×

குச்சனூர்-சங்கராபுரம் சாலையில் விவசாயத்திற்கு குழாய் பதிக்க பள்ளம் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அல்லல்-மாற்று பாதை அமைக்க கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி உள்ளது. இங்கிருந்து சங்கராபுரம் வழியாக 6 கிலோமீட்டர் வரையில் இணைப்புச் சாலை வழியாக தென்னை, காய்கறிகள் உள்ளிட்ட சாகுபடிகள் நடந்து வருகிறது. இந்தச் சாலை வழியாக குச்சனூரிலிருந்து சின்னமனூர் மார்க்கையன் கோட்டை சுற்றாமல் தேவாரம் ,போடி, உத்தமபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்று வரலாம்.மேற்படி ஊர்களிலிருந்து குச்சனூர் வழியாக சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில், சீலையம்பட்டி, கோட்டூர், தேனி, சின்னமனூர், ஓடைப்பட்டி, வருசநாடு, கடமலை மயிலை என பல்வேறு பகுதிகளுக்கும் செல்லலாம். இதனால் இந்த இணைப்புச்சாலை முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது. திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுகிய இரு பாலங்களை பொக்லைன் இயந்திரம் மூலமாக இடித்து அகற்றினர். அதன் அருகில் மாற்றுப்பாதை அமைக்காமல் முற்றிலும் குறுக்கே மண் அள்ளி போட்டு சாலையை மறைத்து விட்டனர்.முன்னறவிப்பின்றி செய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டனர். புதுபாலம் கட்டும் போது அருகில் உரிய மாற்று பாதை அமைக்க வேண்டும் என்ற விதியை மீறி செயல்பட்டனர். அதன்பின் மக்களின் எதிர்ப்பால் அந்த ஒப்பந்ததாரரும், நெடுஞ்சாலைத்துறையினரும் உடனடியாக மாற்று பாதை அமைத்தனர். அதனால், கடந்த சில நாட்களாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் மக்கள் சென்று வந்தனர்.இந்நிலையில், நேற்று மறுபடியும் பாலம் கட்டும் இடத்தில் தனிப்பட்ட சிலர் முல்லைப் பெரியாற்றில் இருந்து பாசன நீர் விவசாயத்திற்கு கிடைக்கும் வகையில் பூமியில் பள்ளம் தோண்டி குழாய் அமைத்தனர். இதனால், நேற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்துடன் திரும்பிச் சென்றனர். எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பாலப்பணிக்கா மாற்று பாதை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது….

The post குச்சனூர்-சங்கராபுரம் சாலையில் விவசாயத்திற்கு குழாய் பதிக்க பள்ளம் போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அல்லல்-மாற்று பாதை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuchanur-Sangarapuram ,Chinnamanur ,Kuchanur ,Shankarapuram ,Kuchanur-Sangarapuram Road ,Dinakaran ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்