×

வீரமாகாளியம்மன் கோயில் மது எடுப்பு திருவிழா கோலாகலம்

ஆலங்குடி: ஆலங்குடி அடுத்த மேற்பனைக்காடு வீரமாகாளியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தென்னம் பாலைகள் குடங்களில் வைத்து தூக்கி சென்று வீரமாகாளியம்மன் கோயிலை சுற்றி வந்து வழிபட்டனர். ஆலங்குடி அடுத்த மேற்பனைக்காடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழா 15 நாட்களுக்கு முன் காப்புக்கட்டுதல் முளைப்பாரி விதை பாவுதலுடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி கிராம பெண்களால் முளைப்பாரி திருவிழா கடந்த வாரம் நடந்தது. திருவிழாவில் கலந்து கொண்ட பெண்கள் நவதாணிய விதைகள் தூவி துளிர் விட்டுள்ள இளம் பயிர்களை அலங்கரித்து தூக்கி சென்று  மண்ணடித்திடல் என்ற இடத்தில் ஒன்று சேர்ந்து ஊர்வலமாகச் சென்று குளத்தில் கொட்டிச் சென்றனர். தொடர்ந்து குதிரை எடுப்புத் திருவிழா மற்றும் பாட்ட கோயில் கல்பொங்கல் திருவிழாவும் நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மது எடுப்பு திருவிழா கிராம பொது மக்களால் நடத்தப்பட்டது. விழாவையொட்டி கிராம மக்கள் குடத்தில் நெல் நிரப்பி அதில் தென்னம் பாலைகளை குடங்களில் அலங்கரித்து தாரை தப்பட்டைகள் முழங்க வானவேடிக்கைகளுடன் கும்மியாட்டத்துடன் ஊர்வலமாக மண்ணடித்திடல் சென்று, அங்கிருந்து காவிரி ஆற்றங்கரை வழியாக வீரமாகாளியம்மன் கோயிலுக்கு தூக்கி சென்று கோயிலை சுற்றி வந்து அருகில் பாலைகளையும், குடத்தில் கொண்டு வந்த நெல்லையும் கொட்டிவிட்டு தரிசனம் செய்தனர். விழா நாட்களில் கிராம பொது மக்கள் விழாக் குழு மற்றும் உபயதாரர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை விழாக் குழுவினரும், பாதுகாப்பு ஏற்பாடுகளை கீரமங்கலம் போலீசாரும் செய்திருந்தனர்.

தென்னம் பாளைக்கு தட்டுப்பாடு

மது எடுப்புத் திருவிழாவில் கலந்து கொண்ட பொதுமக்கள் கூறுகையில், மது எடுப்புத் திருவிழாவின் சிறப்பே குடங்களில் தென்னம் பாலைகளை வைத்து அலங்கரித்து தூக்கி வருவதுதான். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி வீசிய கஜா புயலால் தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்ததால் தென்னம் பாலைகள் கிடைக்கவில்லை. அதனால் இந்த ஆண்டு  திருவிழாவிற்காக பல கிராமங்களுக்கும் சென்று பாலைகளை சேகரித்து கொண்டு வந்து திருவிழாவில் கலந்து கொண்டோம் என்றனர்.

Tags : Vairamagalayamman Temple ,festival ,festivals ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...