×

ராமேஸ்வரம் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரம் கோயிலில் மகாசிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 4ல் சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கோயில் நடை திறக்கப்படுகிறது. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜை, மேல் சுவாமி, அம்பாள் சன்னதியில் காலபூஜைகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு ராமநாத சுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சர்வ அலங்காரத்தில் நந்திகேஸ்வரர் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து தங்க கொடிமரத்திற்கு தர்ப்பைப்புல் சாத்தப்பட்டு, விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டு, மாசி சிவராத்திரி  12 நாள் திருவிழா துவங்கியது. பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை செய்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் இணை கமிஷனர் மங்கையர்க்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், உதவி கமிஷனர் குமரேசன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவராத்திரி முதல் நாள் விழாவை முன்னிட்டு நேற்றிரவு 8 மணிக்கு ராமநாத சுவாமி தங்க நந்திகேசுவரர் வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா வந்தனர். விழாவின் முக்கிய நாளான மார்ச் 4ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு அன்று இரவு முழுவதும் கோயில் நடை திறந்து விடிய விடிய சுவாமி, அம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். மார்ச் 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி அமாவாசையை முன்னிட்டு அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரி உற்சவமும் நடைபெறுகிறது.

Tags : Maha Sivarathri Festival ,Rameswaram ,
× RELATED பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம்...