×

கறை கண்டனையே சிந்தித்த காரியார் நாயனார்

காரியார் நாயனார் குருபூஜை : 02.03.2019

இறையடியார்களின் பெருமையினைச் சிறப்பித்துக் கூறும் திருத்தொண்டத் தொகையில் குறிக்கப்படும் அடியார் பெருமக்களுள் குறிப்பிடத்தக்க இடத்தினைப் பெறுபவர் காரிநாயனார் என்பவர் ஆவார். இவரைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘காரிக்கும் அடியேன்’ என்று குறிப்பார். காரி என்பதற்கு கருமை நிறம் பொருந்திய நஞ்சு என்பதும் பிறிதோர் பொருளாம். அத்தகைய நஞ்சினை உண்டமையால் சிவபெருமான் காரி என்றும் அழைக்கப்பட்டார். நீர் அகம் பனிக்கும் அஞ்சு வருகடுந்திறல் பேர் இசை நவிரம் மேய்எய் உறையும் காரி உண்டிக் கடவுளது இயற்கையும் என்னும் மலைபடுகடாத்தின் அடிகள் காரி என்பதனை கரிய நஞ்சினை உண்ட கடவுள் என்றே குறிக்கும். சங்க காலத்தில் பெரு வள்ளலாக விளங்கிய நன்னன் வேண்மான் ஆண்ட மலையானது எழிற்குன்றம் என அழைக்கப்பட்டது. இவனால் ஆளப்பெற்ற குன்றின் மீது காரியுண்டிக் கடவுளின் திருக்கோயில் இருந்தது. காரி உண்ட கடவுள் என்னும் வழக்குப் பிற்காலத்து காரி கண்ட ஈசுவரன் என்பதாக மருவி கரை கண்டம் என்பதாகி கரைக் கண்டேசுவரராகி அவர் உறையும் ஏழு திருத்தலங்கள் சப்தகரை கண்டம் என்றாயின. இத்தகைய இறைவனின் திருப்பெயரே இந்நாயனாருக்கும் அமைந்தது எனக் கொள்க.

இவர்தம் பெருமையினை திருத்தொண்டத் திருவந்தாதியைப் பாடியருளிய நம்பியாண்டார் நம்பி
புல்லன வாகா வகை யுலகத்துப் புணர்ந்தனவும்
சொல்லின வுந்நய மாக்கிச் சுடர்பொற் குவடுதனி
வுல்லனை வாழ்த்தி விளங்குங் கயிலைபுக் கானென்பாரல்
கல்லின மாமதில் சூழ் கடவூரினில் காரிகையே

என விரித்துரைப்பார். இத்தகைய சிறப்பினை உடையகாரியார் திருக்கடவூரில் அவதாரம் செய்தவர் ஆவார், இத் திருக்கடவூர் சிவபெருமானின் அட்ட வீரத் தலங்களுள்; குறிப்பிடத்தக்கதாகும். சிவபெருமான் நிகழ்த்திய அட்ட வீரச் செயல்களை,

அயன் தலை அறுத்த ஆதி போற்றி
ஆந்தகற் செற்ற அரசே போற்றி
திரிபுரம் எறித்த சேவக போற்றி
தக்கன் வேள்வி தகர்த்தாய் போற்றி
சலந்தரன் வலந்தனைச் சாயத்தனை போற்றி
களிறு பிளிறக் கண்டனை போற்றி
காமனை எரித்த கண்ணுதல் போற்றி
காலனை உதைத்த கடவுள் போற்றி

எனச் சிவபராக்ரம போற்றி அகவல் குறிப்பிடுகிறது. இத்திருக்கடவூர், மறையவர்கள் வாழும் சிறப்பினை உடையது எனக் குறிப்பிடுவார் சேக்கிழார் பெருமான். இதனை,

மறையாளர் திருக்கடவூர் வந்து தித்தவண் தமிழின்
துறையான பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக்குறையாத தமிழ்க் கோவைதம் பெயரால் குலவும் வகை முறையாலே தொகுத் தமைத்து மூவேந்தர் பால் பயில்வார் என்பதனால் அறியலாம். இதன் வழி காரி நாயனார் தமிழின் துறைகளை முறையாகத் தெரிந்தவர் என்பது பெறப்படும். தமிழ்க் கவிதையின் சிறப்பியல்புகளுள் ஒன்று அது துறையமையப் பாடப்படுவதாகும். இதனைக் கம்பரும் கோதாவரியை வருணிக்கும் இடத்து விளக்கியுரைப்பார், அத்தகைய பாடல்,
புவியினுக்கு அணியாய் ஆன்ற பொருள் தந்தது புலத்திற்றாகி அவியகத் துறைகள் தாங்கிஐந் திணை நெறி அளவி கவியுறத் தெளிந்து தண்னெண் ஒழுக்கமும் சார்ந்துசான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்

என்பதாகும். தமிழின் கண் கம்பர் குறிப்பது போல் பல்வேறு துறைகள் அமைந்திருந்தாலும் அவை அகம், புறம் என்னும் இரண்டனுள் அடங்கும். அவற்றுள் கோவை இலக்கியம் என்பது தமிழில் காணப்படும் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். இது அகப்பொருள் என்னும் காதற் பொருள் அமைந்த நானூறு பாடல்களால் பாடப் பெறும். பல்வேறு பிறவிகளில் தலைவன் தலைவியாய் வாழ்ந்தவர்கள் இப்பிறப்பில் வேறு வேறு இடத்துப் பிறந்தனர் ஆயினும் அவ் இருவரையும் ஒன்று கூட்டும் நல் ஊழின் காரணமாக சந்தித்து அன்பினால் கூடி வாழும் இயல்பினைக் குறிப்பிடுவது இம்மரபு ஆகும். இத்தகைய அகப்பொருள் மரபு களவு, கற்பு என்னும் இரு திறப்படும். இதனை உரைப்பதே கோவை என்னும் இலக்கிய வகை ஆகும். இதனை

முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்புவரைவுடைத்தாகி
நலனுறு கலித்துறை நானூறாக ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி விளங்க
கூறுவதகப் பொருட் கோவையாகும்

என இலக்கண விளக்கம் வரையறை தரும். ‘பாவை பாடிய வாயால் கோவை பாடுக!’ என இறைவன் வேண்ட மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையாரை இங்கு நினைவு கூர்க.இத்தகைய சிறப்பினை உடைய அகப்பொருட் கோவையினைப் பாடுவதில் காரி நாயனார் புகழ் பெற்று விளங்கினார் என்பதனை ‘வண் தமிழின் துறையான பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் குறையாத தமிழ்க் கோவை தம் பெயரால் குலவும் வகை முறையாலே தொகுத் தமைத்து என்று சேக்கிழார் குறிப்பதனால் அறியலாம். காரியார் பாடிய கோவை அவர்தம் பெயராலே அமைந்த காரிக் கோவை என்று அழைக்கப் பெற்றது என்பது குறிப்பால் தெரிய வரும். ஆனால் அந்நூல் தற்போது கிடைக்கவில்லை.  மேலும் தமிழகத்தினை ஆண்ட சேர, சோழ, பாண்டியர் என்னும் மூவேந்தர்களைக் கண்டு அவர்கள் மகிழும் வகையில் பாடிப்பொருள் பெற்றார். அவ்வாறு பெற்ற பொருளினைத் தன் சுய நலத்திற்குப் பயன்படுத்தாமல் சிவபெருமான் உறையும் கோயில் பல கட்டினார். இதனை,

ஆங்கவர் மகிழும் வகை அடுத்தவுரை நயமாக்கிக்

கொங்கலர்தார் மன்னவர் பால் பெற்ற நிதிக் குவைகொண்டு வெங்கண் அராவொடு கிடந்து விளங்கும் இளம் பிறைச்சென்னிச்சங்கரனார் இனிதமரும் தானங்கள் பலசமைத்தார்.

என்ற சேக்கிழாரின் திருவாக்கால் அறியலாம். சிவபெருமான் உறையும் கோயில்கள் அமைத்ததுடன் சிவனடியார்கள் விரும்பும் வண்ணம் அவர்கட்கும் நிதிஅளித்து இறைவன் உறையும் திருக்கயிலையினை மறவாத சிந்தை உடையவராய் வாழ்ந்து வந்தார்.
யாவர்க்கும் மனமுவக்கும் இன்பமொழிப் பயனியம்பித்
தேவர்க்கு முதல் தேவர் சீரடியார் எல்லார்க்கும்
மேவுற்ற இருநிதியம் மிக அளித்து விடையவர்தம்
காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினராய்

என்ற பாடல் இவ் அடியாரின் பெருமையினை விளக்கி நிற்கும். இப்பெருமையானது உலகம் முழுமையும் பரவலாயிற்று. இத்தகு புகழுடன் கங்கை அணிந்த சிவன் பால் இடை விடாத அன்பு கொண்டிருந்த காரி நாயனார் சிவபெருமானை மனத்தால் சேர்ந்திருந்தது போல் உடலாலும் கயிலாய மலைச் சேர்ந்தார், இதனைச் சேக்கிழார்,

ஏய்ந்த கடல்சூழ் உலகில் எங்கும்தம் இசைநிறுவி
ஆய்ந்த வுணர்வு இடையறா அன்பினராய் அணி கங்கை
தோய்ந்த நெடுஞ் சடையார்தம் அருள் பெற்ற தொடர்பினால்
வோய்ந்த மனம் போல் உடம்பும் வடகயிலை மலை சேர்ந்தார்

எனக் குறிப்பார். தன் பக்தியின் சிறப்பால் கறை கண்டனையே சிந்தித்து இறைவனின் கழலடி சேர்ந்த காரியாரின் குருபூஜை வருகின்ற மாசி மாதம் 18 ஆம் தேதி ( 02. 03. 2019) பூராடம் நட்சத்திரத்தில் வருகின்றது. அந்நாளில் திருக்கடவூர் காரியாரை வணங்கி அவரின் அருளையும் இறைவனின் திருவருளையும் பெற்று நலம் பெறுவோமாக!                   

முனைவர் மா. சிதம்பரம்

Tags : Kariyar Nair ,
× RELATED சிதம்பர ரகசியம் என்றால் என்ன?