×

ஸ்ரீ ருத்ரம் கூறும் சிவலீலை

‘‘பரமேஸ்வரா! அடைக்கலம் நாடி உன் சந்நதி வந்து விட்டேன். முப்பொழுதும் உன் திருமேனி தீண்டி பூஜித்த என் உயிரை காலன் கொண்டு செல்வதா? சுவாமி, காத்தருளுங்கள்’’ என்று கதறி  லிங்கத்தை அணைத்துக் கொண்டான் மார்கண்டேயன். சிவம் சினந்து வந்து, காலனை உதைத்து பாலனை காத்தது. அவன் கொண்ட சினம் , யமனுக்கு  தீக்ஷை தந்து அருளிவிட்டது. பாலகனை சிரஞ்சீவியாவும் ஆக்கி விட்டது.  ஜீவாத்மா கொள்ளும் கோபம் தள்ள வேண்டியது . பரமன்  கொள்ளும் கோபம் போற்றுதலுக்குரியது. ஆகவே வேதமும் முதலில் ‘‘ஓம் நமோ பகவதே ருத்ராய’’ என்று அவன் சினத்தை போற்றுகிறது.

 பெருமிழலைக் குறும்பர் என்று ஒரு நாயனார். சுந்தர மூர்த்தி நாயனாரின் திருவடியை பணிந்தே அட்டமா சித்தியும் அடைந்தவர். சுந்தரர் கயிலை செல்லப் போவது கேட்டு,  அவருக்கு முன்னே யோகத்தால் கயிலை அடைந்தவர். இங்கு பல தலங்கள் சென்று ஈசனை பாடிய சுந்தரர்க்கு முன் சுந்தரரை மட்டுமே பாடிய இவர், சிவ கதி அடைந்து விட்டார். அரன் சேவையை விட அடியவர் சேவையே சிறந்தது என்று உணர்த்தவே ருத்ரம் ‘‘அதோயே .... கரண் நமஹ’’ என்று கூறி சிவனடியாருக்கு சலாம் இடுகிறது.
 
அடுத்தபடியாக, ஒரு வேண்டுதலை வைக்கிறது வேதம். (அத தஸ்ய தனு: ......பவ) ‘‘அப்பனே உன் கையில் உள்ள வில்லின் நாணை அவிழ்த்து விடு’’ என்று ஈசனை நோக்கி சொல்கிறது வேதம். ஏன்? அவன் வில்லில் நாண் ஏற்றியும் பயன் இல்லை என்பதால்தான் - அன்று, முப்புரத்தையும் எரிக்க ஈசன் மேருவை வில்லாக வளைத்தான். ஆயினும் அது பயன் படவில்லையே.  சிரித்தே முப்புரத்தையும் அழித்து ஒழித்து விட்டானே. ஆக்கவும் அழிக்கவும் அவன் குறு நகையே போதும் அல்லவா?  

அன்று வானில் சுற்றித் திரிந்த முப்புரத்தை தாக்க ஈசன் செல்வதற்கு ஒரு தேர் செய்யப்பட்டது. செய்தவன் விஸ்வகர்மா  என்னும் தேவ சிற்பி. அதன் அங்கங்களாக இந்திராதி தேவர்கள் இருந்தனர். ஈசன் போருக்கு புறப்பட சித்தமாகி அந்த தேரில் ஏறினார். அப்போது அந்த தேரின் பல்வேறு பாகத்தில் இருந்த தேவர்கள்,  தன்னால்தான் ஈசன் முப்புரத்தையே எரிக்கப் போகின்றார் என்று இறுமாந்தனர். ஆணவம் இருக்கும் இடத்தில் இறைவன் இருப்பது இல்லை. தேவர்களின் ஆணவத்தை அறிந்த மாலவன் காளையாக மாறினான். பரமன் தேரை விடுத்து எருதில் ஏறினான். மாலவன் என்றால் அன்பானவன் என்று பொருள். அதாவது ஈசன் தூய அன்பையே ஏற்பான்.  ஆணவத்தை இல்லை என்பதை இந்த புராண சம்பவம் காட்டுகின்றது. இதை கருத்தில் கொண்டே , “நமோ பப்ளுஷாய” என்றது வேதம். அதாவது ரிஷப வாகனனை வணங்குகின்றேன் என்று பொருள். அடுத்து, எதிரிகளை நன்கு தாக்கி,  கதறச் செய்பவன் என்று சொல்கிறது ( நம: ஸஹமானாய...) . இந்த வாக்கியத்திற்கு பின் வரும் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. ஒரு நாள் இலங்கை வேந்தன், செருக்கொடு புஷ்பக விமானத்தில் ஏறி உலா வந்து கொண்டு இருந்தான்.

இடைப்பட்டது கைலாசம். அவனுக்கு வந்தது ஆவேசம். இருபது கைகளாலும் கயிலையை பெயர்த்து ஏறிய முற்பட்டான். அதை அசைத்தும் விட்டான் லங்காதிபதி. ஈசன் நிதானமாக கால் கட்டை விரலை ஊன்றினான். பாரம் தாங்காமல் அலறினான்  இலங்கை வேந்தன். அவன் கதறலால் உலகமே நடுங்கியது. அன்று முதல் உலகம் நடுங்கும் அளவு உறக்க கத்தியவன் என்ற பொருள் படும்படி, அவனை,  நாம் ராவணன் என்று  அழைக்கிறோம். இப்படி ராவணனை அலற செய்ததால் தான் வேதம் ஈசனை அவ்வாறு புகழந்து உள்ளது போலும்.

இப்போது வேதம் ஒரு படி மேலே சென்று பரமனை ‘‘தஸ்கரனாம் பதி’’ அதாவது திருடர் கூட்டத்து தலைவன் என்று சொல்கிறது. பொருளை திருடுபவன் திருடன். ஆனால். மனிதர் உள்ளத்தையும் அவர்தம் பாவத்தையும் கவர்பவன் திருடர் தலைவன்.  சம்பந்தர் ‘‘என் உள்ளம் கவர் கள்வன்’’ என்று அல்லவா ஈசனை போற்றினார். ஆதி சங்கரர் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார். சிவன் என்னும் திருடர் தலைவனிடம் , மற்றொரு திருடனை கண்டிக்கும் படி சொல்கிறார். சதா பிறர் பொருள் மீது ஆசைப் பட்டு அதை கவர எண்ணமிடும் மனம் என்னும் திருடனை ஈசன் முன் நிறுத்துகிறார் சங்கரர்.

‘‘அப்பனே ஈஸ்வரா, நீயோ உள்ளம் கவர் கள்வன்,என் மனமோ பிறர் பொருளை திருடும் திருடன். ஆகையால் நீ இவனை ஆட்கொண்டு, இவனை திருத்து’’ என்று ஈசனிடம் வேண்டுகிறார் சங்கரர். (சிவானந்த லஹரி - 22)   அடுத்து வேத நாயனார் பரமனை சபாபதியாக தரிசிக்கிறார். சபாபதி என்றாலே சிதம்பரநாதர் தான் மனக் கண் முன் வருவார். மனம் என்னும் மேடை, தூய்மை ஆகி வெற்றிடமானால், அதில் ஈசன் நர்த்தனம் ஆடுவான். இதுவே சிதம்பர ரகசியம். சரி சித்தம் வெற்றிடம் ஆவது எப்படி?. அது யோகத்தாலும் சாத்தியம் பக்தியாலும் சாத்தியம்.

அதைக் காட்டவே யோகத்தில் சிறந்த பதஞ்சலிக்கும், பக்தியில் சிறந்த வியாக்ரபாதருக்கும் சமமாய் அவன் ஆனந்தத் தாண்டவத்தை காட்டுகின்றான் நடராஜன். அவன் மட்டும் ஆட வில்லை. அவன் அடியவரையும் ஆடவும் பாடவும் விட்டுப் பார்க்கிறான். தந்தை மகனைக் கண்டு களிப்பது போல தானும் களிக்கிறான். மாணிக்கவாசகரை திருவாசகம் பாட விட்டு தானே அதை எழுதவும் செய்தான். இந்தக் குணமே வேத நாயனாரை கவர்ந்திருக்க வேண்டும்.

அதனால் தான் சபாபதியைப் புகழ்கிறார். அடுத்து அவனை ‘‘அஷ்வேப்யோ அஷ்வபதிப்யச்ச வோ நமோ நமோ’’ என்கின்றார் வேதநாயனார். அதாவது குதிரையாகவும் குதிரையை நடத்துபவனாகவும் இருக்கிறான் என்கிறார்.  பரமேஸ்வரன், மாணிக்கவாசகருக்காக நரியை பரியாக (குதிரையாக) மாற்றி அருளினான். தானே ஒரு குதிரை வீரன் ரூபத்தில் குதிரைகளை ,அரிமர்த்தன பாண்டியன் அவைக்கு நடத்தி வந்தான். ஈசனின் குதிரை நடத்திய அழகும் மிடுக்கும் மன்னனைக் கவர்ந்து விட்டது. அவருக்கு, பாண்டியன் உயர்ந்த பட்டாடை ஒன்றை பரிசாக தந்தான். அதை ஈசன் குதிரையின் சாட்டையால் அலட்சியமாக வாங்கினான். இறைவனுக்கு மாணிக்கவாசகர் பக்தியே உகந்து ஏற்கும் பொருள்.

பட்டோ பகட்டோ இல்லை. இன்றும் இந்த குதிரை வீரன் கோலத்தில் ஈசனை திருப்பெருந்துறையில் தரிசிக்கலாம். அடுத்து,  ஈசனை வேடன் என்றும், மீனவன் என்றும் வர்ணிக்கிறார் வேத நாயனார். வருங்காலத்தில் அர்ஜுனன் பாசுபதம் வேண்டி தவமியற்றுவான். அப்போது அவனுக்கு அருள, சிவன், வேடுவனாக வருவான் என்று  வேத நாயனார் கணித்தார் போலும். ஆதலால் வேதநாயனார் ஈசனை வேடன் என்று விளித்து விட்டார். திருவிளையாடற் புராணத்தில்  ஒரு கதை உண்டு. அதன்படி, ஒருமுறை அம்பிகை ஈசனை வேதத்தின் பொருள் சொல்லுமாறு கேட்கிறாள்.

பாதி உபதேசம் நடக்கும்போது, அம்பிகை குமரனைக் கண்டு கொஞ்ச ஆரம்பிக்கிறாள். ஈசன் கோபம் அடைந்து உமையை மீனவப் பெண்ணாக பிறக்கும்படி சபிக்கிறான். அம்பிகையும் மீனவப் பெண்ணாக பிறக்கிறாள். ஈசன் தானே மீனவனாக வந்து அவளை தடுத்து ஆட்கொள்கி்றான். இந்த சரிதத்தை வேதநாயனார் சித்தத்தில் கொண்டே ஈசனை மீனவனாக போற்றி உள்ளான் போலும். அது மட்டும் இல்லை ஈசன் மீனவத் தொழில்தானே செய்கிறான். ஆம். சம்சார சாகரத்தில், நாயன்மார்கள் போன்ற நல்ல மீன்களை பிடித்து கரை சேர்கிறான். மற்ற மீன்களை விட்டு விடுகி்றான்.

இப்போது இறைவனை நாய்களோடு திரியும் சண்டாளன் என்று சொல்கிறது வேதம். (4.2.8 & 9). ஒருவிதத்தில் பார்த்தால் இதுவும் உண்மைதான். ஆதி சங்கராச்சாரியார் ஒரு முறை காசிக்கு விஸ்வநாதரின் தரிசனத்திற்கு செல்கின்றார். அப்போது நான்கு வேட்டை நாய்கள் சூழ, கையில் கள் பானையோடும் வாயில்  கள் வாடையோடும் ஒரு சண்டாளன் அவர் வழியில்  குறுக்கிட்டான். ஆதி சங்கரர் அவனை விலகிப் போகச் சொன்னார்.

அந்த சண்டாளன் மெதுவாக, ‘‘ஒரு பிரம்மம் இன்னொரு பிரம்மத்தை விலகிப் போகச் சொல்கிறது’’ என்றான். ஆதிசங்கரருக்கு பொட்டில் அடித்தாற்போல் இருந்தது. காரணம் அவரின் அத்வைத தத்துவத்தை அந்தச் சண்டாளன் சுருக்கமாகச் சொல்லி விட்டான். சடால் என்று சண்டாளன் காலில் விழுந்தார், சங்கரர். ‘‘நீரே எம் குரு’’ என்று உருகினார். இப்போது சண்டாளன் இருந்த இடத்தில் பரமேஸ்வரன் இருந்தான். நாய்கள் வேதங்களாக காட்சி தந்தன. தன் அடியவருக்கு புத்தி புகட்ட சண்டாளனாய் வந்த மேன்மையை புகழ்ந்ததையே வேதநாயனார் இவ்வாறு கூறி இருக்க வேண்டும்.

அடுத்ததாக, வேதம் ஒரு வருங்கால கணிப்பை சூசகமாக சொல்கிறது. பரமனை கபர்த்தி என்றும் வியுப்தகேசன் என்றும் வர்ணிக்கிறது. அதாவது ஈசன் தலையில் ஜடாமுடி தாங்குகி்றானாம் அதேபோல் மொட்டைத் தலையனாகவும் உள்ளானாம். அவன் ஜடா முடியை போற்றாத அடியார்களே இல்லை. இப்படி சிகை அழகனாக இருக்கும் பகவான் அதை முழுவதும் மழித்து ஆதிசங்கரராக அவதாரம் எடுக்கப் போகின்றான் என்ற ஒரு கணிப்பை, மேலே சொன்ன வாக்கியம் மூலம், வேதமே முன் வைக்கிறது.

இப்போது இறைவனை கிழவன் என்று சாடுகிறது வேதம். அவன் கிழவன் தானே. மாலவனுக்கும் நான்முகனுக்கும் முன்னவன். பிரளயத்தில் அவர்களும் இவனுள் அடங்குவர். ஆகவே இவன் பழம் பெரும் கிழவன். மேலும் இவன் பார்வதி அம்மையாரை மணக்கும் முன் ஒரு முதியவர் வேடத்தில் வந்து அவளின் தவத்தை சோதித்தான், அல்லவா? ஆகவே வேதம் இவனை கிழவன் என்று சொல்கிறது.

அடுத்ததாக வேத நாயனார் இவனை ஒரு உழவன் ரூபத்தில் நம ஊர்வ்யாயச என்று தரிசிக்கிறார். இதுவும் பொருத்தம் தான். திருநெல்வேலியில் தன் அடியவரின் நெற்குவியலை வேலி இட்டு காத்தான் அல்லவா? அதனால்தானே அவ்வூருக்கு திருநெல்வேலி என்று நாமம் வந்தது. பெரிய புராணம், திருகாஞ்சிவாய்பேரூர் என்னும் திருத்தலத்தில் ஈசனை, சுந்தரர் உழவர் ரூபத்தில் தரிசித்தார் என்று கூறும். ‘‘பறையனும் முன்னரான நீ இன்று பள்ளனானமை தெரிந்தேன் யான்’’ என்று தாம் தரிசித்ததை நாம் அறியும் வண்ணம் பதிகத்தில் பதிவிடுகின்றார் சுந்தரர்.

அடுத்து, வேத நாயனாருக்கு ஓடும் நீரிலும் தேங்கி நிற்கும் நீரிலும் ஈசன் தெரிகிறான். சீக்ரியாயச... உண்மைதானே. ஓடும் கங்கையால் தாங்கப்பட்டு, தேங்கி நிற்கும் சரவணப் பொய்கையில் ஆறுமுகன் ரூபத்தில் வளர்ந்தவன் இல்லையா? நம் ஈஸ்வரன். ஆகையால் அவனை இப்படி வர்ணிப்பதும் பொருத்தமே. ஸ்ரீ ருத்ரத்தில்தான் பஞ்சாட்சரம் என்கிற நமசிவாய எனும் சிவப் பரம்பொருளின் ஈடிணையற்ற திருநாமம் இடம் பெறுகிறது. விலை உயர்ந்த பொருளை வீட்டின் மத்தியில் பூட்டி வைப்பது போல வேதத்தின் மத்தியிலுள்ள ருத்ர பிரஸ்னத்தில் இது பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

இதன் பெருமையை விளக்க ஒரு வரலாற்றை பார்ப்போம். திருஞானசம்பந்தருக்கு உபநயனம் செய்விக்கும் சமயம் அது. அப்போது, அங்கு வந்த அந்தணர் அனைவரும் வியக்கும் வண்ணம் வேதம் அத்தனையும் ஒப்பித்து, பின் ஒரு பதிகம் பாடுகிறார் சம்பந்தர். ‘‘செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் ஐந்து எழுத்துமே.’’ இதுவே அவர் பாடிய பாடல். அதாவது வேதம் முற்றும் ஓதினாலும் ஐந்து எழுத்து என்கிற நமசிவாய.. எனும் மந்திரத்தை அறியவில்லை என்றால் அந்திம காலத்தில் ஒரு பயனும் இல்லை என்று சொல்கிறார். ருத்ரம் சொல்லி ஈசனை வழிபட முடியவில்லை என்றாலும் ஐந்து எழுத்து தெரிந்தால் அதுவே நம்மை காக்கும் என்பது மகான்கள் அனுபவத்தில் கண்ட உண்மை.

 அடுத்தபடியாக புலஸ்தயே நம: என்று ஈசனை வணங்குகிறது வேதம். அதாவது, முன் நின்று பக்தரை காப்பவன் என்று மெச்சுகிறது. ஸ்கந்த புராணத்தில் ஒரு கதை உண்டு. அதன்படி பீமனுக்கு பார்பரீகன் என்று ஒரு பேரன் உண்டு. கிருஷ்ணரால் அவன் சில காரணங்களுக்காக கொல்லப்படுகிறான். அவனது கடைசி ஆசையை, கிருஷ்ணர் வினவ தனக்கு பாரதப் போரை பார்க்க வேண்டும் என்கிறான். கிருஷ்ணரும் அவனது வெட்டப்பட்ட தலையை அமுதத்தில் முக்கி ஒரு மலையில் கொண்டு போய் வைக்கி்றார்.

அவனும் போரைக் கண்டு களிக்கி்றான். போர் முடிந்ததும் பஞ்ச பாண்டவர்கள் யார் வீரம் பெரிது என்று அவனிடம் கேட்க, அவன், ‘‘யாரும் போர் செய்ததாக தெரியவில்லை. நான் பார்த்த போது நீண்ட சடையோடு , சடையில் பிறையோடு சிவ பெருமானே சண்டையிட்டு வெற்றியை ஈட்டித்தந்தார் என்றான்.’’ இதைக் கேட்டு பாண்டவர்களின் ஆணவம் அழிந்தது. பார்த்தன் செய்த தவத்திற்காக அவன் குலத்தையே முன் நின்று காத்து நிற்கிறான் நீல கண்டன் என்று மனம் உருகினார்கள் பாண்டவர்கள். இந்த சம்பவத்தையே வேதநாயனார் மேல் சொன்ன வாக்கியம் மூலம் கூறி இருக்க வேண்டும்.

ருத்திரன் வேறு இல்லை மாலவன் வேறு இல்லை என்ற தத்துவத்தை காட்ட விஷ்ணுவின் ரூபத்தில் இருக்கும் ஹே பரமேஸ்வரா! என்னை மரணத்தில் இருந்து மீட்க வேண்டும். ஓம் நமோ பகவதே ருத்திராய விஷ்ணவே ம்ருத்யூர் மே பாஹி என்று பிரார்த்தனை செய்கிறார் வேத நாயனார். மேலும் ஈஸ்வரனை பலவாறு புகழ்கிறார் வேதநாயனார். பிறவியை நீக்கும் மருந்து என்றும், இதயக் கமலத்தில் வசிப்பவன் என்றும் பலவாறு வர்ணிக்கிறார். ஆயிரம் நா படைத்த ஆதி சேஷனே அவன் புகழை முழுதும் சொல்லி முடிக்க வில்லை. கேவலம் ஒரு நா படைத்த நம்மால் இயலுமா? இன்னும் எத்தனை திருவிளையாடல்களை ஸ்ரீ ருத்ரம் சொல்கிறதோ அதை அந்த ஈசனே அறிவான். அதை அவன் ஆசிரியனாக வந்து உரைக்க அவனின் தாழ்மலர்களை பணிவோம்.

ஜி.மகேஷ்

Tags : Shiva Rudra ,Sri Rudra ,
× RELATED கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?