×

திருமணத்தடை தகர்க்கும் வைகுந்தவாசன்

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகாவில் உள்ள கிளியனூரில் ஸ்ரீவைகுந்தவாசப் பெருமாள் கோயில் உள்ளது. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் சோழ பல்லவ ராஜா இக்கோயிலை கட்டியுள்ளார். அதற்கு ஆதாரமாக கல்வெட்டுக்கள் உள்ளன. இந்த ஆலயம் பல சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது. ஆலயத்தின் உள்ளே நான்கு சிங்கங்கள் நான்கு மூலைகளிலும் தாங்கும் நான்கு கால் மண்டபம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சுற்று மதில் மற்றும் சில வேலைப்பாடுகளை 16ஆம் நூற்றாண்டில் பரகேசரிவர்மன் என்ற மன்னன் செய்ததாகவும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தஊர் அன்றைய வழக்கப்படி சுகபுரி என்று அழைக்கப்பட்டது. சுகபிரம்மரிஷி என்ற முனிவர் இங்கு தங்கி தவம் செய்ததால் இவ்வாறு அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு கிளிவளநல்லூர் என்று அழைக்கப்பட்ட ஊர் தற்போது கிளியனூர் என்று மருவி அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் பெருமாளுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம் மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் இவ்வளவு பெரிய வடிவில் அமர்ந்த கோலத்தில் வேறு எங்குமே பெருமாள் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. மேற்கு நோக்கிய அழகிய சுதை வடிவ சிற்பங்களுடன் கூடிய கோபுரம், கருவறையில் வீற்றிருக்கும் பெருமாளும் மேற்கு நோக்கியே உள்ளார். அதிலும் எங்கும் இல்லாதபடி தனது மனைவியர்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது இங்கு மட்டுமே என்று கூறப்படுகிறது. மேற்கு நோக்கியபடி அமர்ந்திருப்பதால் பக்தர்கள் மனதில் நினைத்தது கைகூடும் என்பது ஐதீகம். மேலும் பெருமாளுக்கு நேர் எதிரே உள்ள கருடாழ்வாரும் அமர்ந்த கோலத்திலேயே உள்ளார் என்பது இந்தக் கோயிலுக்கு உள்ள மற்றொரு சிறப்பாகும்.

இந்த கருடாழ்வார் தச நாகங்களை தனது திருமேனியில் ஆபரணமாக அணிந்துள்ளார். திருமணத் தடை உள்ளவர்கள் இந்த கோயிலுக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தால் திருமணத் தடை நீங்கும்’’ என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.’’திருமண கோலத்தில் ஸ்ரீவைகுந்த வாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி ஆகியோருடன் காட்சி தருவதால் பக்தர்களுக்கு விரைவில் திருமணத் தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்று நம்புகிறார்கள். கோயிலின் இடது புறத்தில் அம்பாள் ஜனகல்லித் தாயார் தனி ஆலயத்தில் வீற்றிருந்து அருட்பாலிக்கிறார். வைகாசி விசாகத்தில் திருக்கல்யாண வைபோகம், பிரதி மாதம் அமாவாசை தினத்தில் இரவில் ஸ்வாமி உட் பிராகார புறப்பாடு, புரட்டாசி மாதத்தில் ஸ்ரீவைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இக் கோயிலின் தலவிருட்சம் துளசி. சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புதுச்சேரி பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசை தினத்தில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

Tags : Vaikuntan Vasantha Vasantha Vasanthavan ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?