×

திருமணம் புத்திர பாக்கியம் அருளும்ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள்

உலகில் அதர்மங்கள் அதிகமாகின்ற போது தர்மத்தை நிலை நாட்டவும், பூவுலகை காக்கவும் அவதாரம் எடுத்து மக்களை காப்பவர் எம்பெருமான் நாராயணன். பாற்கடலில் ஆதிசேஷன் மீது திருமகளோடு பள்ளி கொண்டிருக்கும் நாராயணன் பூவுலகில் பல அவதாரம் எடுத்து மக்களின் இன்னல்களை போக்கி வருகிறார். அதன்படி புதுச்சேரி மாநிலம் வடுவக்குப்பம் ஸ்ரீ பத்மாவதி தாயார் பிரசன்ன வெங்கடேச பெருமாளாக கிழக்கு நோக்கி அருள்பாலித்து வருகின்றார்.

தல வரலாறு:

இத்திருத்தலம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. ஸ்ரீராமரும், இளைய பெருமானும் சீத்தா பிராட்டியாரை தேடி வடக்கிலிருந்து தென்திசை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்படி செல்லும் வகையில் காசாம்பு செடிகள் என்னும் ஒருவகை மரங்களும், தாளிப் பனைமரங்களும் அடர்ந்த வனமாக காட்சி அளித்தது. காசாம்பு மலரின் வாசனை வனம் முழுவதும் வீசக்கண்டு இருவரும் சற்றுநேரம் இளைப்பாறுவதற்கு அமர்ந்து விட்டனர். ராமருக்கு தண்ணீர் தாகம் ஏற்படவே அருகில் உள்ள மலட்டாற்றில் நீராடி, தாகத்தை போக்கிக்கொண்டனர். இந்த மலட்டாற்றில் பரிசுத்த மனதுடன் யாரொருவர் ஸ்நானம் செய்து நவக்கிரக பூஜை அனுஷ்டிக்கிரார்களோ அவர்களுக்கு சகலவிதமான பாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் இதனை கடைப்பிடித்தால், புத்திர பாக்கியம் கிட்டும் என்று ராமர் வாக்களித்ததாக பெரியவர்களின் ஐதிகமாக உள்ளது. பின்னர் ஊர் பெரியவரின் வாக்குப்படி மலட்டாற்றின் வடக்கு பகுதியில் கோயில் கட்டப்பட்டது. திருப்பதி திருவேங்கட முடையான் திருக்கோலத்தில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார்.

உட்புர சன்னதிகள்:

கோயிலில் மூலவர் வெங்கடேச பெருமாள், தாயார் பத்மாவதி சன்னதி, கருடாழ்வார், ஆஞ்சநேயர், கோதண்டராமன் சன்னதி, விஷ்ணு துர்க்கை, நாகலஷ்மி ஆகியோரது சன்னதிகள் உள்ளது. முக்கிய விழாக்கள்: வைகாசி மாதத்தில் மூலவர் அலங்கார திருமஞ்சனம், புரட்டாசி சனிக்கிழமைகளில் திருவேங்கடமுடையான் திருக்காட்சிகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி, தை மாதத்தில் ரத சப்தமி, பங்குனி மாதத்தில் ராமர் சீதா கல்யாணம் நடைபெறுகின்றது. பிரதி மாத பௌர்ணமிகளில் கருடசேவை நடைபெறுகின்றது. பெருமாளை திருவோண நட்சத்திரத்தில் வழிபட்டால் தடைபட்ட திருமணம், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது  நிதர்சனமான உண்மை. இந்த சன்னதியில் தாளிப்பனைமரம் தலவிருட்சமாக உள்ளது.

செல்வது எப்படி?

புதுவையில் இருந்து 20 கி.மீ தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாக 25 கி.மீ தொலைவிலும், கடலூரில் இருந்து தவளக்குப்பம், பாகூர் மற்றும் மடுகரை ஆகிய ஊர்களின் வழியாக 20 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்ம பெருமாள் ஆலயத்திற்கும், தவளக்குப்பம் சிங்கிரிகுடி பெருமாள் ஆலயத்திற்கும் நடுவில் இத்தலம் அமைந்துள்ளது. காலை 8.30 மணிமுதல் 12.30வரையும், மாலை 5.30 மணிமுதல் 8.00 வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

Tags : birthplace ,Arulillary Prasanna Venkatesh Perumal ,
× RELATED ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என உச்ச...