×

ஆனந்தனுக்கு 1000 நாமங்கள்

124. ஸர்வகாய நமஹ (Sarvagaaya namaha)

அழ்வார்களுள் தலைவராகக் கொண்டாடப் படுபவர் நம்மாழ்வார். நம்மாழ்வாரை உயிராகவும், மற்ற ஆழ்வார்களை அவரது உடல் உறுப்புகளாகவும் சொல்வது வழக்கம். அதைக் கீழ்க்கண்ட அட்டவணையில் காண்போம்.

 நம்மாழ்வாரின் உறுப்பு    ஆழ்வார்       
தலை பூதத்தாழ்வார்       
இரு கண்கள் பொய்கையாழ்வார், பேயாழ்வார்       
முகம் பெரியாழ்வார்       
கழுத்து திருமழிசையாழ்வார்       
இரு கைகள் குலசேகராழ்வார்,
திருப்பாணாழ்வார்       
மார்பு தொண்டரடிப்பொடியாழ்வார்       
வயிறு திருமங்கையாழ்வார்       
   திருவடிகள் மதுரகவியாழ்வார்     

    இத்தகைய பெருமை பெற்ற நம்மாழ்வார் நான்கு நூல்கள் தமிழில் இயற்றினார். அவை திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி. இவை ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களுக்குச் சமமானவையாகப் போற்றப்படுகின்றன. அவற்றுள் பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வாருக்கும் திருமாலுக்கும் அற்புதமான விவாதம் ஒன்று நடந்தது.

ஆழ்வார் : எம்பெருமானே!
நீ பெரியவனா? அடியேன் பெரியவனா?
திருமால் : இதென்ன கேள்வி? நான்தான் பெரியவன் என்று உமக்குத் தெரியாதா?
ஆழ்வார் : இல்லை! நீ பதில் சொல்! நம்மில் யார் பெரியவர்?
திருமால் : அதான் சொன்னேனே! நான் தான் பெரியவன்!
ஆழ்வார் : எதை வைத்து அவ்வாறு கூறுகிறாய்?
திருமால் : இவ்வுலகம் அனைத்தையும் நான் தானே ஆதாரமாக உள்ளே அமர்ந்துகொண்டு தாங்குகிறேன்! நான் தான் பெரியவன்!
ஆழ்வார் : அனைத்தையும் நீதான்
தாங்குகிறாய் என்பதற்கு என்ன ஆதாரம்?
திருமால் : சாந்தோக்ய உபநிஷத் “ஸ ஸேது: வித்ருதி: ஏஷாம் லோகானாம் அஸம்பேதாய” என்று சொல்கிறதே. பிருகதாரண்யக உபநிஷத் “ஏதஸ்ய வா அக்ஷரஸ்ய ப்ரசாஸனே கார்கீ ஸூர்யாசந்த்ரமஸௌ வித்ருதௌ திஷ்டத:” என்கிறதே. இந்த வேத வாக்கியங்கள் பூமி, வானம், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், தேவலோகம் என அனைத்தையும் அதிலுள்ள உயிர்களையும் நானே தாங்குகிறேன் எனத் தெளிவாகக் காட்டுகின்றனவே! அதனால் தான் சொல்கிறேன் நான் தான் பெரியவன்!
ஆழ்வார் : இப்போது நான் சொல்வதைக் கவனமாகக் கேள். அனைத்துலகையும் உள்ளிருந்து தாங்குவதால் நீ பெரியவன் என்கிறாய். ஆனால் உன்னையே என் உள்ளத்தில் நான் தாங்கிக் கொண்டிருக்கிறேனே! இப்போது சொல் நீ பெரியவனா? அடியேன் பெரியவனா?
திருமால் : ஆழ்வீர்! நீர் தான் பெரியவர்!
ஆழ்வார் : இல்லை! அடியேன் உன்னை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறேன் என்றால் அதுவும் உன்னுடைய அருளால் தானே? உன்னைத் தாங்கக் கூடிய சக்தியையும் நீ தானே அடியேனுக்கு அருளியிருக்கிறாய்? உன்னைத் தாங்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கும் அடியேனையும் நீ தானே தாங்கிக் கொண்டிருக்கிறாய். அதனால் நீ தான் பெரியவன்.
இவ்வுரையாடலை வெண்பா வடிவில் ஆழ்வார் பெரிய திருவந்தாதியில் பாடுகிறார்:

“புவியும் இருவிசும்பும் நின்னகத்த நீ என்
செவிவழி உள்புகுந்து என்னுள்ளாய்  அவிவின்றி
யான் பெரியன் நீ பெரியை என்பதனை ஆர் அறிவார்
ஊன்பருகு நேமியாய் உள்ளு.”

இவ்வாறு நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம், உயிர்கள் என அனைத்தினுள்ளும் நுழைந்து அவற்றுக்கு ஆதாரமாக இருந்து அனைத்தையும் தாங்கி வரும் திருமால் ‘ஸர்வக:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஸர்வக:’ என்றால் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 124-வது திருநாமம். “ஸர்வகாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எந்தச் சுமையும் ஏற்படாதபடித் திருமால் காத்தருள்வார்.

125.ஸர்வவிதே நமஹ(sarvavidhe namaha)

குருக்ஷேத்ரப் போர் நிறைவடைந்தபின்னர், போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்கான ஈமச் சடங்குகளைத் தருமபுத்திரரைக் கொண்டு செய்வித்து, அதன் பின் தருமபுத்திரருக்குப் பட்டாபிஷேகமும் செய்வித்துவிட்டுத், தன் தலைநகரான துவாரகையை நோக்கிக் கண்ணன் தன் தேரில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் உதங்கர் என்ற முனிவர் கண்ணனைச் சந்தித்தார். “கண்ணா! நலமாக இருக்கிறாயா? உன் பங்காளிகளான பாண்டவர்களும் கௌரவர்களும் நலமா?” என்று கேட்டார். “உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று சிரித்த கண்ணன், “குருக்ஷேத்ரத்தில் பெரும் போர் நடந்தது.

அந்தப் போரில் பாண்டவர் கௌரவர் இருவர் அணிகளிலும் பெருத்த சேதம் ஏற்பட்டுவிட்டது. இப்போது பாண்டவர்களின் அணியில், பஞ்ச பாண்டவர்களும், அர்ஜுனனின் மருமகளான உத்தரையின் கருவில் வளரும் குழந்தையும் மட்டுமே மிஞ்சியுள்ளார்கள். கௌரவர்களின் அணியில் கிருபாசாரியாரும் அச்வத்தாமாவுமே மிஞ்சியுள்ளார்கள்!” என்றான். “கிருஷ்ணா! நீ தவறு செய்து விட்டாய்! நீ இந்த யுத்தத்தைத் தடுத்திருக்க வேண்டும். பாண்டவர்கள் உனக்கு அத்தை மகன்கள். துரியோதனனோ உனக்குச் சம்பந்தி. உனது உறவினர்கள் போரிட்டுக் கொள்வதை நீ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது மாபெரும் தவறு.

உனக்கு என்ன சாபம் கொடுத்தாலும் தகும்!” என்றார் உதங்கர். “எனக்குச் சாபம் கொடுத்து உங்கள் தவ வலிமையை நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள். நான் வேண்டுமானால் உங்களுக்கு வரம் தருகிறேன்!” என்று கூறிய கண்ணன் தனது விஸ்வரூபத்தை அவருக்குக் காட்டினான். விஸ்வரூபத்தைத் தரிசித்துப் பரவசம் அடைந்த உதங்கர், “கண்ணா! எனக்குத் தாகம் ஏற்படும் போதெல்லாம் உடனே தண்ணீர் கிடைக்கும் என வரம் கொடு!” என்று பிரார்த்தித்தார். “அப்படியே ஆகட்டும்!” என்று சொல்லிவிட்டுக் கண்ணன் புறப்பட்டான். “மகாபாரதப் போரை நீ ஏன் தடுக்கவில்லை? அதற்குப் பதில் கூறு!” என்று கேட்டார் உதங்கர். “அது போகப் போக உங்களுக்கே புரியும்!” என்று சொல்லி விட்டுக் கண்ணன் துவாரகைக்குச் சென்றான்.

அங்கிருந்து புறப்பட்ட உதங்கர், பாலைவன மார்க்கமாகப்  பயணித்தார். தாகம் ஏற்பட்டது. “கிருஷ்ணா! தாகமாக இருக்கிறது! தண்ணீர் கொடு!” என உரக்கப் பிரார்த்தித்தார். அப்போது ஐந்து நாய்களுடன் அங்கே வந்த ஒரு வேடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வந்து அவருக்கு அளித்தான். “என்னருகே வராதே! நகர்ந்து செல்!” என்றார் உதங்கர். “நீங்கள் தானே தண்ணீர் வேண்டுமென்று கேட்டீர்கள். அதனால் தான் கொண்டு வந்தேன்!” என்றான் வேடன். “நான் உன்னிடம் கேட்கவில்லை. கண்ணனிடம் தான் கேட்டேன்!” என்றார் உதங்கர். அந்த வேடன் எவ்வளவோ மன்றாடியும், அவன் தந்த தண்ணீரை வாங்க மறுத்துவிட்டார் உதங்கர்.

அவனும்  திரும்பிச் சென்றான். “ஏ கிருஷ்ணா! நீ ஒரு பொய்யன் என்பதை நிரூபித்துவிட்டாய்! எனக்கு நீ அளித்த வரம் என்னவாயிற்று?” என அலறினார் உதங்கர். அப்போது அவர்முன் கண்ணன் தோன்றினான். “இந்திரன் அமுதத்தை எடுத்துக் கொண்டு உங்களிடம் வந்தானே. நீங்கள் தானே வேண்டாம் என்று அவனை விரட்டினீர்கள்?” என்று கேட்டான் கண்ணன். வேடன் வடிவில் வந்தவன் இந்திரன் என அப்போது உணர்ந்தார் உதங்கர்.

“கிருஷ்ணா! இந்திரனே அமுதத்தோடு என்னிடம் வந்தாலும், உன் அருள் இல்லாவிட்டால் எனக்கு அது கிட்டாது எனப் புரிந்து கொண்டேன். ஏனெனில் உன் சித்தப்படி தானே அனைத்தும் நடக்கும். கிருஷ்ணா! மகாபாரதப் போரை நீ ஏன் நிறுத்தவில்லை என்பதும் இப்போது எனக்குப் புரிந்து விட்டது. பூமி பாரத்தைப் போக்க வேண்டுமென முடிவெடுத்து நீ அவதாரம் செய்தாய். அந்தப் பணிக்குப் பாண்டவர்களை உனது கருவியாக நீ பயன்படுத்திக் கொண்டாய். மகாபாரதப் போரை முன்னின்று நடத்திப் பூமியின் பாரத்தைக் குறைத்து விட்டாய். உனது செயலைத் தவறு என்று கூறிய எனக்குச் சரியான பாடமும் புகட்டி விட்டாய்! நீ நினைத்ததை முடிப்பவன் என இப்போது புரிந்து கொண்டேன்,” என்று கூறினார் உதங்கர்.

உதங்கர் கூறியவாறு தான் நினைத்ததை நினைத்தபடி முடிப்பவராகத் திருமால் திகழ்வதால் ‘ஸர்வவித்’ என்றழைக்கப்படுகிறார். ‘வித்’ என்றால் சாதிப்பவர் என்று பொருள். ‘ஸர்வவித்’ என்றால் அனைத்தையும் சாதிப்பவர் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 125-வது திருநாமம். “ஸர்வவிதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் நினைக்கும் நல்ல காரியங்கள் அனைத்தும் இனிதே நிறைவடையும்படித் திருமால் அருள்புரிவார்.

126. பானவே நமஹ (Bhaanavey namaha)

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஏன் வெள்ளை மீசையோடு காட்சி தருகிறார்? சோணிதபுரத்தை ஆண்ட பாணாசுரனின் மகள் உஷா. பாணாசுரனின் அரண்மனைக்கு விருந்தாளிகளாகப் பரமசிவனும் பார்வதியும் வந்தார்கள். அப்போது பார்வதி உஷாவிடம், “நாளை விடியற்காலை உன் கனவில் ஓர் ஆணழகன் தோன்றுவான். நீ அவனையே மணம்புரிந்து கொண்டால் உன் வாழ்க்கை நன்றாக அமையும்!” என ஆசீர்வதித்தாள்.

அவ்வாறே உஷாவின் கனவில் ஆணழகன் ஒருவன் தோன்றினான். காலை எழுந்தவுடன் தன் தோழி சித்ரலேகாவிடம் நடந்தவற்றைக் கூறிய உஷா, “கனவில் வந்த ஆணழகனை எவ்வாறு கண்டுபிடித்து மணம்புரிவது?” என்று கேட்டாள். சித்ரலேகா ஓவியக் கலையில் வல்லவள். “உலக மகா அழகர்களின் படங்களை நான் வரிசையாக வரைகிறேன். அவர்களுள் உன் கனவில் வந்தவன் யார் என நீ சொல்!” என்று கூறிய சித்ரலேகா, ஒவ்வொரு அழகனாக வரையத் தொடங்கினாள்.

முதலில் மன்மத மன்மதனான கண்ணனின் உருவத்தை வரைந்தாள். “இவர் என் கனவில் வந்தவரை விட மிக மிக அழகாக இருக்கிறார். பேசாமல் இவரையே மணந்து கொள்வேன். ஆனால் கனவில் வந்தவரைத் தான் மணக்க வேண்டுமெனப் பார்வதி சொல்லி இருக்கிறாளே. எனவே அடுத்த அழகனின் உருவத்தை வரை! பார்க்கலாம்!” என்றாள். அடுத்தபடியாக, கண்ணனின் மகன் பிரத்யும்னனின் உருவத்தை வரைந்தாள். “என் கனவில் வந்தவர் இவரை விடக் கொஞ்சம் அழகு குறைவு!” என்றாள் உஷா. பிரத்யும்னனின் மகன் அனிருத்தனின் உருவத்தை வரைந்தாள். “இவரே தான் என் கனவில் வந்தவர்!” என்றாள் உஷா.

    துவாரகையில் துயின்றுகொண்டிருந்த அனிருத்தனைக் கட்டிலோடு சோணிதபுரத்துக்குக் கொண்டு வந்தாள் சித்ரலேகா. உஷாவின் அந்தப்புரத்தில் அனிருத்தன், பாணாசுரனுக்குத் தெரியாமலேயே வசித்து வந்தான். ஒருநாள் அனிருத்தனை உஷாவின் அந்தப்புரத்தில் பார்த்த பாணாசுரன் அவனைச் சிறைப்பிடித்தான். இச்செய்தியைக் கேள்வியுற்ற கண்ணன், பெரிய யாதவ சேனையைத் திரட்டி வந்து பாணாசுரனைப் போரில் வீழ்த்தி, உஷாவையும் அனிருத்தனையும் துவாரகைக்கு அழைத்து
வந்து அவர்களுக்குத் திருமணத்தை நடத்தி வைத்தான்.

அந்தத் திருமணத்துக்கு வந்திருந்த சித்ரலேகா, ருக்மிணியைப் பார்த்து, “பார்வதியால் நீங்கள் பிழைத்தீர்கள்!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று கேட்டாள் ருக்மிணி. “உஷாவுக்கு ஆணழகர்களின் படங்களை எல்லாம் வரைந்து காட்டினேன். அப்போது முதலில் உங்கள் கணவரான கண்ணனின் படத்தை வரைந்த போது, அவர் மிகவும் அழகாகவும் இளமையாகவும் இருப்பதாகவும், அவரையே தான் மணக்க விரும்புவதாகவும் உஷா கூறினாள். ஏற்கெனவே உங்கள் கணவருக்குப் பதினாறாயிரத்து எட்டு மனைவிகள். பதினாறாயிரத்து ஒன்பதாவது மனைவியாக இவள் வந்திருப்பாள். ஆனால் கனவில் வந்தவரையே மணக்க வேண்டுமெனப் பார்வதி சொன்னதால் தாத்தாவான கண்ணனை விட்டுப் பேரனான அனிருத்தனை மணக்க உஷா முடிவெடுத்தாள்!” என்றாள் சித்ரலேகா.

“இதென்ன? நம் கணவர் பேரன் பேத்திகளை எல்லாம் பெற்ற பின்பும் இன்னும் மாறாத அழகோடும் இளமையோடும் இருக்கிறாரே! இவரது பேரனை மணக்க வேண்டிய பெண்கள் கூட இவரது அழகில் மயங்குகிறார்களே!” எனச் சிந்தித்த ருக்மிணி, கண்ணனுக்கு வயதாகி விட்டது என்பதை உலகுக்குக் காட்டவேண்டுமெனத் திட்டமிட்டாள். அதனால் கண்ணனின் திருமுகத்தில் வெண்ணெயால் மீசையை வரைந்து விட்டாள்.

அதுதான் திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் முகத்தில் இருக்கும் வெள்ளை மீசை. திருவல்லிக்கேணியில், பார்த்தசாரதிக்கு அருகே அவரது மகன் பிரத்யும்னன், பேரன் அனிருத்தன் ஆகியோர் இருந்தாலும், பார்த்தசாரதிதான் அவர்களை விட இளமையாகத் தெரிகிறார். இவர் மற்றவர்களை விட மூத்தவர் என்பதைக் காட்டவே அந்த வெள்ளை மீசை ஏற்பட்டது.

இவ்வாறு எப்போதும் மாறாத அழகோடும் பொலிவோடும் இளமையோடும் இருக்கும் திருமால் ‘பானு:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 126-வது திருநாமம்.
“பானவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் உடலும் மனமும் எப்போதும் இளமையாக இருக்கும்படித் திருமால் அருள்புரிவார்.

127. விஷ்வக்ஸேநாய நமஹ (Vishwaksenaaya namaha)

 புண்ட்ரம் என்ற தேசத்தைப் பௌண்ட்ரகன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் முகஸ்துதியை விரும்புபவன். அதை அறிந்த அவனது மந்திரிகள் தினமும் அவனைக் குறித்து முகஸ்துதி பாடுவார்கள். “நீ தான் கடவுள், நீ தான் திருமால், நீ தான் வாசுதேவன்!” என்றெல்லாம் அவர்கள் முகஸ்துதி பாட, அதை உண்மையென நம்பிய பௌண்ட்ரகன், ‘பௌண்ட்ரக வாசுதேவன்’ எனத் தன் பெயரை மாற்றிக் கொண்டான். “நான் தான் கடவுள், நானே உண்மையான கிருஷ்ணன்!” என அறிவித்துக் கொண்ட அவன், துவாரகையை ஆட்சி செய்து வந்த உண்மையான கண்ணனுக்குச் சவால் விட்டு ஓலையும் அனுப்பினான். அவனை எதிர்த்துப் போர்புரிய வந்தான் கண்ணன். அப்போது காசிராஜனும் பௌண்ட்ரக வாசுதேவனுக்குத் துணையாகப் போர் புரிய வந்தான்.

இருவரையும் போரில் வதம் செய்தான் கண்ணன். தனது தந்தை கண்ணனால் கொல்லப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற காசிராஜனின் மகனான சுதக்ஷிணன், கண்ணனைப் பழி வாங்கத் திட்டமிட்டான். தாந்திரிக முறையில் பெரும் வேள்வி செய்தான். அந்த வேள்வித் தீயில் இருந்து ஒரு பெரிய பிசாசை உண்டாக்கி, துவாரகை நகரத்தையே எரித்துச் சாம்பலாக்கும்படி அதற்குக் கட்டளையிட்டான்.

தீயை உமிழ்ந்தபடி துவாரகையை நோக்கி அந்தப் பிசாசு புறப்பட்டுச் சென்றது. திடீரென வெப்பம் அதிகரிப்பதைப் போல உணர்ந்த துவாரகை மக்கள் அஞ்சினார்கள். பெரும் தீப்பிழம்பு நகரத்தை நோக்கி வெகு தூரத்திலிருந்து வருவதைக் கண்டு திடுக்கிட்டார்கள். கண்ணனிடம் இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக அவனது அரண்
மனையை நோக்கி எல்லோரும் ஓடினார்கள்.

அப்போது கண்ணன் ருக்மிணியோடு சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தான். குடிமக்கள் அனைவரும் கண்ணனிடம் ஓடி வந்து, “பெரும் தீப்பிழம்பு ஒன்று நெருப்பைக் கக்கிக் கொண்டு நம் நகரை நோக்கி ஓடி வருகிறது. தாங்கள் தான் காத்தருள வேண்டும்!” எனப் பிரார்த்தித்தார்கள். கண்ணன் ஒரு மெல்லிய புன்னகையோடு தனது வலக் கரத்திலுள்ள சக்கராயுதத்தைப் பார்த்தான். கண்ணனது கட்டளையைப் புரிந்து கொண்டு, அவனது கையிலிருந்து உடனே சக்கரத்தாழ்வார் புறப்பட்டார். சுதக்ஷிணன் அனுப்பிய பிசாசைச் சென்று தாக்கினார். (பிசாசுகளின் இயல்பு யாதெனில், அவைகளை விட பலம் குறைந்த எதிரிகளின் மேல் அவற்றை ஏவினால் அவ்வெதிரிகளை அழித்துவிடும்.

ஆனால் அவைகளை விட வலிமையான எதிரியின் மேல் ஏவினால், எதிரியை அழிக்காமல் ஏவியவரையே வந்து தாக்கிவிடும்.) சக்கரத்தாழ்வாரின் பொலிவையும் ஒளியையும் கண்டு அஞ்சிய அந்தப் பிசாசு, காசிக்குத் திரும்பி வந்து தன்னை ஏவிய சுதக்ஷிணனையே தாக்கி அழித்து விட்டது. ஆனாலும் சக்கரத்தாழ்வார் அத்தோடு விடவில்லை. தானும் அந்தப் பிசாசைப் பின்தொடர்ந்து சென்று காசி நகரத்தையே ஒட்டுமொத்தமாக எரித்தார். அவ்வாறு சக்கரத்தாழ்வார் காசி நகரை எரித்தமைக்கு வேதாந்த தேசிகன் யாதவாப்யுதயத்தில் அழகான ஒரு காரணம் கூறுகிறார். அது யாதெனில், காசி சிவபெருமானின் க்ஷேத்திரமல்லவா? சிவபெருமான் சாம்பலைத் தானே விரும்பித் தன் உடலில் திருநீறாகப் பூசிக் கொள்கிறார்? “மந்திரமாவது நீறு” என நோய்தீர்க்கும் மருந்தாகவும் அந்தப் புனிதத் திருநீறு போற்றப்படுகிறதே! காசியில் வசிக்கும் சிவனும் அவரது பக்தர்களும் திருநீறு பூசிக்கொள்ள வசதியாக இருக்கட்டுமே என்று அவ்வூரையே சாம்பலாக்கி அவர்களுக்குச் சக்கரத்தாழ்வார் பரிசளித்து விட்டாராம்!

இந்தச் சரித்திரத்தில், சக்கரத்தாழ்வார் தாமே ஒரு சேனையைப் போலச் செயல்பட்டு, துவாரகைக்கு வந்த ஆபத்திலிருந்து ஊரையும் மக்களையும் காத்தார். இவ்வாறு தன் அடியவர்களை அனைத்துத் திசைகளிலிருந்தும் ஏற்படும் ஆபத்துகளிலிருந்தெல்லாம் காக்கும் விதமாகத் தன் கையில் ஆயுதப்படையோடு விளங்குவதால் திருமால் ‘விஷ்வக்ஸேந:’ என்றழைக்கப்படுகிறார். ‘விஷ்வக்’ என்றால் அனைத்துத் திசைகள் என்று பொருள். ‘ஸேந:’ என்றால் சேனையை உடையவன் என்று பொருள். அனைத்துத் திசைகளிலும் சேனையை உடையவராகத் திருமாலை ‘விஷ்வக்ஸேந:’ என்ற 127-வது திருநாமம் நமக்குக் காட்டுகிறது.    “விஷ்வக்ஸேநாய நம:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் மேற்கொள்ளும் அனைத்துப் பயணங்களிலும் திருமால் வழித்துணையாக வந்து எப்போதும் காத்தருள்வார்.

128. ஜனார்தநாய நமஹ (Janaardhanaaya namaha)

விக்கிரமப் பாண்டியன் மதுரையை ஆட்சி செய்து வந்த காலம். விக்கிரமப் பாண்டியன் வேதநெறியில் மாறாப் பற்றுக் கொண்டவனாக விளங்கியதால், பாண்டிய நாட்டில் வேதம் செழிக்கப் பல நடவடிக்கைகள் எடுத்தான். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலிலும், கள்ளழகர் கோயிலிலும், கூடலழகர் கோயிலிலும் வழிபாடுகள் சரியான முறையில் நடப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தான்.

    அமுதைப் பொழியும் நிலவைப் பார்த்து மக்கள் ஆனந்தப்படுவது போல, விக்கிரமப் பாண்டியனின் தேஜஸ்ஸைப் பார்த்துக் குடிமக்கள் மகிழ்ந்தார்கள். ஆனால் திருடர்களுக்கு நிலவைக் கண்டால் பிடிக்காது; அதற்கு நிலவும் பொறுப்பல்ல. அவ்வாறே பாண்டி நாட்டில் வாழ்ந்த சில போலித் துறவிகளுக்கு விக்கிரமப் பாண்டியனைப் பிடிக்கவில்லை. அவர்கள் விக்கிரமப் பாண்டியனைப் பழிவாங்க என்ன வழி எனச் சிந்தித்தார்கள்.

காஞ்சியை ஆண்டு வந்த பல்லவ மன்னனுக்கும் விக்கிரமப் பாண்டியனுக்கும் தீராத பகையுண்டு. போரில் பாண்டியனை வெல்ல முடியாத பல்லவன், தந்திரம் செய்து அவனை வெல்ல நினைத்தான். அதனால் விக்கிரமன் மேல் அதிருப்தியில் இருக்கும் அந்தப் போலித் துறவிகளைக் காஞ்சிக்கு வரவழைத்தான். பாண்டியனோடு சேர்த்துப் பாண்டிய நாட்டையே அழிக்கும் விதமாக ஒரு யாகம் செய்யச்சொன்னான். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள்.

வேப்பெண்ணெயைத் தீயில் ஊற்றி, எட்டிக் குச்சிகளைப் போட்டுக் குரூரமான ஒரு வேள்வியை அந்தத் துறவிகள் காஞ்சியில் செய்தார்கள். இரும்பு உலக்கையைத் துதிக்கையில் ஏந்திக் கொண்டு ஒரு பெரிய யானை வேள்வித் தீயிலிருந்து வந்தது. “போ! பாண்டிய நாட்டை அழித்து விட்டு வா!” என்றார்கள் அந்தத் துறவிகள். அதுவும் காஞ்சியிலிருந்து மதுரையை நோக்கி விரைந்தோடியது. யானை வருவதைக் கண்டு அஞ்சிய மக்கள் விக்கிரமப் பாண்டியனிடம் வந்து முறையிட்டார்கள். யானை, குதிரை, தேர், காலாட் படைகளைத் தயார் நிலையில் வைத்துவிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு விரைந்த விக்கிரமன், “சிவபெருமானே! நீங்கள் தான் இந்நாட்டைக் காக்க வேண்டும்!” எனப் பிரார்த்தித்தான்.

கருவறையிலிருந்து புறப்பட்டார் சுந்தரேஸ்வரர். மேரு மலையையே வில்லாகப் பிடித்தார். வாசுகி எனும் பாம்பையே அதில் நாணாகக் கட்டினார். அந்த யானையை அழிப்பதற்கேற்ற அம்புக்கு எங்கே போவது என யோசித்த சிவபெருமான், கூடலழகர் கோயிலில் உள்ள திருமாலிடம் வந்து தனக்கு நல்ல அம்பைத் தந்தருளுமாறு கோரினார். “நரசிம்ம வடிவில் நானே வந்து உன் வில்லில் கணையாக அமருகிறேன்!” என்றார் திருமால்.

மதுரையின் வட எல்லைக்குச் சென்ற சிவன், தனது வில்லில் நரசிம்மப் பெருமாளையே அம்பாக்கி, நகரை நெருங்கிக் கொண்டிருந்த யானையின் மேல் எய்தார். அடுத்த நொடியே அந்த யானை அப்படியே உறைந்து மலையாக உருவெடுத்து விட்டது. அம்பாகப் புறப்பட்டுச் சென்ற நரசிம்மர் அந்த யானைமலைக்குள்ளே சென்று அமர்ந்து கொண்டார். இன்றும் மதுரையிலுள்ள ஆனைமலையில் நரசிங்கம் என்ற நரசிம்மர் கோயிலில் சிவனுடைய வில்லிலிருந்து அம்பாக வந்து யானையை அழித்துவிட்டு மலைக்குகையில் அமர்ந்
திருக்கும் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.

இவ்வரலாற்றைத் திருவிளையாடல் புராணத்தின் “யானை எய்த படலத்தில்” பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளார். பாண்டி நாட்டுக்குப் பேராபத்து நேர்ந்த போது, அம்பாக வந்து யானையை அழித்து நாட்டைக் காத்தது போல, அடியவர்களுக்கு எப்போது ஆபத்து நேர்ந்தாலும் உடனே ஓடி வந்து காக்கும் இயல்வோடு திருமால் விளங்குவதால் ‘ஜனார்தன:’ என்றழைக்கப்படுகிறார். ‘ஜனார்தன:’ என்றால் அடியவர்களின் எதிரிகளை அழிப்பவன் என்று பொருள். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 128-வது திருநாமம். “ஜனார்தனாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் வெளி எதிரிகள் மட்டுமின்றி, உள் எதிரிகளான காமம், கோபம், மோகம், அகங்காரம், மமகாரம், பேராசை உள்ளிட்டவற்றையும் திருமால் அழிப்பார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Anandan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!