×

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கண்ணப்பர் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகல தொடக்கம்

ஸ்ரீகாளஹஸ்தி:  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கண்ணப்பர் கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூத தலங்களில் வாயுலிங்க  ஷேத்திரம் என்று  பெயர் பெற்ற ஸ்ரீகாளஹஸ்தியில் மூன்று ஜீவன்களுக்கு (சிலந்தி, பாம்பு,  யானை) முக்தி அளித்தது சிறப்பாகும். மேலும் எங்கும் இல்லாத விதத்தில் இந்த ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி சிவனின் தீவிர பக்தரான கண்ணப்பருக்கு கொடியேற்றிய பின்னரே சிவன் கோயிலில் கொடியேற்றும் நடைமுறை இருந்து வருகிறது.

அதன்படி, இந்தாண்டும் மகா சிவராத்திரி பிரமோற்சவத்தையொட்டி கண்ணபர் மலைமீது உள்ள கண்ணப்பர் கோயிலில் நேற்று மாலை கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் கண்ணப்பர்  உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக மலை மீது கொண்டு சென்றனர். தொடர்ந்து அங்கு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க கண்ணப்பர் கொடியேற்றம் நடந்தது.

இதையடுத்து இன்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி ராமசாமி, துணை நிர்வாக அதிகாரி கிருஷ்ணா ரெட்டி, கோயில் வேத பண்டிதர்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கண்ணப்பர் உற்சவ மூர்த்தி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

Tags : Srikalahasti Shiva Temple ,Koppal Kovalam ,
× RELATED ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம்