கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா : பால்குடம், பூத்தட்டு எடுத்து பக்தர்கள் வழிபாடு

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள  கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா நடந்தது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றது கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில். இக்கோயிலின் பங்குனித் திருவிழா நேற்று  சிறப்பு அபிஷேக ஆராதனை, பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. பொன்னமராவதி, செவலூர்  ஆலவயல், செம்பூதி, கொப்பனாபட்டி, கண்டியாநத்தம், கொன்னைப்பட்டி, ரெட்டியபட்டி, கோவணூர்,  மூலங்குடி, மேலமேநிலை, குழிபிறை, நற்சாந்துபட்டி, சுந்தரம், உலகம்பட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பால்குடம் பூத்தட்டு எடுத்துச்சென்று வழிபாடு செய்தனர். முளைப்பாரியும் எடுத்துச்சென்றனர்.

பொன்னமராவதி டிஎஸ்பி. செந்தில்குமார் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர் வைரவன், ஆய்வாளர் லெட்சுமணன் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பூஜகர்கள் செய்திருந்தனர். கொன்னையூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக்கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்பட்டது.  புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பூச்சொரிதல் விழாவை காண வந்திருந்தனர். இன்று (18ம் தேதி) அக்கினி காவடி விழா நடக்கின்றது.

Tags : Festival Celebration ,Konnayoor Muthuramaniyamman Temple ,
× RELATED விராலிமலையில் பொங்கல் விழா கொண்டாட்டம்