×

ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கான வழிமுறைகள் அரசு கருவூலம் மற்றும் கணக்குத்துறை தகவல்

சென்னை: ஓய்வூதியர்கள் நடப்பாண்டிற்கான நேர்காணல் செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள்  குறித்த விவரத்தை தமிழக அரசின் கருவூலம் மற்றும் கணக்குத்துறை  வெளியிட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை / மாவட்டக்  கருவூலங்கள் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு  ஓய்வூதியர்கள்/ குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஜூலை முதல் செப்டம்பர்  மாதம் வரை கருவூலத்தில் ஆண்டு நேர்காணல் செய்யப்பட வேண்டும்.  இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையை பயன்படுத்தி ஓய்வூதியர்கள் தங்களது  இருப்பிடத்திலிருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம்  செலுத்தி  மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து  ஆண்டு நேர்காணல்  செய்யலாம். அரசு இ-சேவா மற்றும் பொது சேவை மையங்களின் மூலம் ஓய்வூதியர் /   குடும்ப ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு   வாழ்நாள் சான்றிதழ்  பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கத்தின்  மூலமாகவும் கைரேகை குறியீட்டு கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள்  சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யலாம். கைவிரல்  ரேகை பதிவு  செய்யும் கருவி இல்லாமல்  ஜீவன் பிரமான் முகம் பதிவு செயலி  பயன்படுத்தி  வீட்டிலிருந்தபடியே மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல்  செய்யலாம். ஓய்வூதியர்கள் / குடும்ப ஓய்வூதியர்கள் வாழ்நாள்  சான்றினை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம்  செய்து ஓய்வூதிய வங்கிக் கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர், அரசிதழ்  பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர்,  வட்டாட்சியர்/துணை  வட்டாட்சியர் அல்லது வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஏதேனும் ஒரு அலுவலரிடம்  கையொப்பம் பெற்று தபால் மூலமாக தொடர்புடைய கருவூலத்திற்கு அனுப்பி  வைக்கலாம். வெளிநாட்டில் வசிக்கும் ஓய்வூதியர்கள் மேற்கண்ட இணையதள  முகவரியிலிருந்து வாழ்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து இந்திய தூதரக  அலுவலர் / மாஜிஸ்ரேட் / நோட்டரி பப்ளிக்  அலுவலரிடம் வாழ்வுநாள் சான்று  பெற்று சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு  தபால் மூலம்  அனுப்பலாம்.  மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி நேரடி  நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் மேற்குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும்  ஒரு அரசு வேலை நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2  மணி வரை ஓய்வூதியம்  வழங்கும் அலுவலகம் மற்றும்  கருவூலத்திற்கு சென்று ஆண்டு  நேர்காணல்  செய்யலாம். ஓய்வூதியர்கள் ஆண்டு நேர்காணலில் ஏதும் குறைபாடுகள்  இருப்பின் தொடர்புடைய மாவட்டக் கருவூல அலுவலர் / மண்டல இணை இயக்குநர்  அல்லது  சென்னை கருவூல கணக்குத்துறை ஆணையரகத்திற்கு தொலைபேசி  / மின்னஞ்சல்  வாயிலாக தெரிவிக்கலாம். கருவூல கணக்குத்துறை ஆணையரகம், பேராசிரியர்  க.அன்பழகன் மாளிகை , 3வது தளம், நந்தனம், சென்னை-600 035; மின்னஞ்சல்  dta.tn@nic.in; கட்டணமில்லா தொலைபேசி எண்-  18005995100க்கு அழைக்கலாம்.  மேலும் தமிழ்நாடு மின்வாரியம், ரயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு  நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற  ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது….

The post ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கான வழிமுறைகள் அரசு கருவூலம் மற்றும் கணக்குத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Government Treasury and Accounts Department ,Chennai ,Treasury and Accounts Department of the Government of Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...