திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா : பக்தர்கள் முளைப்பாரி ஊர்வலம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் உள்ள திருவப்பூரில் முத்துமாரியம்மன் கோயில்  திருவிழாவையொட்டி கடந்த மாதம் 24ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 3ந் தேதி மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழச்சியான தேரோட்டம் கடந்த 11ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பக்தர்கள் முளைப்பாரி எடுத்து திருப்பூர் காட்டுமாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று சாமிதரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரியை கொண்டு வந்தனர்.

பின்னர் அம்மனுக்கு காப்பு கலைந்து மஞ்சள் நிராட்டு விழாவுடன் மாசி திருவிழா நிறைவுபெற்றது. முன்னதாக நேற்று காலையில் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வெள்ளி சிம்ம வாகனத்தில் முத்துமாரியம்மனை எழுந்தருள செய்து கோயிலில் இருந்து திருக்கோகர்ணம் பிரகதம்பாள் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு வந்தனர். அப்போது பக்தர்கள் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை பிரகதாம்பாள் கோயில் அருகே உள்ள குளத்தில் கரைந்தனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

× RELATED ஆதிரெத்தினேசுவரர் கோயிலில் கழிப்பறையின்றி பக்தர்கள் அவதி