×

முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு

புழல்: சோழவரம் அருகே ஆங்காடு கிராமம், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சாந்தா (60). இவர், நேற்று காலை தனது வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், சாந்தாவிடம் முகவரி கேட்பது போல், நைசாக  பேச்சு கொடுத்தனர். அப்போது, சாந்தா கழுத்தில் அணிந்து இருந்த 5 சவரன் செயினை ஒரு மர்ம நபர் பறிக்க முயன்றார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டு, ‘‘திருடன்திருடன்’’ என அலறி கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் இருவரும், சாந்தாவை சரமாரியாக தாக்கி, காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு, செயினைப் பறித்துக்கொண்டு, பைக்கில் ஏறி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. புகாரின்பேரில், சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன் பூதூர் பகுதியில், மூதாட்டி ஒருவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து  ஒரு சவரன் கம்மலை மர்ம நபர்கள் பறித்து சென்றது குறிப்பிடத்தக்கது….

The post முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியை தாக்கி 5 சவரன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Shantha ,Bhajanai Koil Street, Angadu village ,Cholavaram ,
× RELATED மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி