×

துறவிக்கு வேந்தன் துரும்பு

திருமூலர் மந்திர ரகசியம்

நல்ல நிலத்தில் விதைப்பது, நன்கு விளைந்து நல்ல பலனைத்தரும். களர்நிலத்தில் விதைப்பது, பலன் தராத தோடு நம் உழைப்பையும் நம்மையும் வீணாக்கி விடும். இதைப்பற்றித் திருமூலர் சொல்வதைப் பார்த்து விட்டு, அதன்படி நடந்த அற்புதமான வரலாறுகளையும் பார்க்கலாம்.

திலமத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்
பலமுத்தி சித்தி பரபோகமும் தரும்
நிலமத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்
பலமற்றே பரபோகமும்
குன்றுமே (திருமந்திரம் - 501)

கருத்து: எள் அளவு பொன்னைச் சிவஞானிக்குத் தந்து உதவினால் அது பல பிறவிகளுக்கு மறுமையில் முத்தியும், இம்மையில் எண்ணியதை அடைகின்ற நிலையையும், வீட்டுலக இன்பத்தை அடையும் பயனையும் தரும். அப்படி இல்லாமல், இந்த உலகளவு பொன்னை முழு மூடருக்குக் கொடுத்தால், அது ஒரு பயனையும் நன்மையும் தராது. வாருங்கள்! இப்பாடலில் திருமூலர் சொன்னபடி நடந்த அற்புதமான வரலாறுகளைப் பார்க்கலாம்.

சித்தர் பாடல்களில், பத்திரகிரியார் பாடல்கள், ‘எக்காலக் கண்ணியார்’ எனச் சிறப்பாகச் சொல்லப்படும். (பர்த்ருஹரி வேறு; பத்திரகிரியார் வேறு)  பத்திராசலத்தில் பிறந்தவர்; நாகப்பட்டினத்தின் அரசராக இருந்தவர்; சம்ஸ்கிருதம், தமிழ் முதலான மொழிகளில் திறமைசாலி குடிமக்கள் போற்றும் உத்தமர்; தூய்மையான உள்ளம் படைத்தவர்- பத்திரகிரியார்.

இவ்வளவு இருந்தும், குழந்தை இல்லாத குறையால் பத்திரகிரியார் மனம் வாடினார்; விரக்தி மேலோங்கியது; மனம் முத்தியை அடையத் துடித்தது. அதற்குத்தகுந்த குரு வேண்டுமே ! என்ன முயன்றும் பத்திரகிரியாருக்குத் தகுந்த குரு கிடைக்கவில்லை. ஒரு நாள், சேனாதிபதியைக் கூப்பிட்ட பத்திரகிரியார், “இந்த உலகில் சீடர்கள் பலர் இருக்கிறார்கள்; வழிகாட்டத் தான் குருநாதர் ஒருவர்கூட இல்லை என்று பறை அடித்து அறிவியுங்கள் !” என்று உத்தரவிட்டார். அரசாங்க ஆணை; அதுவும் அரசரே நேருக்குநேராக இட்ட ஆணை ஆயிற்றே! உடனே முரசம் அடித்து அறிவித்தார்கள். அது அவ்வழியே போன பட்டினத்தாரின் காதுகளில் விழுந்தது.

பறை அடிப்பவரை அழைத்த பட்டினத்தார், “மன்னர் சொன்னதைத் தவறாக மாற்றிச்சொல்லிப் பறை அடிக்கின்றாயே! ‘குருநாதர்கள் ஆயிரம் ஆயிரமாக இருக்கிறார்கள். உருப்படும் சீடன்தான் ஒருவன்கூட இல்லை’ என்று சொல்லிப்பறை அடி! எங்கிருந்து பறையடிக்கத் தொடங்கினாயோ, அங்கிருந்தே ஆரம்பி. போ!” என்றார். பட்டினத்தாரின் வடிவமும் அவர் சொன்ன கம்பீரமும் பறை அடிப்பவரை மாற்றியது. அப்புறம் என்ன? அவரும் பட்டினத்தார் சொன்னதைப் போலவே, மாற்றிச் சொல்லி அடித்தார். உப்பரிக்கையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மன்னர், பரபரவெனக் கீழே இறங்கி ஓடிவந்தார்; “நான் சொன்னதை மாற்றி அடிக்கிறீர்களே! ஏன்?” எனக்கேட்டார்.

பறையடிப்பவர்கள் பட்டினத்தாரைப் பற்றிச்சொல்லி, நடந்ததை விவரித்தார்கள்.  மன்னர் அதிர்ந்தார்; ஓட்டமாக ஓடினார்; பட்டினத்தாரின் திருவடிகளில் விழுந்து வணங்கி,”நான் சொன்னதை ஏன் மாற்றி அடிக்கச் சொன்னீர்கள்?” எனக்கேட்டார்.  பட்டினத்தார் பதில் சொன்னார்; “நீ ராஜாவாகவே இருந்தாலும் சரி! இல்லாததையெல்லாம் சொன்னால், நான் எப்படி ஒப்புக்கொள்வேன்? உனக்கு உயர்வையளிக்க, நான் இருக்கும்போது, நீ எப்படி குருநாதர்இல்லை என்று சொல்லலாம்? உரிய பக்குவம் உனக்கு ஏழு நாட்களில் வரும். அதுவரை அமைதியாக இரு! தேவரகசியம் வெளிப்படும். நான் இங்கேயே தான் இருப்பேன்” என்றார்.

மன்னர் அரண்மனை திரும்பினார்; ஏழாவது நாள். மன்னரின் படுக்கை அறையில் படுக்கையில் மலர்களைத்தூவி, மன்னர் துயில் கொள்வதற்காகப் படுக்கையைத் தயார் செய்து வைக்கும் பெண், தன் வேலை முடிந்ததும், மன்னரின் அந்தப்படுக்கையில், தான் சற்றுநேரம் படுத்துப்பார்த்தாள்; அது சந்தோஷமாக இருந்தது.  அந்தநேரம் பார்த்து மன்னர் வந்து விட்டார். எப்படி இருக்கும் அவருக்கு? மன்னர் படுக்கும் படுக்கையில், பணிப் பெண் படுப்பதா? அவளை எழுப்பி, “முடிந்தவரை, இவளை சாட்டையால் அடியுங்கள்! “என உத்தரவிட்டார். பணிப்பெண்ணை சாட்டையால் அடித்தார்கள். அடி தாங்காமல் அழுத அவள், பிறகு சிரித்தாள். பார்த்த மன்னர் பரபரத்தார்” அடி வாங்கியும் சிரிக்கிறாயே! ஏன்?” எனக்கேட்டார்.

“மன்னா! இந்தப்படுக்கையில் சில விநாடிகள் படுத்ததற்கே, இவ்வளவு அடி விழுகின்றதே! தினந்தோறும் இதில் படுக்கும் உங்களுக்கு எவ்வளவு அடி விழும் என்று நினைத்தேன். சிரிப்பு வந்து விட்டது “எனப்பதில் சொன்னாள் பணிப்பெண். மன்னருக்குப் ‘பகீர்’ என்றது; ‘இன்று ஏழாம் நாள்’ என்று பட்டினத்தார் சொன்னது நினைவு வந்தது; ஓடினார் பட்டினத்தாரிடம். பிறகு என்ன? பட்டினத்தாருடன் துறவியாகப் புறப்பட்டு விட்டார் பத்திரகிரியார்.

நாட்டையும் அரச பதவியையும் துறந்துவிட்டுப் புறப்பட்ட பத்திரகிரியாரால், தன் செல்ல நாயை பிரிய முடியவில்லை; மேலும் ஆண்டியாக போகிறோமே என்பதால் திரு ஓடு ஒன்றும் எடுத்துக்கொண்டார். குருநாதரின் அனுமதியுடன் அவற்றை மட்டும் கொண்டுபோனார். இனிமேல்தான் பிரச்சனையே! சற்று தூரம் போனவுடன், ஒரு புதரைச்சுட்டிக் காட்டிய பட்டினத்தார்,”இதற்குள் இரு நீ! யாரும் நெருங்க முடியாத இடம் இது” என்று சொல்லிப்புதர் ஒன்றில் பத்திரகிரியாரை அழுத்தி விட்டுப் போனார்.

போன பட்டினத்தார் இரவு திரும்பி வந்தார்; பத்திரகிரியாரை எதிரிலிருந்த குளத்தில் நீராடச்சொல்லி, அவருக்குத் தன் கையாலேயே திருநீறு இட்டு, ஐந்தெழுத்து மந்திர உபதேசம் செய்தார்; அதன்பிறகு, தான் கொண்டுவந்த உணவைத் தந்தார். அதை மகிழ்ச்சியோடு சாப்பிட்ட பத்திரகிரியார், மீதியை நாய்க்குப் போட்டார். அவர் சாப்பிட்டு முடிக்கும் வரை பார்த்துக் கொண்டிருந்த பட்டினத்தார், அதன்பிறகு பத்திரகிரியாரை அழைத்துக்கொண்டு, வேறோர் ஊருக்குப்போனார்.

ஊர்ப் பொதுவில் பத்திரகிரியாரை நிறுத்தி, “இவனைப் பாருங்கள்! இவன் எல்லா வேலைகளையும் செய்வான். வாட்ட சாட்டமாக இருக்கும் இவனை, ஒரு பொன்னுக்கு அடமானம் வைக்கிறேன். யாருக்கு வேண்டும்? கேளுங்கள்!” என்றார். கூட்டத்தில் ஒருவர்கூட வாய் திறக்கவில்லை. ஒரு தாசி மட்டும் துணிந்து, ஒரு பொன்னை எடுத்து நீட்டினாள். அதை வாங்கிக்கொண்ட பட்டினத்தார், அவளிடம் பத்திரகிரியாரை ஒப்படைத்து,”பத்திரகிரி! இது சிவன் செயல். முகம் கோணாமல், இவள் சொல்லும் வேலைகளைச் செய்து வா! சில நாட்கள் கழிந்ததும், உன்னை வந்து மீட்டுக்கொள்வேன்” என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

மன்னராயிருந்து மாபெரும் துறவியிடம் சீடரான பத்திரகிரியார், சற்றுகூட மனம் கோணவில்லை. தாசியுடன் போய், அவள் காலால் இட்ட வேலைகளைத் தலையால் செய்தார். தாசியும் அவள் இளம் வயது மகளும், பத்திரகிரியாரை ஆட்டிப்படைத்தார்கள்; கசக்கிப் பிழிந்தார்கள். அவர்கள் சொன்னவற்றையெல்லாம், பொறுப்பாகச்செய்து முடித்த பத்திரகிரியார், எந்தநேரமும் சிவ பஞ்சாட்சரத்தை உருவேற்றி வந்தார்; அதன் பயனாக, பத்திரகிரியாருக்கு சித்திகள் பல கைகூடின. தாசி தந்த உணவை உண்டு, மீதி உணவை நாய்க்குப்போட்டு வந்தார் பத்திரிகிரியார்.

ஒருநாள்! இரவுநேரம். அனைவரும் உண்டு முடித்தாகி விட்டது. பத்திரகிரியாரும் தன் வழக்கப்படி, தான் சாப்பிடும் மண் பாத்திரத்தில் (திருவோட்டில்) உணவு உண்டு முடித்து, நாய்க்கும் போட்டார். அதன்பின் தான் சாப்பிட்ட திருவோட்டைக்கழுவி, கழுவிய நீரை வெளியில் வீசிக்கொட்டினார். வீசிக்கொட்டிய நீர், எதிர்பாராமல் தாசிக்கிழவி மேல் பட்டு வழிந்தது. விளைந்தது ஆச்சரியம்! கிழவியாக இருந்த தாசி, குமரியாக மாறினாள். இனம் புரியாத சந்தோஷத்தில் அவள் கத்த, மகள் ஓடிவந்தாள். வந்த மகளிடம் விவரத்தைச் சொன்னாள் தாய்.

மகளின் கண்களும் மலர்ந்தன. “மகளே! மாபெரும் தவறு செய்து விட்டோம். இவர் யாரோ மகான்! சித்த புருஷர் ! இவரைப்போய், ஒரு பொன்னை நீட்டி வாங்கிக்கொண்டு வந்து விட்டேனே! எவ்வளவு பெரிய பாவம் இது?” என்ற தாயார் பத்திரகிரியாரின் திருவடிகளில் விழுந்தாள்; மகளும் விழுந்தாள்.  “சுவாமி! வயோதிகத்தை வாலிபமாக மாற்றும் சித்தபுருஷரான தங்கள் மகிமை தெரியாமல், தங்களை இழிவாக வேலைகளில் ஏவி விட்டோம். மன்னியுங்கள்! மன்னியுங்கள்!” என்று தாயும் மகளுமாகக் கதறினார்கள். பத்திரகிரியார் வாயே திறக்கவில்லை. அன்று இரவு தாசியின் வீட்டில் யாரும் உறங்கவில்லை.

பொழுது விடிந்தது. சூரியன் ‘பளிச்’சென்று பரவுவதற்குள்ளாக, தாசியின் வீட்டு வாசலில் நின்றார் பட்டினத்தார். விவரமறிந்து தாசியும் மகளும் பரபரப்பாக வெளியே ஓடி வந்தார்கள்.  வெளியே வந்தவர்களில் தாயாரின் கையில் ஒரு பொன்னை வைத்த பட்டினத்தார், “என்ன! இவன் ஒழுங்காக வேலைகளைச் செய்தானா? மரியாதையாக நடந்து கொண்டானா?” என்று விசாரித்தார்.

பட்டினத்தார் நீட்டிய பொன்னை வாங்க மறுத்த தாசி, “மன்னியுங்கள் சுவாமி! மன்னியுங்கள்! விவரம் தெரியாமல் இவரை அடகுபிடித்து விட்டோம். அதைவிடப் பெரும்பாவம் இவரை அடிமையைப்போல நடத்தி, இழிவாகப்பேசி வேலை வாங்கியது! மகான் என்று தெரியாமல், தவறாக நடந்து விட்டோம்!” என்று பலவாறாகப் புலம்பி மன்னிப்பு கேட்டார்கள். அவள் பேசியது எதையுமே காதில்வாங்காத பட்டினத்தார், பலவந்தமாக ஒருபொன்னை அவள் கையில் திணித்து விட்டு, பத்திரகிரியாரை இழுத்துக் கொண்டு புறப்பட்டார்.

அவர்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த தாசியும் அவள் மகளும், “ஞானிகளின் போக்கே தனி. அவர்களின் மனநிலையை யாரால்அறிய முடியும்? மகான்கள் எவ்வளவு பெரியவர்கள்! நம் கூடவே, இங்கிருந்த மகானின் பெருமை உணராமல் போய் விட்டோமே!” என்று நாத்தழுதழுக்கக்கூறிக் கண்ணீர் வடித்தார்கள்.  இதன்பின்,பட்டினத்தாருக்கு முன்பே பத்திரகிரியாரும் அவர் நாயும் முக்தியடைந்த விவரங்கள் தனியானவை.

 சிவனடியாரான சித்தபுருஷரான பட்டினத்தாரிடம் தன்னையே முழுமையாக ஒப்படைத்தவர் பத்திரகிரியார். அவரை ஒரு பவுன் தந்து வாங்கி, எடுபிடியாக வேலை வாங்கினாள் தாசி.  பத்திரகிரியார், தன் குருநாதருக்கு முன்பாகவே முக்தி அடைந்தார். காசு கொடுத்து வாங்கிய தாசியோ, முதுமை நீங்கி, இளமை பெற்றாள். எந்தவிதத்திலாவது நல்லவர்களுக்குத் தந்தது, உதவும்,உயர்த்தும்; சந்தேகமேயில்லை. திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால், பலமுத்தி சித்தி, பரபோகமும் தரும் எனும் திருமூலரின் பாடல், சொல்லுக்கு சொல் பலித்த உண்மையை உணர்த்திய நிகழ்வுகள் இவை. திருமூலரைப்போன்ற சித்தபுருஷர்களின் வாக்கு, ஒரு போதும் பொய்க்காது.

நல்லவர்களுக்குக் கொடுப்பதைப்பற்றி இவ்வாறு சொன்ன திருமூலர், கொடுக்கக்கூடாதவர்களுக்குக் கொடுப்பதால் விளையும் தீமைகளையும் சுட்டிக்காட்டிப் பாடலை நிறைவு செய்கிறார். தீயவர்களுக்கு உலகளவு செல்வத்தைக்கொட்டிக் கொடுத்தாலும், அவர்கள் தீயதையே தான் செய்வார்கள் . நமது செல்வம் மட்டுமல்ல; அனைத்துமே போய்விடும். மேலும் தீமைகள்தாம் விளையும். ஆகவே மறந்துபோய்க்கூட, தீயவர்களுக்கு உதவக்கூடாது; பாம்பிற்குப் பால் வார்க்கக் கூடாது என்பதும் இதுவே. நல்லவர்களுக்கு உதவுவோம்! நாமும் உயர்வோம்!

- பி.என்.பரசுராமன்

(மந்திரம் ஒலிக்கும்)

Tags : monk ,
× RELATED சமோசா தொண்டையில் சிக்கி புத்த துறவி பலி