக்கு முன்னதாக வருகின்ற பத்து நாட்களும் பிரம்மோற்சவமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தட்பவெப்ப நிலை மற்றும் பொருளாதார ரீதியான காரணங்களும் இந்தத் திருநாளோடு இணைந்திருப்பதையும் அறிய முடியும். ஆங்கிலத்தில் ‘அக்ரிகல்ச்சுரல் எக்கானமி’ என்பார்கள்.நம் நாடு பொருளாதார ரீதியாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. தை மாதத்தில் அறுவடை முடித்து அதனை சந்தைக்குக் கொண்டு சென்று விற்று முடித்த பின் எல்லோருடைய கைகளிலும் பணம் ஓரளவிற்குப் புழங்கிக் கொண்டிருக்கும் நேரமாக மாசி மாதம் என்பது அமைந்திருந்தது.

உற்சவத்தை நடத்துகின்ற உபயதாரர்கள் பெரும்பாலும் பண்ணையார்கள், மிராசுதாரர்கள், நிலாச்சுவான் தாரர்கள் ஆகவும் இருந்தனர். திருவிழாக் காலத்தில் இறைவனை தரிசிக்க வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும் இதுபோன்ற பணக்காரர்களின் இல்லத்தில் தலைவாழை இலை போட்டு உணவளிப்பார்கள். இவ்வாறு விருந்து வைப்பதற்கும், திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கும் பணம் தேவை. அதே போன்று புயல், காற்று, மழை என்று இயற்கை சீற்றத்தினால் திருவிழா தடைபட்டுவிடவும் கூடாது. இதுபோன்ற காரணங்களை எல்லாம் முன் வைத்து தட்பவெப்பநிலையோடு, பொருளாதார நிலையும் ஒத்துழைக்கின்ற இந்த மாசி மாதத்தில் திருவிழாவை எந்தவிதமான இடையூறுமின்றி நடத்த இயலும் என்பதால் இந்த மாதத்தினைத் தேர்ந்தெடுத்து திருவிழாவினை நடத்துகிறார்கள். ஜோதிட ரீதியாக மாசி மாத கிரஹ நிலையை ஆராய்ந்தோமேயானால் மேலும் ஒரு உண்மை புலப்படும். மாசி மாதத்தில் பௌர்ணமி தோன்றும் காலத்தில் சந்திரன் சிம்ம ராசியில் சஞ்சரிப்பார். சிம்ம ராசி என்பது சூரியனின் சொந்த வீடு ஆகும்.

சூரியனை பித்ரு காரகன் அதாவது தந்தை என்றும் சந்திரனை மாதுர் காரகன் அதாவது தாய் என்றும் ஜோதிடர்கள் அழைப்பார்கள். பிரதி மாதந்தோறும் சந்திரன் சிம்ம ராசியைக் கடந்தாலும், தந்தையாகிய சூரியனின் வீட்டில் முழு நிலவாக, பூரணத்துவம் நிறைந்த பௌர்ணமியாக தாய் ஆகிய சந்திரன் ஒளி வீசுவது இந்த மாசி மாதத்தில் மட்டுமே நடக்கின்ற நிகழ்வு. தந்தையின் வீட்டில் தாய் முழுமை பெறுகின்ற நாள் & சவத்திற்கு சக்தி அளித்து சிவமாக மாற்றிய நாள் & மாசிமகம். இதை சிவசக்தி ஐக்கியமாகவே  காண்கிறார்கள் மகரிஷிகள்.சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுகின்ற நாள் ஆதலால் மாசிமக நாளில் சிவசக்தி தரிசனம் என்பது மிகவும் விசேஷமானது என்று பெரியோர்கள் முடிவு செய்தார்கள். சீதோஷ்ண நிலை, பொருளாதார வலிமை, ஜோதிடம், ஆன்மிகம் என்று எல்லா விதத்திலும் இந்த மாசிமக நாள் என்பது சிறப்பு பெறுகிறது. இத்தகைய காரணங்களால் இந்த நாளினை ஒட்டி வருகின்ற பத்து நாட்களும் பெரும்பாலான சிவாலயங்களில் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது.

எனக்கு கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி ஆகியவற்றினால் ஒவ்வாமை ஏற்படும்.எனவே நான் விளக்கு மட்டும் ஏற்றி ஸ்லோகங்கள் கூறி வணங்குகிறேன். இதில் எந்தவிதமான தவறுமில்லையே? சேதுராமன், திருவூர்.

உங்களுடைய பூஜா முறையில் எந்தவிதமான தவறும் இல்லை. இறைவனை ஜோதி வடிவில் தரிசிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கற்பூர ஹாரத்தி எனப்படும் நிகழ்வு. பச்சைக்கற்பூரம் வைத்து அதனை ஏற்றி ஹாரத்தி காண்பிக்க வேண்டும். பச்சைக் கற்பூரத்தினை ஏற்றும்போது உடலுக்கு ஒவ்வாமை என்பது உண்டாகாது. மாறாக அதிலிருந்து வெளிப்படும் புகையானது காற்றில் உள்ள மாசு மற்றும் கிருமிகளை அழிக்கும் சக்தி படைத்தது. பச்சைக்கற்பூரத்தின் விலை அதிகம் என்பதால் அதனை அதிகளவில் உபயோகப்படுத்த இயலவில்லை. தற்போது விற்பனையில் உள்ள கற்பூரத்தில் மெழுகு முதலான பொருட்கள் கலக்கப்படுகின்றன. அதிலிருந்து வெளிப்படும் புகையானது நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளது. அதனால் பலருக்கும் உங்களைப் போலவே ஒவ்வாமை என்பது உண்டாகிறது.இதன் காரணமாகத்தான் பல ஆலயங்களில் கற்பூர ஹாரத்தியை தடைசெய்து நெய்தீபம் மட்டுமே காண்பிக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகையை வைத்திருப்பார்கள். குங்கிலியம் முதலான பொருட்களைக் கொண்டு சாம்பிராணி என்பது தயாரிக்கப்பட்டது.

அசல் சாம்பிராணிப் புகை உடம்பிற்கு நல்லது. அதனால்தான் தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு தலைக்கும் உடம்பிற்கும் சாம்பிராணி புகையைப் போடுவதை வழக்கத்தில் கொண்டிருந்தார்கள். கலப்படம் என்று வரும்போது சாம்பிராணிப் புகையும் உடம்பிற்குத் தீங்காகி விடுகிறது. காற்றில் உள்ள மாசுக்கள் அகன்று பொதுமக்கள் பலரும் கூடுகின்ற ஆலய வளாகம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தூப, தீப, ஹாரத்தி உபச்சாரங்கள் யாவும் இறைவனுக்கு செய்யப்படுகின்றன. அதே நடைமுறையைத்தான் நாம் நமது இல்லங்களிலும் பயன்படுத்துகிறோம். நீங்கள் விளக்கு ஏற்றி வழிபடுவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதுவும் சுத்தமான பசு நெய்யில் ஏற்றப்படுகின்ற விளக்காக இருக்க வேண்டும். பசு நெய்யினைக் கொண்டு விளக்கேற்றுவதற்கு பொருளாதார நிலை இடம் தரவில்லை எனில் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபடலாம். அதனை விடுத்து விளக்கேற்றுவதற்கு என்று தனியாக கலப்படம் செய்து விற்கப்படுகின்ற நெய்யினை உபயோகித்தால் அதுவும் ஒவ்வாமையையே தரும்.

வசியப் பொருத்தம் என்பதன் பொருள் என்ன? அதனை ஏன் அப்படி அழைக்கிறார்கள்? மீனாவாசன், சென்னாவரம்.

ஆண், பெண் இருவரின் பிறந்த நட்சத்திரங்களைக் கொண்டு திருமணப் பொருத்தம் பார்க்கும் நடைமுறையில் இந்த வசியப்பொருத்தம் வருகிறது. அவரவர் பிறந்த ஜென்ம ராசியின் அடிப்படையில் இந்தப் பொருத்தம் அமையும்.இது பெரும்பாலும் ராசி அதிபதிகளின் நட்புறவு மற்றும் ராசி அதிபதிகள் பிற ராசிகளில் கொண்டிருக்கும் உச்ச, நீச பலம் ஆகியவற்றைக் கொண்டு கணிக்கப்படுகிறது. மேஷ ராசிக்கு சிம்ம, விருச்சிகமும், ரிஷப ராசிக்கு கடக, துலாமும், மிதுன ராசிக்கு கன்னியும், கடக ராசிக்கு விருச்சிக, தனுசுவும், சிம்ம ராசிக்கு துலாமும், கன்னி ராசிக்கு மிதுன, மீனமும், துலாம் ராசிக்கு மகரமும், விருச்சிக ராசிக்கு கடகமும், தனுசு ராசிக்கு மீனமும், மகர ராசிக்கு மேஷ, கும்பமும், கும்ப ராசிக்கு மேஷமும், மீன ராசிக்கு மகரமும் வசியம் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருப்பார்கள்.

வசியம் என்றால் மயக்குவது என்று அர்த்தம் கொள்ளக் கூடாது. வசியப் பொருத்தம் இருப்பவர்களுக்கு இடையில் பரஸ்பரம் ஒருவிதமான ஈடுபாடு உண்டாகும் என்று பொருள் காண வேண்டும். பரஸ்பரம் ஈடுபாடு உண்டாகும்போது அங்கே கருத்து வேறுபாடு என்பது காணாமல் போய்விடும் என்பதால் இதனை ஒரு முக்கியமான பொருத்தமாக பெரியவர்கள் சொல்லி வைத்தார்கள்.

கோயில்களில் சிவலிங்கத்திற்கு பின்னால் ஐந்து தலை நாகம் வைத்து அலங்கரிப்பதேன்? அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.

நாகாபரணம் என்று அதனைச் சொல்வார்கள். ஐந்து தலை நாகம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களைக் குறிக்கும். இந்த ஐம்புலன்களும் பாம்பைப் போல விஷப் பூச்சிகளே. மாயை எனும் துன்பத்தைத் தருகின்ற இந்த ஐம்புலன்களையும் அடக்கி இவற்றை எவனொருவன் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறானோ அவனே ஞானியாவான். அதனால்தான் ஐந்து தலை நாகத்தினைத் தன் தலையாகக் கொண்ட கேதுவினை ஞான காரகன் என்று அழைக்கிறார்கள். ஞான ஸ்வரூபன் இறைவன் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக இந்த நாகாபரணத்தினை இறைவனுக்கு அலங்காரமாய் சாத்தி அழகு பார்க்கிறார்கள். சிவபெருமான் மட்டுமல்ல, மகாவிஷ்ணு ஐந்து தலை நாகமான ஆதிசேஷனை தனது படுக்கையாக மாற்றி அதன் மேல் சயனித்திருப்பார்.

கருமாரியம்மனின் தலையில் மகுடமாக நாகம் இடம்பிடித்திருக்கும். ஞானஸ்கந்தனின் காலடியில் நாகம் ஒன்று படமெடுத்தபடி அமர்ந்திருக்கும். விநாயகப் பெருமானுக்கு வயிற்றில் கயிறுபோல சுற்றி முடிபோட்ட நிலையில் நாகத்தினை வடிவமைத்திருப்பார்கள். அனைத்து தெய்வங்களின் திருமேனியையும் இந்த நாகம் அலங்கரித்திருக்கும். விஷத்தன்மை கொண்ட ஐம்புலன்களையும் அடக்கி ஞானத்தினை அடைய வேண்டுமென்றால் அதற்கு தெய்வத்தின் அருள் தேவை என்பதை உணர்த்தவே நம் இந்து மதச் சான்றோர்கள் நாகத்தினை இறைவனோடு தொடர்புபடுத்தி வைத்திருக்கிறார்கள்.

நவகிரகங்களைப் படைத்தது யார்? அவற்றைப் படைத்ததன் காரணம் என்ன? விஸ்வநாத், பெங்களூரு.

நாம் வாழுகின்ற பூமியைப் படைத்தது யாரோ, அவரே நவகிரகங்களையும் படைத்திருக்கிறார். பூமி உள்பட நவகிரஹங்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசையால் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. அனைத்து கிரஹங்களும் சூரியனின் ஒளியை உள்வாங்கி அதை பிரதிபலிக்கின்றன. அவ்வாறு பிரதிபலிக்கும்போது அந்த கிரஹங்களின் சொந்த குணமும் சேர்ந்து வெளிப்படுகிறது. தாங்கள் பிரதிபலிக்கும் ஒளியின் வழியாக தங்களது தீட்சண்யத்தை பூமியில் வாழும் மனிதனின் மீது செலுத்தி அவனை இயங்கச் செய்வதே கிரஹங்களின் பணி. ஒளி சார்ந்த அறிவியல் என்பதால் தான் கிரகங்களைப் பற்றிய கல்வியினை ஜ்யோதிஷம் என்று சொல்கிறார்கள்.

ஜ்யோதி என்றால் ஒளி என்பது நாம் அறிந்ததே. கிரஹங்களைப் பற்றிய அறிவினை வளர்த்துக் கொள்பவர்களை ஜோதிடர் என்றும் குறிப்பிடுகிறார்கள். நவகிரஹங்களைப் படைத்தது இறைவனே என்பதில் எந்தவிதமான ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. இந்த பூமியில் வாழுகின்ற மனிதர்கள் அவரவர் செய்த பாவ, புண்ணியத்திற்கு ஏற்ப பலன்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும்,  அந்தப் பலன்களைத் தருகின்ற பணியாளர்களாக நவகிரஹங்கள் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் படைக்கப்பட்டன. இது அடிப்படை விளக்கம்தான். இதற்குள் சூட்சுமங்கள் பல உண்டு. ஜ்யோதிஷத்தை நன்கு கற்றறிந்து கொள்ளும் போது தான் அந்த சூட்சுமங்களைப் புரிந்து கொள்ள இயலும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கால் இடறினால் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்லச் சொல்வது ஏன்? அரிமளம்.இரா.தளவாய்
நாராயணசாமி.


சகுனத்தடை என்பதால்தான். சகுனம் என்பது நடைபெற உள்ள நிகழ்விற்கான குறிகாட்டி என்று எடுத்துக் கொள்ளலாம். வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கால் இடறினாலோ, வாயிற்படியில் தலையில் இடித்துக் கொண்டாலோ, நடையில் தடுமாற்றம் உண்டானாலோ அதனை சகுனத் தடையாகச் சொல்வார்கள். இதுபோன்ற சகுனங்களை மூடநம்பிக்கை என்று ஒதுக்க முடியாது. உண்மை நிலையை யோசித்துப் பாருங்கள். வெளியே ஒரு வேலையாக செல்லும்பொழுது கால் இடறுவது, தலையில் இடித்துக் கொள்வது, நடையில் தடுமாற்றம் முதலான நிகழ்வுகள் வெளியில் செல்பவரது கவனக்குறைவால்தான் நிகழ்கிறது. அதே கவனக்குறைவுடன் இருந்தால் அவரால் அந்த வேலையை சரிவர செய்ய இயலாது. கவனக்குறைவினை சரி செய்வதற்காகவும், மனதளவில் அவர் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வீட்டிற்குள் திரும்ப அழைத்து அமரச் செய்து நீரை அருந்துங்கள் என்கிறார்கள்.

குடிக்கின்ற நீர் மனதை சாந்தப்படுத்தும். தண்ணீர் என்பது கிரஹங்களில் சந்திரனின் ஆதிக்கத்தைப் பெற்றது. அந்தச் சந்திரனையே மனோகாரகன் என்று அழைப்பார்கள். ‘ஔஷதீனாம் அதிபதி:’ என்று சோமனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். ஔஷதி என்றால் மருந்து. மருந்துகளுக்கெல்லாம் அதிபதி சோமன். அந்த சோமனின் பிரசாதமான தண்ணீரைப் பருகிவிட்டுச் செல்லும்போது நம் உடம்பில் உள்ள குறைகள் காணாமல் போகின்றன. தண்ணீரை அருந்திவிட்டு வெளியில் கிளம்பும்பொழுது மனமும் சாந்தமாய் இருக்கிறது. வெளியில் சென்று செய்து முடிக்க வேண்டிய பணியும் வெற்றி பெறுகிறது. சகுனத்தடைகள் உண்டாகும்போதுதான் உள்ளே வந்து அமர்ந்து நீர் அருந்திச் செல்ல வேண்டும் என்பதில்லை, வெளியில் வேலையாகக் கிளம்பும்போதே மனைவியின் கையாலோ, மகளின் கையாலோ, தாயாரின் கையாலோ அல்லது அந்த வீட்டில் உள்ள சுமங்கலிப் பெண்ணின் கையாலோ ஒரு சொம்பு தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு கிளம்பிப் பாருங்கள். இதுபோன்ற சகுனத் தடையும் உண்டாகாது, கையிலெடுத்த செயலையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள்.

வீடுகளில் மீன்தொட்டி வைத்து மீன்களை வளர்க்கிறார்களே, அது நல்லதா? ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

வீடுகளில் மீன்தொட்டி வைத்து மீன்களை வளர்ப்பது ஆடு, மாடு, நாய், பூனை, கோழி போன்ற பிராணிகளை வளர்ப்பதைப் போன்றதே ஆகும். ஒரு சிலர் பறவைகளை கூண்டுகளில் வைத்து வளர்ப்பது வீட்டிற்கு நல்லதல்ல என்றும், அவ்வாறு வளர்ப்பது அவற்றின் சுதந்திரத்தைப் பறிப்பதாக ஆகிவிடுகிறது என்றும் சொல்வார்கள்.அதனால்தான் நம் முன்னோர்கள் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் காகத்திற்கு தினமும் உணவு வைக்கும் முறையைக் கொண்டு வந்தார்கள். காக்கை உணவு சாப்பிடும் அழகைக் கண்டு ரசிக்கவும் செய்கிறார்கள். மீன்தொட்டி வைத்து மீன்களை வளர்க்க ஆசைப்பட்டால் அதற்கென்று தனியாக விற்கப்படுகின்ற மீன் குஞ்சுகளை வாங்கி வந்து தொட்டியில் விட்டு வளர்க்கலாம்.

மாறாக ஆறு, ஏரி, குளங்களில் உள்ள மீன்களைப் பிடித்து வந்து தொட்டியில் வைத்து வளர்க்கலாகாது. தொட்டியில் வைத்து வளர்க்கும் மீன்களை உணவாக சமைக்கவும் பயன்படுத்தக் கூடாது. வாஸ்து குறைபாடு உள்ள வீடுகளில் அதற்குப் பரிகாரமாக ஈசானிய (வடகிழக்கு) மூலையில் தண்ணீர் சுழற்சி இருந்தால் நல்லது என்று சொல்வார்கள். அதனால்தான் வீடுகளில் ஈசானிய மூலையில் மீன்தொட்டி வைத்து அதில் மீன்களை வளர்த்து வருகிறார்கள். மீன்கள் அங்குமிங்கும் தொட்டிக்குள் அலைந்துகொண்டிருக்கும் போது தண்ணீரின் சுழற்சி என்பது அந்த இடத்தில் இருந்துகொண்டு இருக்கிறது. அதனால் வீட்டில் உள்ள வாஸ்து சம்பந்தமான குறைபாடுகள் நீங்கிவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது. வீடுகளில் மீன்தொட்டி வைத்து மீன்களை வளர்ப்பதன் நோக்கம் நன்மையை நாடியே இருப்பதால் அதில் எந்தவிதமான தவறும் இல்லை, அது நல்லதற்காகத்தான் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

திருக்கோவிலூர் கே.பி.ஹரிப்ரசாத் சர்மா

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?