×

இயற்கை தரும் வரப்பிரசாதம்!

ஜோதிடம் என்ற மருத்துவம் - 53

பகல் நேரத்தில் சூரிய ஒளியின் துணைகொண்டு மூளையை சார்ஜ் ஏற்றிக் கொள்வதும், இரவு நேரத்தில் நன்றாக உறங்கி அதில் ஏற்றப்பட்டிருக்கும் சார்ஜினை டிஸ்சார்ஜ் செய்வதுமே சரியான இயக்கம் ஆகும். அதனை விடுத்து நைட் ஷிஃப்ட் என்று இரவு நேரத்திலும் பணி செய்யும்போதுதான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இரவு நேரத்தில் பணி செய்யும்போது பகலில் உறங்க நேரிடுகிறது. பகலில் உறங்குவதால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் அத்தனை சக்திகளையும் இழந்துவிடுகிறார்கள். நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது. அது மட்டுமில்லாமல் மரபணுக்களில் குறைவு உண்டாகிறது. குழந்தை பிறப்பில் பிரச்னை, பிறக்கும் குழந்தைக்கும் உடல் ஆராக்கியத்தில் பிரச்னை என்று பரம்பரைக்கே பிரச்னையை நம்மையும் அறியாமல் தேடிக் கொண்டிருக்கிறோம். சாஃப்ட்வேர் துறையைக் குறை சொல்வது நமது நோக்கம் அல்ல.

சாஃப்ட்வேர் துறையைத் தவிர மற்ற துறைகளில் யாரும் நைட்ஷிஃப்ட்டில் வேலை செய்வதில்லையா என்ற கேள்வி எழலாம். மற்ற துறைகளில் யாரும் தொடர்ச்சியாக நைட்ஷிஃப்ட்டில் பணி செய்வதில்லை. ஒரு வாரம் இரவுப்பணி என்றால் அடுத்த வாரம் பகல் நேரத்தில் பணி செய்கிறார்கள். சாஃப்ட்வேர் துறையில் மட்டுமே தொடர்ச்சியாக இரவு நேரத்தில் பணி செய்கிறார்கள். பகல் நேரத்தில் பணி செய்யும்போது கூட குளிர்சாதன அறைகளில்தான் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். சூரிய ஒளி அவர்கள் உடல்மீது விழுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போகிறது. இதனால் மனித உடலுக்குத் தேவையான இயற்கையான முறையில் கிடைக்கின்ற சக்தியும், நோய் எதிர்ப்புத் திறனும் சுத்தமாகக் கிடைப்பதில்லை. மருந்து மாத்திரைகளின் உதவியுடன் வாழ்க்கையைக் கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். எதற்கெடுத்தாலும் சூரியனை மட்டுமே முன்னிலைப்படுத்துவதன் காரணம் என்ன, மற்ற கிரஹங்களுக்கு மனித உடலின் மேல் தாக்கத்தினை உண்டாக்கும் சக்தி இல்லையா அல்லது மற்ற கிரஹங்களால் மனித உடலிற்கு சக்தியை வழங்க இயலாதா என்ற கேள்வி எழலாம்.

மற்ற கிரஹங்களுக்கும் மனித உடலின் மேல் தாக்கத்தினை உண்டாக்கும் திறன் உண்டு என்றாலும் அந்தத் திறனை அந்த கிரஹங்களுக்கு அளிப்பதே சூரியன் தான் என்ற உண்மையை நாம் அவசியம் உணர வேண்டும். சூரியனைச் சுற்றி வருகின்ற அனைத்து கிரஹங்களும், சூரியனிடம் இருந்துதான் ஒளியைப் பெற்று அதனை பிரதிபலிக்கின்றன. சூரிய கதிர்களைப் பெறும் கிரஹங்கள் அதோடு தங்களுடைய சொந்த குணத்தையும் சேர்த்து பூமியில் வாழும் உயிரினங்களின் மீது பிரதிபலித்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. எந்த கிரஹத்திற்கும் சொந்தமாக ஒளி என்பது கிடையாது. அனைத்து கிரஹங்களும் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கின்ற கண்ணாடியே என்ற உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆக சூரிய ஒளி இல்லாவிடில் இந்த உலகத்தில் ஜீவராசிகளே தோன்றியிருக்காது. நமது வேதங்களும் இதனை உறுதிப்படுத்துகின்றன. யஜூர் வேத ஸம்ஹிதை 3வது காண்டம், 4வது ப்ரஸ்னத்தில் “ஸூஷூம்ன ஸூர்யரஸ்மி: சந்த்ரமா கந்தர்வ:” என்ற வரிகள் இந்தக் கருத்தினையே வலியுறுத்துகிறது.

சந்திரனும், இதர நட்சத்திரங்களும், இன்ன பிற கிரஹங்களும் சூரியனிடமிருந்து ஒளியினை கிரஹித்து பிரதிபலிக்கின்றன என்பதை வேதம் சொல்கிறது. இதனை நாம் படிக்கும் விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கிறது. அவ்வாறு இருக்க நாம் மட்டும் சூரிய ஒளியினைப் புறக்கணிப்பது சரியா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
    பகல் நேரத்தில் வருகின்ற சூரிய ஒளியில் சூரியனிடமிருந்து வருகின்ற சக்தி மட்டுமல்ல, மற்ற கிரஹங்களிடமிருந்து வருகின்ற சக்தியும் சேர்ந்தே வருகிறது. நம் கண்களுக்கு சூரிய ஒளி மட்டும்தானே தெரிகிறது, மற்ற கிரஹங்களின் ஒளி தெரியவில்லையே என்று நினைக்க வேண்டாம். வெயில் நேரத்தில் வருகின்ற ஒளியினை ஏதேனும் ஒரு கண்ணாடியின் வழியாக (முகம் பார்க்கும் கண்ணாடி அல்ல) செலுத்திப் பாருங்கள். மாணவர்கள் தாங்கள் உபயோகிக்கும் ஸ்கேல் வழியாகக் கூட சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்து பரிசோதித்துப் பார்க்கலாம். அதன் வழியாக வரும் ஒளியானது பல வண்ணங்களில் பிரிவதைக் காண இயலும். மழைக்காலத்தில் தோன்றும் வானவில் போல பல்வேறு நிறங்களை சூரிய ஒளி பிரதிபலிக்கும்.

அதாவது ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய வண்ணங்களின் கலவையாக வெளிப்படும். இதனை ராகுகேது என்ற நிழல் கிரஹங்களைத் தவிர நிஜ கிரஹங்களாக நாம் கருதும் ஏழு கோள்களின் ஒளிக்கலவை என்று புரிந்து கொள்ளலாம். ஆக பகல்பொழுதில் வருகின்ற நம் மீது விழுகின்ற சூரிய ஒளியில் அனைத்து கிரஹங்களின் கதிர்வீச்சும் இணைந்தே வருகிறது, அவ்வாறு அனைத்து கிரஹங்களின் கதிர்வீச்சும் இயற்கையின் பரிசாக சரியான விகிதாச்சாரத்தில் நம் மீது விழும் பட்சத்தில் உடல் ஆரோக்யம் என்பது மேம்படுகிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். மனித உடலிற்கு சக்தி மட்டுமல்ல, சூரியன் இல்லாத உலகினில் உயிரினங்கள் வாழவே முடியாது என்ற கருத்தினை மெய்ஞ்ஞானம் உரைக்கிறது. இதனை விஞ்ஞானமும் ஒத்துக்கொள்கிறது. உயிரினங்கள் சுவாசிப்பதற்குத் தேவையான ஆக்சிஜன் வாயு கூட சூரிய ஒளியில் இருந்துதான் கிடைக்கிறது என்பதை அறிவீர்களா..? ஆம் சூரிய ஒளியில் இருந்துதான் ஆக்சிஜன் வாயு பூமியை நோக்கி வருகிறது.

ஒற்றை மூலக்கூறாக இருப்பதை நாம் சுவாசிக்கும் விதமாக இரட்டை மூலக்கூறுகள் ஆக  மாற்றும் பணியைத்தான் ஓசோன் மண்டலம் செய்து வருகிறது. பிராண வாயுவான ஆக்சிஜன் மட்டுமல்ல, ஹைட்ரஜன், நைட்ரஜன், குளோரின் உட்பட அனைத்து வாயுக்களுமே சூரிய ஒளியின் மூலமாகத்தான் நமக்கு வந்து சேர்கிறது. அதனை முறையாக வடிகட்டித் தரும் பணியைச் செய்வதே ஓசோன் மண்டலம் ஆகும். இந்த அளவிற்கு சூரியனைப் பற்றி முக்கியமாக இங்கே விவரிப்பதன் அடிப்படை நோக்கம் சூரியன்தான் இந்த உலகத்தின் ஆதார சக்தி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. கோடைகாலம் துவங்குவதற்கு முன்பே வெயில் இப்படிப் போட்டு வாட்டுகிறதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்காமல் இறைவன் நமக்கு வலிமையையும், ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறான் என்று எண்ணுங்கள். முடிந்த வரை பெரும்பாலும் பகல் நேரத்தில் பணியாற்றுங்கள். கட்டாயம் இரவு நேரத்தில் வேலை செய்துதான் ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் ஒரு வாரம் இரவுப் பணி என்றால் மறுவாரம் பகலில் பணி செய்ய வேண்டும்.

பகலில் பணி செய்பவர்கள் பெரும்பாலும் குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடக்காமல் சூரிய ஒளியினை கிரஹித்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சமாக சூரிய உதய காலத்தில் இருந்து முதல் இரண்டு மணி நேரம், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக வரும் இரண்டு மணி நேரம் என குறைந்தது நான்கு மணி நேரமாவது சூரிய ஒளியினை கிரஹித்துக் கொள்ள வேண்டும். இயற்கை நமக்குத் தந்துகொண்டிருக்கும் இந்த வரப்பிரசாதத்தினை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுவதால் நமக்குத்தான் நஷ்டம் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். வலிய வரும் வரத்தினை வேண்டாம் என்று உதறிவிட்டு உடல்நிலையில் பிரச்னை என்று தீர்வினைத் தேடி அலைவது எத்தனை பெரிய தவறு என்பதை உணர வேண்டிய கால சூழலில் உள்ளோம். வெயிலைப் புறக்கணித்து ஏ.சி. அறைக்குள் முடங்கி இருக்காதீர்கள். நம் உடலின் மேல் வெயில் பட்டு அதனால் உடம்பிலிருந்து வெளிப்படும் வியர்வையால் நமது உடலில் உள்ள குறைகள் அனைத்தும் கரைந்து போகிறது என்று எண்ணுங்கள். சூரிய ஒளியினை அனுபவித்து மகிழுங்கள். ஆரோக்யத்துடன் வாழுங்கள்.

கே.பி. ஹரிபிரசாத் சர்மா

(தொடரும்)

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?