×

திருவலம் பொன்னையாறு இரும்பு பாலத்தில் பள்ளங்கள் சீரமைப்பு-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

திருவலம் : காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சி பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 85 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ‘ராஜேந்திரா இரும்பு பாலம்’ இந்திய வரலாற்றில் நினைவு சின்னமாக உள்ளது. இப்பாலம் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுபாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலத்தின் உள்ள சாலையில் 12 பாலங்களுக்கு இடையேயான 11 இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதிலிருந்த கான்கிரீட் சிமென்ட், ஜல்லி கலவைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து ஆபத்தான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த மார்ச் 14ம் தேதி படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உள்ள சாலையின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்டிருந்த விரிசல்களுக்கு தார்கலவை பூசி தற்காலிக சீரமைப்பு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென மார்ச் 24ம் தேதி மீண்டும் தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் நிரந்தரமாக பாலத்தின் சாலையில் ஏற்பட்டிருந்த விரிசல்களை சீரமைக்கும் பணிகளுக்காக தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சீரமைக்கும் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டு அனைத்து வாகனங்களும் திருவலம் பேரூராட்சிக்குட்பட்ட பொன்னை கூட்ரோடு பகுதியில் உள்ள பொன்னையாற்று புறவழிச்சாலை பாலத்தின் வழியாக போக்குவரத்திற்கு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். அப்போது பாலத்தின் சாலையில் இருந்த 36 சிறுவிரிசல்களுக்கும் தார்பூசி சீரமைக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 11ம் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பாலத்தின் சாலைகளில் ஏற்பட்டிருந்த சிறுவிரிசல்களுக்கு போடப்பட்டிருந்த ஜல்லி, தார்கலவை பூச்சு சில இடங்களில் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 23ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. அதன்பேரில் நெடுஞ்சாலைதுறையின் காட்பாடி உதவி கோட்டப்பொறியாளர் சுகந்தியின் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களுக்கு தார்கலவை பூசி சீரமைத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தின் இரு பக்கநுழைவு வாயிலில் கனரக வாகனங்கள் பாலத்தில் செல்லாதபடி கட்டுப்பாடு இரும்பு கம்பங்களை அமைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருவலம் பொன்னையாறு இரும்பு பாலத்தில் பள்ளங்கள் சீரமைப்பு-வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Tiruvalam Ponnaiyar ,Iron Bridge ,Tiruvalam ,British ,Ponnaiyar ,Katpadi taluk ,Tiruvalam Municipality ,Dinakaran ,
× RELATED ஊராட்சி செயலாளர், மனைவி மீது சொத்து...