×

சிவகங்கை அருகே கோயில் கருவறையில் விழும் சூரிய ஒளி : பரவசத்தில் பக்தர்கள்

சிவகங்கை:  சிவகங்கை அருகே இலுப்பக்குடி கிராமத்தில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோவில் மூல ஸ்தானத்தில் இந்த மாதத்தில் விழும் சூரிய ஒளியை பக்தர்கள் வணங்கி வருகின்றனர். சிவகங்கையில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது இலுப்பக்குடி கிராமம். இங்கு வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலை குலதெய்வமாக வணங்கக் கூடியவர்கள் சிவகங்கை, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசித்து வருகின்றனர். இக்கோவிலை சுற்றியுள்ள 41 கிராமத்தை சேர்ந்த 800 குடும்பத்தினர் கோவிலுக்கான பணிகளை செய்து வருகின்றனர்.

ஆயிரத்து 584 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள இக்கோவிலில் கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், மூலவர் கோபுரம், சாலை கோபுரம் ஆகியவை உள்ளன. 21 பந்தியில் ராக்காயி, லாடசன்னாசி, சோனைச்சாமி, இருளாயம்மாள், சப்தகன்னிகள், காளியம்மன், அக்கினி, வீரபத்திரர் ஆகிய தெய்வங்களின் சிலைகள், முச்செல்வ விநாயகர், பால முருகன், நவக்கிரகங்கள், துர்க்கையம்மன், தட்சிணாமூர்த்தி, ஆஞ்சநேயர், நந்தீஸ்வரர், லிங்கோத்பவர் உள்பட 31 தெய்வங்களின் பெரிய மற்றும் சிறிய அளவிலான சிலைகளும் உள்ளன.

இங்கு ஆண்டுதோறும் வெகு சிறப்பாக சிவராத்திரி, சனி பெயர்ச்சி விழா நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் மார்ச் 8 முதல் 20ம் தேதி வரையிலான உத்திராயண காலம், செப்.17 முதல் 29ம் தேதி வரையிலான தட்சிணாயன காலத்தில் அதிகாலை சூரிய உதயத்திலிருந்து சுமார் அரை மணி நேரம் மூலஸ்தானத்தில் உள்ள வாலகுருநாதன், அங்காள ஈஸ்வரி மீது சூரிய ஒளி கதிர்கள் விழுகிறது. பிற காலங்களில் இதுபோல் சூரிய கதிர்கள் விழுவது இல்லை. இதனால் தற்போது மூலஸ்தானத்தில் சூரிய ஒளி விழும் நிகழ்வை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.  கோவில் பக்தசபை தலைவர் இருளாண்டி, செயலாளர் திருமுருகன், பொருளாளர் ஜீவானந்தம் ஆகியோர் கூறியதாவது: பழமை வாய்ந்த இந்த கோவிலில் ஊமைப்பெண் பேசியது, நோய் நீங்கியது உள்ளிட்ட அதிசய நிகழ்வுகள் பல நடந்துள்ளது. 54அடி நீளமுள்ள அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆகியவற்றை தாண்டி மூல ஸ்தானத்தில் சூரிய ஒளி விழுவது அதிசயமான ஒன்றாகும் என்றனர்.

Tags : Sun Temple ,Sivagangai Temple ,
× RELATED அழிவிலும் அழகு மார்த்தாண்ட் சூரியக்கோயில்